பாஸ்டனில் உள்ள நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் நடத்திய நீயா நானா கோபிநாத்தின் விவாத மேடையில் சென்ற வாரம் கலந்து கொண்டேன். வெளிநாட்டில் வாழ்வதால் பெற்றது அதிகமா அல்லது இழந்தது அதிகமா என்ற தலைப்பில் விவாதம். முதலில் தலைப்பை கேட்டவுடன் எனக்குள் இருந்த தத்துவஞானி விழித்துகொண்டார். ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றை பெற முடியும். இதில் பெரிது சிறிது என்று எப்படி பார்க்க முடியும். சூழ்நிலையைப் பொருத்து பெரிது சிறிது என்பது மாறுபடுமே. குளிர் அடிக்கும் ஊரில் வெயில் வந்தால் பெரிது, வெயில் அடிக்கும் ஊரில் குளிர் வந்தால் பெரிது. இப்படி இருக்கும்போது எதைப் பெற்றோம் எதை இழந்தோம் என்று எப்படி முடிவு செய்வது என்று கண்ணா பின்னவென்று பிதற்றிகொண்டிருந்தேன்.
பொதுவாக இது போன்ற மேடையில் பேசுகின்ற விஷயம் என்றால் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடிவிடுவேன். எவ்வளவுதான் அட்டகாசமாக தயார் படுத்தி இருந்தாலும் சில நேரங்களில பேசும் போது நாக்கு மேலன்னதில் ஒட்டிக்கொள்ளும். அதுவும் இது போன்ற விவாத நிகழ்ச்சிகளில் பேச்சு எந்த திசையில் போகும் என்றே தெரியாத போது மேலும் சிரமம். இதையெல்லாம் யோசித்து இந்த விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று நினைத்திருந்தேன். இதை எங்க வீட்டம்மாவிடம் சொன்னதும், என்னங்க இப்படி சொல்றீங்க ? தமிழ் சங்க நிகழ்ச்சி வேற...நீங்க கலந்துக்க வேண்டாமா என்று கேட்டது வேறு மனதை நிரடிகொண்டே இருந்தது. சரி என்ன பெருசா...ஒரு கை பாத்துருவோம் என்று மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச பெயரை கொடுத்தேன். பிறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு...ரங்கூன் என் உயிரை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது என்ற பராசக்தி சிவாஜி வசனம் மனதில் மின்னல் போல் வெட்டி வெட்டி சென்றதால், பாசிடிவாக 'பெற்றது தான் அதிகம்' என்று பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், தமிழ் சங்க வெப்சைட்டில் ரெஜிஸ்டர் செய்யும் போது எந்தப்பக்கம் பேசப் போகிறோம் என்று குறிப்பிட முடியவில்லை. சரி பின்னாடி யாராவாது நம்மை தொடர்பு கொண்டு கேட்பார்கள் என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன். சில நாட்களில் தமிழ் சங்கத்தில் இருந்து ஒரு ஈமெயில் வந்தது. நீங்கள் விவாத மேடையில் கலந்து கொண்டு 'இழந்தது அதிகம்' என்ற பக்கத்தில் பேசப்போகிறீர்கள் என்று அதில் கூறியிருந்தார்கள். என்னடா இது வம்பா போச்சு, நான் இதை செலக்ட் செய்யவில்லையே என்று எனக்குள் சில நாட்கள் புலம்பிகொண்டிருந்தேன். சரி, பெற்றது அதிகம் பக்கம் பேச நிறைய பேர் இருக்காங்க போல இருக்கு, அதான் நம்மள இந்தப் பக்கம் போட்டு இருக்காங்க என்று ஒரு வழியா சமாதானம் ஆகி எதையெல்லாம் இழந்தோம் என்று இழந்தது அதிகம் பக்கம் பேச தயார் ஆக ஆரம்பித்துவிட்டேன். அந்த நேரத்தில், செம்பருத்தி படத்தில் ராதாரவி கூறும், 'நரம்பில்லாத நாக்கு மொதலாளி, எப்படி வேணும்னாலும் பேசும்' என்கிற டயலாக் அடிக்கடி நினைவிற்கு வந்தது. அந்த படம் வந்த புதிதில் என்னடா இது, நாக்குல அவ்ளோ நரம்பு இருக்குனு சொல்றாங்க, இந்த ஆளு நரம்பில்லாத நாக்குன்னு சொல்றாரே என்று நினைத்ததுண்டு. அதன் பின்னர் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்னர், தமிழ் சங்கத்தில் இருந்து இன்னொரு ஈமெயில் வந்தது. அதில் என்ன விஷயம்னா, ஐயா மகாஜனங்களே, உங்களில் நிறைய பேருக்கு நாங்களே எந்த பக்கம் பேசுறீங்கன்னு முடிவெடுத்து அனுப்பி இருந்தோம். இப்ப உங்களுக்கு அந்தப் பக்கம் பேச விருப்பம் இல்லை என்றால் மாற்றிகொள்ளலாம் என்று கூறி இருந்தார்கள். இதைப் பார்த்ததும் அடப் போங்கையா இதுக்கு மேல என்னால கட்சி மாற முடியாது என்று 'இழந்தது அதிகம்' பக்கமே பேசலாம்னு விட்டுட்டேன். அதன் பின் சில நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்ச்சியில் என்ன பேசலாம் என்று மனதில் அசைப் போட்டுகொண்டிருந்தேன். அடுத்த சில நாட்கள், பார்க்கும் சில நண்பர்களுக்கெல்லாம் விஷயம் தெரிந்து (உபயம் தங்கமணி) அவர்களும் நிகழ்ச்சியை பார்க்க வருவதாக கூறி டென்ஷனை அதிகப்படுத்தினார்.
நிகழ்ச்சி நாள். ஒரு சனிக்கிழமை மாலை. நிகழ்ச்சி மாலை மூன்று மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிபதாக இருந்தது. நம்ம ஆளுங்க நடத்துகிற நிகழ்சிகள் எப்பவும் ஒரு அரைமணி நேரம் கழித்து தான் ஆரம்பிப்பார்கள். அதனால் நாங்கள் சரியாக மூன்று மணிக்கு சென்றோம். அரங்கத்திற்கு முன்னாள் ரெண்டு மூணு டேபிள் போட்டு பட்டு புடவையில் இந்திய் பெண்கள் தெரிந்தனர். அதில் ஒருவரிடம் சென்று இந்த மாதிரி நிகழ்ச்சியில் பேசப் போறேன் என்று கூறினேன். அவரும் கையில் இருந்த ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து சரி பார்த்து ஒரு சின்ன சீட்டில் என் பெயர், மற்றும் மனைவி குழந்தைகளின் பெயர் எழுதிக் கொடுத்தார். அதைக் வைத்துகொண்டு என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை. அரங்கத்தின் நுழைவு வாசலில் இருந்த மற்றொரு பெண்ணிடம் கேட்டால், அவர் சலான் வாங்கிடீன்களா என்று கேட்டார். சலான்...சலான்...இதை எங்கேயோ கேட்டு இருக்கேனே...என்று சுஜாதா 'ஸ்ரீரங்கத்து கதைகளில்' சொல்வது போல என் அத்தனை நியுரான்களிலும் தேடினேன். ஆங்...ஞாபகம் வந்துருச்சு...சின்ன வயசிலே தி.நகர் துரைசாமி பிரிட்ஜ் கிட்டே இருக்கிற இந்தியன் பேங்க்லே கேட்டு இருக்கேன். முதன் முதலில் தனியாக பேங்க் போய் பணம் எடுக்கும் போது மிரண்டு போயிருக்கிறேன். யாரையாவது எப்படி என்று கேட்டால், அங்கே போய் சலான் போட்டுட்டு, கௌண்டர்லெ கொடு. அவங்க டோக்கன் கொடுப்பாங்க. அப்புறம் உன்னோட டோக்கன் நம்பர் அந்த டிஸ்ப்ளேலே வரும் போது, உடனே போய் கௌண்டர்லே கொடுத்தா பணம் தருவாங்க. அவங்க முன்னாடியே சரியாய் இருக்கானு எண்ணி பாத்துரு என்று ஸ்டெப் பை ஸ்டெப் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்து இன்னும் குழப்பி விடுவார்கள். ஒரு முறை எனக்கு முன்னால் இருந்த ஒரு பையன், தினமும் வந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு இருந்ததை காஷியர் திட்டிகொண்டிருப்பதை பார்த்து, நம்ம எதாவது தப்பா சலானில் எழுதி இருந்தால் அதற்கும் திட்டுவாரோ என்று பயந்திருக்கிறேன். இப்படி சலான் பற்றி ஒரு பிளாஷ் பேக் பளீரென்று வந்து போகவும், உடனடியாக என்னங்க சலானா...அது எங்கே வாங்கணும் என்று கேட்டேன். பின்னர் அவரே என் கையில் இருந்த பேப்பரை பார்த்து, நீங்க கையிலே வெச்சு இருக்கீங்களே, அது தான் சலான் என்று வயிற்றில் பாலை வார்த்தார். சலானை கொடுத்து டிக்கெட் வாங்கிகொண்டோம். ஏனோ இந்த ப்ராசஸ் கொஞ்சம் காம்ப்ளிகேட்டடாக (பழைய பேங்க் போல) தோன்றியது. அரங்கின் உள்ளே நுழைந்து சீட்டை தேடி அமர்ந்ததுமே, என் பெயரை மைக்கில் அழைத்து மேடைக்கு பின்புறம் வரச்சொன்னார்கள். என்ன இது இவ்வளவு அவசரமாக அழைக்கிறார்கள், கோபிநாத் அதற்குள் வந்துவிட்டாரா என்று அவரச அவசரமாக மேடைக்கு பின்புறம் ஓடினேன். அங்கு கோபிநாத் இல்லை. ஆனால் விவாதத்தில் கலந்துக்கொள்ளும் மற்றவர்கள் நின்று நின்றுகொண்டிருந்தனர். இரண்டு பக்கமும் நாற்காலிகளைப் போட்டு அதில் பங்கேற்ப்பவர்களின் பெயரை எழுதி ஒட்டி வைத்திருந்தனர். ஏனோ என் பெயர் வரிசையில் கடைசியில் இருந்தது. அதில் என்ன அரசியலோ என்று தோன்றியது. சிறிது நேரம் கழிந்து திரையை திறந்ததும் அனைவரும் அமர்ந்து கோபிநாத்தின் வருகைக்காக காத்திருந்தோம். ஒரு பதினைந்து நிமிடத்தில் மேடையின் ஓரத்தில் வந்த கோபிநாத் யாருடனோ பேசிகொண்டிருந்தார். அங்கு அவர் நின்றிருந்த இடம், மேடையில் ஒரு புறம் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். பார்வையாளர்களுக்கு தெரியாது. டிவியில் பார்த்ததை விட கொஞ்சம் பருமன் குறைவாகவே தோற்றம் அளித்தார். கோட் அணியாமல் இருந்தது தான் காரணமா என்று தெரியவில்லை. மைக்கை காதில் மாட்டிக்கொண்டு அவர் பெயரை அறிவபாளர் அறிவிப்பதற்காக காத்து நின்றிருந்தார். சிறிது நேரத்தில் கோபிநாத்தை அறிவிப்பாளர் அழைத்தவுடன் கூட, ஏனோ கோபிநாத் அமைதியாக நின்று கொண்டிருந்தார். என்னடா இவர் கூப்பிட்டதை கவனிக்கவில்லையா என்று தோன்றியது. அப்புறம் தான் அவர் ஒரு என்ட்ரி மியூசிக் போட்டதும் தான் நடந்து வருவார் என்று தெரிந்தது. நம்ம தமிழ் பட ஹீரோ அறிமுக காட்சியில் வரும் மியூசிக் போல ஒரு மியூசிக் போட்ட பின்னர், அவர் மேடையின் நடுவே வந்து நின்று பேச ஆரம்பித்தார். அவர் வந்து நின்றதுமே நம்ம மக்கள் கோபிநாத் கோட் எங்கே, கோட் எங்கே என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். தமிழன் எங்கே போனாலும் இந்த கேள்வியை கேக்காமல் விடமாட்டன், கோட்டை வேட்டுலே வெச்சு இருக்கேன் என்று கொஞ்சம் காமெடியா பேச்சை ஆரம்பித்தார். அவர் என்ன பேசினார், விவாதம் எப்படி சென்றது என்பதை எல்லாம் விளக்கி உங்களை போரடிக்க போவதில்லை. ஆனால் நிகழ்ச்சியை பற்றியும் கோபிநாத்தை பற்றியும் என் கருத்தை மட்டும் கூறுகிறேன். நிகழ்ச்சி நீயா நானா அளவிற்கு சுவாரசியமாக இல்லை. இரண்டு பக்கமும் சேர்த்து ஒரு இருபது பேர் தான் இருப்போம். ஆனால் அவர்கள் பெற்றது என்ன அல்லது இழந்தது என்ன என்று கூறுவதற்கு அனைவருக்கும் ஒரு நிமிடம் கூட அளிக்கவில்லை. ஒரு சிலரை மட்டும் கேட்டு விட்டு பின்னர், வேறு எதாவது விஷயத்திற்கு தாவி விடுகிறார். அதைத்தவிர ,ஏனோ தமிழ் சங்க கமிட்டியில் அவருக்கு இரண்டு நாட்கள் முன்னரே அறிமுகமானவர்களை நிறையை பேசி வைத்தாரோ என்று தோன்றியது. மேலும் இரண்டு பக்கத்திலும் இருப்பவர்களை விவாதிக்க நிறைய இடம் கொடுக்காமல், பல நேரங்களில் அவரே நம்மிடம் ஓவரா ஆர்க்யு பண்ணி, நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற ரீதியில் பேசுகிறார். நீயா நானாவின் வழக்கம் போல தீர்ப்பு எதுவும் கூறாமல், ரெண்டு பக்கத்துக்கும் கொஞ்சம் அறிவுரை கொடுத்து விட்டு, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அதன் பின்னர் அவருடன் போட்டோ எடுக்க மொத்த கூட்டமும் மேடைக்கு வந்து விட்டது. அவரோ அவசரமாக அடுத்த நிகழ்ச்சிக்கு நியூஜெர்சி செல்லவேண்டும் என்று கூறிக்கொன்டிருந்தார். அங்கிருந்த தமிழ் சங்க மெம்பெர் ஒருவரிடம், என்னங்க கொஞ்சம் பார்த்து ஆர்கனைஸ் பண்ணி இருக்க கூடாதா, இப்போ நான் எப்படி பதினைந்து நிமிடத்தில் கிளம்புவது என்று கடிந்து கொண்டார். கோபிநாத்தை அந்த நேரத்தில் பார்க்க கொஞ்சம் பாவமாகவே இருந்தது. இவர்களுக்கு கிடைத்த பெரும் புகழுமே இவர்களை இந்தப் பாடு படுத்துகிறதே என்று மனதில் நினைத்த படி மேடையில் இருந்து நகர்ந்தேன்.
6 comments:
நல்லவேளை.. நானெல்லாம் புகழ் பெறவில்லை! (காதில் புகை!)நீங்கள் என்ன பேசினீர்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம்..
//bandhu said...நல்லவேளை.. நானெல்லாம் புகழ் பெறவில்லை! (காதில் புகை!)நீங்கள் என்ன பேசினீர்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம்..//
அட போங்க பாஸ், அந்த கதையை வேறே ஏன் கேக்குறீங்க. ஒரு மைக்குக்கு நம்ம மோகன் கூட இப்படி அடிச்சிட்டு இருக்க மாட்டாரு. நானும் தாவி தாவி கேக்குறேன், யாரும் மைக்கை குடுக்க மாட்டேங்குறாங்க. அப்படியே நம்ம கையிலே மைக் வந்தாலும், கோபிநாத்தே வேறே பக்கத்துல இருக்குறவங்க யாருகிட்டேயாவது குடுக்க சொல்லிடுறாரு. அதையும் மீறி ஒரு சில பாயிண்டை நம்ம சொன்னா, அதை ஒத்துக்காம நம்ம கிட்டேயே சண்டை பிடுக்கிறார். இதுக்கே கண்ணை கட்டுதே, இன்னும் ஒரிஜினல் நீயா நானா எல்லாம் போனா அவ்வளவு தான்.
ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றை பெற முடியும். //வாய்ப்பு வந்தும் பேசிய விஷயம்பற்றி சொல்லவே இல்லையே ?
மே. குளிர் அடிக்கும் ஊரில் வெயில் வந்தால் பெரிது, வெயில் அடிக்கும் ஊரில் குளிர் வந்தால் பெரிது.
நிகழ்ச்சியில் கல்ந்துகொள்வதே சலிப்பூட்டுகிறதே .!
//கவியாழி கண்ணதாசன் said...
ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றை பெற முடியும். வாய்ப்பு வந்தும் பேசிய விஷயம்பற்றி சொல்லவே இல்லையே ?//
வாங்க கண்ணதாசன் சார். அதை ஒரு தனி பதிவாகவே எழுதலாம். நீங்க கேட்டதுனாலே இங்கேயே எழுதுறேன். ரெண்டு விஷயம் பத்தி பேசினேன்.
முதலாவது - வெளிநாட்டில் இருக்கும்போது அருகில் பக்க பலமாக பெரியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பெரியவர்கள் அருகில் இருந்து அவர்கள் அனுபவத்தில் நமக்கு அட்வைஸ் செய்யும்போது, அது நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ...அட்லீஸ்ட் வேறு ஒரு கோணத்தில் சிந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அது ஒரு பெரிய இழப்பு. நாமே சுயமாக முடிவெடுப்பது நல்லது தான். ஆனால் அனுபவம் பெற்றவர்கள் அருகில் இருந்து அவர்கள் கோணத்தில் கூறுவதை கேட்டு அதன் பின்னர் ஒரு செயலை செய்வது பெரும் பலம்.
இதை மனுஷன் ஒத்துக்கவில்லை. அதெப்படி நீங்களே முடிவெடுப்பது தானே நல்லது. எதுக்கு இன்னொருத்தர் அட்வைஸ் எதிர் பார்க்கணும் - இந்த ரீதியில் நம் வாயை அடைத்துவிட்டு, அடுத்த டாபிக் செல்கிறார்.
ஐயா - நாம முடிவெடுக்க வேண்டாம்னு நான் சொல்லலியே. அனுபவஸ்தர்களின் வார்த்தையை கேட்டு அதன் தாக்கதுடனே நம்ம முடிவை எடுக்கலாமே என்று தானே சொல்கிறேன். ஆனால் இப்படி எல்லாம் பேச அங்கு வாய்ப்பில்லை.
மேலும், மற்ற டாபிக் பேசும் போது முன்னாடி பேசியதை பற்றி பேச ஆரம்பித்தால், அது முடிஞ்சிது, இப்போ இதைப் பத்தி சொல்லுங்க என்று கூறி விடுகிறார். இது அவர் நிகழ்ச்சி நடத்தும் ஸ்டைல், நாம் சரி தவறு என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் விவாதம் என்று வரும் போது, நம் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை கொஞ்சமாவது பார்க்கவேண்டும் என்பது தான் என் ஆதங்கம்.
இப்போ ரெண்டாவது - இவ்ளோ இழக்குறேன் என்று சொல்கிறீர்களே, அப்போ திரும்பி இந்தியா போய்விட வேண்டியது தானே ? என்பது அவர் கேள்வி.
என்னை பொறுத்த வரை இந்த கேள்வியே தவறு. அவரே ஆரம்பத்தில் கூறினார். இப்போ ஒரு பொண்ணு புருஷன் வீட்டில மாமியாரால கொடுமைப் படுத்தப்படுகிறாள் என வைத்துகொள்வோம். அதற்காக புருஷன் வீட்டை விட்டு அம்மா வீட்டுக்கே போய் விட வேண்டியது தானே என்று கேட்க முடியுமா.
இளமையில் பணத்தை தேடி எதோ ஒரு தைரியத்தில், ஊரை விட்டு, உறவுகள் மற்றும் நண்பர்களை விட்டு வேறு ஒரு நாட்டில் சிறுபான்மையினாராக மாறி வாழ்வது மிகக் கடினமானது. நாளடைவில் அது பழகிப் போய் அது ஒரு பிரச்சனையாக தெரியாது. இங்கு நான் சிறு பான்மையினர் என்று குறிப்பிடுவது சாதிரீதியாகவோ மதரீதியாகவோ இல்லை, மொத்த இந்திய சமூகத்தில் இருந்து விலகி, வெளிநாட்டில் ஒரு சிறு பான்மையினராக வாழ பழகிக் கொள்கிறோம். இங்கு எத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் நம்மை வெளிநாட்டவராக தான் பார்ப்பார்கள். இப்படி பல வருடங்கள் பல மாற்றங்களுக்கு உட்பட்டு, குழந்தைகள் பெற்று குடும்பம் பெரிதாகியப் பின்னர், திரும்பிப் போனால் எப்படி சமாளிக்க முடியும் என்கிற பயம் வருகிறது. நாம் கூட பரவாயில்லை, குழந்தைகள் மேலும் பெரிய சமூக மாற்றத்தை சந்திக்க வேண்டுமே என்பது கூடுதல் பயம். இந்த பயத்தினால் தான் பலர் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி செல்வதில்லை என்பது என் வாதம். ஆனால் அவரோ - அதெப்படி பன்னெண்டு வருடத்துக்கு முன்னடி தெரியாத ஒரு நாட்டுக்கு தையிரியமாக வந்த நீங்கள், தெரிந்த இந்தியாவிற்கு போவதற்கு ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேட்கிறார். நியாயம் தான், நான் மட்டும் திரும்பி போனால் பரவாயில்லை, ஆனால் எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வாழ்கையின் மீது ஒரு திடீர் திருப்பத்தை கொண்டு வர துணிவார்கள். மேலும் அன்று நான் ஒரு பறவை போல நாடோடி போல வந்துவிட்டேன், இன்று என் வயதும் வாழ்கை அனுபவமும் அடுத்து எடுக்கும் ஒவ்வொரு அடியையும் சிந்தித்து எடுக்க சொல்கிறது. மேலும் வாழ்வின் பல வருடங்களை வெளிநாட்டில் வாழ்வதற்கான மாற்றங்களுக்காக தயார் படுத்திய பின்னர், இன்னொரு மாற்றத்தை (இந்தியாவும் மாறிக்கொண்டிருக்கிறது) அன்றாட வாழ்வில், அலுவலகத்தில், சமூகத்தில் நாம் சந்திக்க முடியுமா என்கிற பயமும் இருக்கிறது. இது தவறா சரியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் பயம் எனக்குத் தான் தெரியும். அது சரியில்லை என்று கூற முடியாது அல்லவா ?
//இராஜராஜேஸ்வரி said...
மே. குளிர் அடிக்கும் ஊரில் வெயில் வந்தால் பெரிது, வெயில் அடிக்கும் ஊரில் குளிர் வந்தால் பெரிது.
நிகழ்ச்சியில் கல்ந்துகொள்வதே சலிப்பூட்டுகிறதே .!//
சலிபூட்டுகிறது என்பது உண்மை தான். நாம என்னவோ எதிர் பார்த்து போய் அது நடக்குல என்கிற போது கொஞ்சம் எரிச்சலும் கோபமும் வருகிறது. என்ன பண்ண நம்ம எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டியது தான் போல இருக்கிறது.
Post a Comment