வீட்டை விட்டு வெளியே வந்த ஜகனின் மனம் விரக்தியாலும் வெறுப்பாலும் கொதித்தது. உடம்பு முழுவதும் ஆத்திரம் தீ மாதிரி பற்றிக்கொண்டாலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டு, அந்த இரவின் அமைதியுடன் கூடிய வெறிச்சோடிய தெருவில் அவனது காலடிகள் எவ்வித நோக்கமும் இல்லாமல் சற்றே மெதுவாக முன்னேறி நடந்தது. ஜான்சியுடனான வாக்குவாதத்தின் தீவிரம் அவனைச் சுற்றி ஒரு போர்வை போல கனமாக சூழ்ந்து இருந்தது. தெரு ஓரத்தில் அந்த நேரத்தில் கூடி மாநாடு போட்டுக்கொண்டிருந்த நாய்கள் காலடி தடம் கேட்டு, லேசான உறுமலுடன் ஜகனை நோக்கின. பின்னர் அடிக்கடி அந்தத் தெருவில் பார்த்து தெரிந்த முகம் என்பதை உணர்ந்து உறுமலை நிறுத்தி லேசாக வாலை ஆட்டிய பின்னர், தங்கள் மாநாட்டை தொடர்ந்தன. சற்று தொலைவில் எங்கோ இருந்த அபார்ட்மென்டின் பால்கனியில் இருந்து காற்றுக்கு உற்சாகமாய் படபடக்கும் துணிகளின் சத்தம் ஜகனின் காதுகளில் லேசாக கிசுகிசுத்து.
சற்று நேர நடைக்கு பின்னர், பாக்கெட்டில் இருந்த செல்போன் அவசரக் குரலில் கிணுகிணுக்க, அதை எடுத்து உயர்த்திப் பார்த்தான். "ஜான்சிஸ் டாட்" என்று செல்போன் திரையில் மின்னிய எழுத்துகளைப் பார்த்து லேசான எரிச்சலுடன் டிக்ளைன் பட்டனை அழுத்தினான். இப்படித்தான் முன்பு ஒருமுறை ஜான்சியுடன் ஏற்பட்ட சண்டையின் போது, இவர் போனில் தன்னை அழைத்து ஜான்சியிடம் திரும்பிப் போக சொன்னது நினைவு வந்தது. இந்த முறை எக்காரணத்தைக் கொண்டும் மாமனாரின் தொலைபேசி அழைப்பை எடுக்க கூடாது என்று திடமாக தீர்மானித்திருந்தான். உடனடியாக அவர் தொலைபேசி எண்ணை பிளாக் செய்தான்.
மணி நள்ளிரவு பன்னிரெண்டுக்கு மேல் ஆகி இருந்தது. மேலும் சிறிது தூரம் நடந்து தெருமுனையில் திரும்பிய பின்னர் ஒரு சைக்கிளில் கேனுடன் நின்று கொண்டிருந்தவரை சுற்றி ஒரு பத்து பதினைந்து பேர் நின்று கொண்டிருந்தனர். அப்படி என்னதான் நடக்கிறது என்ற ஆர்வத்தில் ஜகன் எட்டிப் பார்த்தான். வேறொன்றுமில்லை நமது தேசிய பானமான தேநீர் விற்றுக்கொண்டிருந்தார். ஆம் நடமாடும் டீக்கடை. டீ மட்டுமல்லாமல், சமோசா, மசால் வடை, சிப்ஸ், பிஸ்கட் போன்ற பல ஐட்டங்களை வைத்திருந்தார். அதை பார்த்ததும், ஜகனுக்கு இரவு எதுவும் சாப்பிடாதது நினைவிற்கு வந்து பசி வயிற்றை கிள்ளியது. ஒரு டீயும் இரண்டு சமோசாவும் கூடவே இரண்டு வடைகளையும் வாங்கிக்கொண்டு அருகில் மூடி இருந்த கடை வாசலில் அமர்ந்தான். ஒரு வடையை எடுத்து கடித்தவன், பரவாயில்லை இந்த நேரத்திலும் வடை லேசாக சூடாவே இருக்குது என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். அடுத்ததாக சமோசாவை எடுத்து கடிக்கும் போது, ஜான்சி எதுவும் சாப்பிட்டிருப்பாளா என்ற நினைவு வந்தது. அவளை கூப்பிட்டு கேட்கலாமா என்று நினைத்து, பின்னர் வேண்டாம் இன்னும் கோபத்தில் தான் இருப்பாள். நாம் போன் பண்ணினாலும் எடுக்க மாட்டாள் என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டு விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது செல்போன் மீண்டும் கிணுகிணுத்தது. சற்று எரிச்சலுடன் யார் என்று செல்போனை நோக்கி மம்மி என்று பார்த்ததும், உடனடியாக எடுத்து 'மம்மீமீமீ' என்று அழுகுரலோடு பேச ஆரம்பித்தான்.
"டேய் ஜகன், என்னடா ஆச்சு, உன் மாமனார் போன் பண்ணி நீ வீட்டை விட்டு வெளியே வந்துட்டதா சொல்றாரு. நீ இப்போ எங்கே இருக்கே ?"
"மம்மி அவளோட டார்ச்சர் தாங்க முடியலே மம்மீ. ரொம்ப கொடுமை படுத்துறா. எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்டு சண்டை போடுறா மம்மி. எனக்கு உயிரோட இருக்கவே புடிக்கல."
"ஜ..ஜகன், அப்படி எல்லாம் பேசாதேடா. பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணிடாதே. சரி, இப்போ எங்கே இருக்கே."
"இங்கேதான் வீட்டு பக்கத்துல இருக்கேன் மம்மி. பசிக்குதுனு இப்போதான் வடையும் சமோசாவும் சாப்பிட்டிட்டு டீ குடிச்சேன்."
"ஏண்டா இப்படி சரியா சாப்பிடாம கண்டதை வாங்கி திங்குறே. உன் தங்கச்சி வித்யா அங்கே ஹைதராபாத்திலேயே தானே இருக்கா. அவ வீட்டுக்கு போய் இருக்கலாம்ல ?"
"எனக்கு எதுவுமே தோணலே மம்மி, அப்பிடியே நடந்து வந்து இங்கே உக்காந்துட்டேன்."
"இப்படி உனக்கு சோறு போடாமே இருந்திருக்காளே ? என்ன பொம்பளை இவ. பேச்சு மட்டும் அவளுக்கு வாய் கிழியும். ஏன், வீட்டுலே உனக்கு சமைச்சு போடறதுக்கு என்னவாம் அவளுக்கு."
"நீ வேறே மம்மி. நான் தான் அவளுக்கு காபி குடுக்கறதுலே தொடங்கி முழு சமையலும் செஞ்சு போடுறேன். ஆபீஸ்க்கு லஞ்ச் கூட பேக் பண்ணி குடுத்துடுறேன். நேத்திக்கு கூட நான் தான் கடையிலே மாவு வாங்கிட்டு வந்து அவளுக்கு தோசை சுட்டு தந்தேன்."
"ஐயோ, உன்னை எப்படி எல்லாம் வளர்த்தேன். நீ என்னடானா, இப்படி பொண்டாட்டிக்கு சமைச்சு போட்டுட்டு இருக்கே. நல்ல வேலை, இதையெல்லாம் பாக்காம உங்க அப்பா போய் சேந்துட்டாங்க. என் தலையெழுத்து, இதையெல்லாம் பாக்கணும்னு இருக்கு. என்னதான்டா பிரச்னை உங்களுக்குள்ளே ?"
"மம்மி...நீ வேற...புலம்ப ஆரம்பிச்சுடாதே. நான் ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன். நான் எல்லாத்தையும் விவரமா நேர்லே சொல்றேன்."
"நீ பேசாம, வித்யா வீட்டுக்கு போயிடு. அவ வேற நேத்துல இருந்து அண்ணன் ஏன் போனை எடுக்கவே மாட்டேங்குறான்னு கேட்டுட்டு இருந்தா."
"நான் தான் வேணும்னே போனை எடுக்கலே. ஜான்சி முன்னாடி நான் வித்யாகிட்டே பேசினா, அவ சாமியாடிடுவா."
"ஏன்டா இப்படி தொடைநடுங்கியா இருக்கே. என்னத்த சொல்றது, எல்லாம் நம்ம விதி. சரி, இப்ப நீ என்ன பண்றதா இருக்கே ?"
"மம்மி, நான் காலைல முதல் பிளைட் பிடிச்சு சென்னை வந்துடுவேன். அங்கே இருந்து மத்தியானம் திருச்சி வந்துடுவேன்."
"இன்னிக்கு நைட் பேசாமே வித்யா வீட்டுக்கு போயிடு. நான் போன் பண்ணி சொல்லிடுறேன் அவளுக்கு."
"வேண்டாம் மம்மி, நான் நேரே ஏர்போர்ட் போயிடுறேன். முதல் பிளைட் காலைலே 5:50 எல்லாம் கிளம்புது."
"சரி, கிளம்பி வா. யார் கிட்டேயும் போன் பண்ணி எதாவது உளறிக்கிட்டு இருக்காதே."
"இல்லை மம்மி, ஜான்சியோட அப்பா கூட இப்ப போன் பண்ணினாரு. அவரோட போனை கூட நான் பிளாக் பண்ணிட்டேன்."
"வேறே யார் கிட்டேயும் போன் பண்ணி பிரச்னை பண்ணாம வீடு வந்து சேரு. காலைலே பிளைட் ஏறுறதுக்கு முன்னாடி, வித்யா கிட்டேயும் அவள் வீட்டுக்காரர் கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லிடு."
"சரி, சொல்லிடுறேன் மம்மி. போனை வெச்சுடட்டுமா ?"
"சரி வெச்சுரு."
போனை வைத்தவுடன், டீ விற்றுக்கொண்டிருந்தவர் வேறு எதுவும் வேண்டுமா என்று கேட்க, மேலும் இரண்டு வடைகள் சாப்பிடலாமா என்று மனதிற்கு எழுந்த ஆவலை ஏனோ வேண்டாம் என்று அடக்கினான். அப்போது கூட்டமும் இல்லாததால் கொஞ்சம் பொழுது போகட்டும் என்று தெலுங்கில் அவரிடம் மாட்லாட ஆரம்பித்தான்.
"டெய்லி இந்த ஏரியாவுக்கு வருவீர்களா ?"
"எங்கே சார், சாயங்காலம் 5 மணி வரை இங்கே பக்கத்துலே துணி கடையிலே வேலை பாப்பேன். நைட்லே வந்து டீ விப்பேன். சில சமயம் ரொம்ப டயர்டா இருக்கும், அன்னிக்கி எல்லாம் சீக்கரம் போய் படுத்து தூங்கிடுவேன். இப்ப எல்லாம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் விக்குறேன்."
"அப்படியா, எனக்கு இங்கே தான் பக்கத்துலே வீடு. இவ்ளோ நாள், நான் உங்களை பாத்ததே இல்லைனு தான் கேட்டேன்."
"இந்த ஏரியாவில் தான் சார் இருப்பேன், ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தெருலே இருப்பேன். நீங்க என் போன் நம்பர் எடுத்துக்கோங்க சார். ஒரு மெசேஜ் போட்டிங்கனா வீட்டுக்கே வந்து குடுத்துருவேன்."
"இந்த டீலிங் ஜகனுக்கு மிகவும் பிடித்து போக, அவர் நம்பரை வாங்கி, அவருக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து பின்னர் அந்த நம்பரை 'டீ டெலிவரி மேன்' என்று சேவ் செய்து கொண்டான்."
அவரிடம் விடை பெற்றுக்கொண்டு, சிறிது தூரம் நடந்து மெயின் ரோட்டிற்கு வந்து, ஏர்போர்ட்டிற்கு செல்ல டாக்ஸி புக் செய்தான். டாக்ஸிக்கு காத்துக்கொண்டிருந்த நேரத்தில், செல்போனில் இருந்தே சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் பிளைட் டிக்கெட் புக் செய்தான். சிறிது நேரத்தில் டாக்ஸி வந்ததும் அதில் ஏறி அமர்ந்து இருக்கையில் சாய்ந்தான். ஏர்போர்ட் போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகும் என்பதால், செல்போனில் ஹெட்செட்டை மாட்டி ஸ்பாட்டிபையில் 'ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்' தேடி எடுத்து லேசான வால்யுமில் பாடல் கேட்கத் துவங்கி பின்னர் சற்றே கண்ணயர்ந்தான்.
தொடரும்...
No comments:
Post a Comment