ஓ என்று பெருங்குரலெடுத்து அழுத வத்சலாவை என்ன சொல்லி சமாதானப்படுத்தலாம் என்று தெரியாமல் திகைத்து அமர்ந்திருந்தான் ஜகன்.
"ஏண்டா ஜகன், இவ்வளவு நடந்திருக்கு. என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல ?"
"உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல மம்மி. எல்லாம் கொஞ்ச நாளிலே சரியாயிடும்னு நினைச்சு, உன்கிட்ட சொல்லலே."
"ஐயோ...இப்ப என்ன பண்றதுனே தெரியலையே."
"மம்மி...நீ இப்படி புலம்புவேன்னு தெரிஞ்சுதான், இத்தனை நாள் எதுவும் உங்ககிட்டே சொல்லாம இருந்தேன். நான் சொன்னா நீ கஷ்டப்படுவியேன்னு நினைச்சு தான் உன்கிட்ட நான் எதுவுமே சொல்லலே."
"அதுக்காக, இப்படி ஒண்ணுமே சொல்லாம இருந்துருக்கியேடா. உன்னை எவ்வளவு பாடா படுத்தி இருக்கா இவ."
"மம்மி, அவ அவங்க வீட்டுல ஒரே பொண்ணு. ரொம்ப செல்லம் குடுத்து வளர்த்து இருக்காங்க. அதான் இப்படி எல்லாம் நடந்துக்குறா. அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும். இப்போதைக்கு நாம, ஒன்னும் பண்ண வேண்டாம். நான் ஒரு மாசம் அவளை விட்டு தனியா இங்கே இருந்தா எல்லாம் சரி ஆயிடும். அவளுக்கு என்னை விட்டுட்டு இருந்தாதான் என்னோட அருமை தெரியும்."
"என்னடா சொல்றே. ஒரு மாசம் இங்க இருக்க போறியா ? அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் சேந்து என்னை ஒரு வழி பண்ணிடுவாங்க. ஒழுங்கா இன்னும் ரெண்டு நாளுலே கிளம்புற வழியை பாரு."
"அதெல்லாம் என்னால போக முடியாது. அங்கே போனா அவ என்னை திட்டுவா. சில நேரம் ரொம்ப கோபம் வந்தா என்னை அடிச்சிடுவா."
"தூ...இதை சொல்ல, உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லை. பொண்டாட்டி கிட்டே அடி வாங்குவேன்னு சொல்றியே."
"அமாம், சின்ன வயசுலே இருந்தே நீ என்னை மிரட்டி மிரட்டி வளத்துட்டே. அதான் எனக்கு தைரியமே இல்லாம போச்சு."
"ஆமாண்டா, எல்லாத்துக்கும் என்னை குறை சொல்லு. அப்புறம் ஏன், மத்த விஷயத்திலே எல்லாம் உனக்கு கோபம் மூக்குக்கு மேலே வருது. என்கிட்டே கோபப்படுறே. உன் தங்கச்சி வித்யாகிட்டே அப்படி கோபப்படுறே. நம்ம சொந்தகாரங்க எத்தனை பேரை நீ எடுத்தெறிஞ்சு பேசி இருக்கே. அந்த கோபத்தை எல்லாம், உன் பொண்டாட்டி கிட்டே காட்ட முடியாதா ?"
"மம்மி, நீ விட்டா பேசிட்டே இருப்பே. இப்ப நான் உன்கூட ஒரு மாசம் இருக்க முடியுமா முடியாதா ? முடியாதுனா சொல்லு, நான் ஏதாவது ரூம் பாத்துட்டு போயிடுறேன். இது என் அப்பா வீடு. எனக்கு உரிமை இருக்குனு நினைச்சுத்தான் இங்கே வந்தேன். உனக்கு பிடிக்கலைன்னா, நான் இப்பவே இங்கே இருந்து கிளம்பிடுறேன்."
"டேய், உன்னை யாருடா இங்கே இருந்து போக சொன்னா. மொதல்லே இந்த கோபத்தை குறை. இதெல்லாம் என் தலையெழுத்து. நான் சொன்னா நீ கேக்கவா போறே. உன்னை நான் ஒன்னும் சொல்லலே. உன் மனசுக்கு என்ன சரின்னு படுதோ அதை பண்ணு."
"தட்ஸ் குட். இப்ப தான் நீ என் பட்டு மம்மி. சரி, இப்ப எனக்கு கொஞ்சம் பசிக்குது, தோசை ஊத்தி தரியா மம்மி ?"
மகனுக்கு பசி என்று கேட்டதும், பதறியபடி வத்சலா,
"சரி, சரி , ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு. நான் தேங்காய் சட்னி அரைச்சிட்டு, சூடா தோசை ஊத்தி தரேன்."
சரியாக பத்து நிமிடங்களில், சூடாக இரண்டு தோசை, தேங்காய் சட்னி, மிளகாய் பொடி சகிதம் ஒரு தட்டில் ஏந்தியபடி, ஜகனிடம் நின்ற வத்சலாவை கவனிக்காமல் செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டு இருந்தவனை, சற்று அதட்டும் தொனியில் அழைத்தாள் வத்சலா.
"டேய், ஜகன், இந்தா தட்டை பிடி. பசிக்குதுனு சொன்னியேனு அவசர அவசரமா தோசையை ஊத்தி கொண்டு வந்தா, சாப்பிடாம போனை நோண்டிட்டு இருக்கே. அப்படி என்னதான்டா அந்த போன்லே இருக்கு ?"
"சரி, சரி. உடனே ஆரம்பிச்சுறாதே உன் புராணத்தை.", என்றபடி தட்டில் இருந்த தோசையை வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.
"டேய், என்ன அவசரம். கொஞ்சம் மெதுவா சாப்பிடு. இப்படி எல்லாத்துலயும் அவசரப்பட்டு தான் பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு வந்து நிக்குறே."
"நான் சண்டை போடல, அவதான் என்னை வீட்டை விட்டு துரத்திட்டான்னு உனக்கு எத்தனை தடவை மம்மி சொல்றது."
"ஆமாம், நீ என்னிக்கு உண்மையை சொல்லி இருக்கே. இதுக்கு முன்னாடி சின்ன சின்ன பிரச்சனை வந்தபோது கூட, ஊருலே இருக்குற ஒரு சொந்தகாரங்க உனக்காக பேச வரலே. யாரை கேட்டாலும் உன்னை நம்ப முடியாதுனு கைவிரிச்சுட்டாங்க."
"அவங்களுக்கு எல்லாம் என் மேலே பொறாமை மம்மி. நான் நல்ல வேலைலே இருந்து கை நிறைய சம்பாரிக்குறேன். அதான், அவங்களுக்கு எல்லாம் என் மேலே பொறாமை."
"பேசாமே, உங்க தாமு சித்தப்பாவை கூப்பிட்டு பேசி பாக்கலாமா ஜகன் ?"
"தாமு சித்தப்பாவா ? எதுக்கு மம்மி. தாமு சித்தப்பா வந்து என்ன பண்ண போறாங்க."
"அவங்க தானேடா இங்கே பக்கத்துல இருக்காங்க, நீ வேற பெரியவங்க யாரு கிட்டேயும் சொல்லாம, அவளை தனியா விட்டுட்டு வந்துட்டே. நாளைக்கு எதுவும் பிரச்னை ஆச்சுன்ன என்ன பண்றது. நாம ஒரு வார்த்தை தாமு சித்தப்பாவை கூப்பிட்டு பேசி பாக்கலாம்ண்டா."
"நான் சொன்னா நீ கேக்கவா போறே. நீயே தாமு சித்தப்பாவை கூப்பிட்டு பேசிப் பாரு மம்மி"
"சரி, நான் கூப்புடுறேன். உனக்கு தோசை போதுமா, இல்ல இன்னும் ஒன்னு ஊத்தட்டா ?"
"இன்னும் ஒரு தோசை ஊத்திடு மம்மி."
வத்சலா கிச்சனுக்குள் நுழைந்து, தோசையை ஊற்றிய பின்னர் செல்போனை எடுத்து தாமு சித்தப்பாவின் நம்பரை தேடி அழைத்தாள். மறுமுனையில் சிறிது நேரம் ரிங் டோன் ஒலித்து பின் 'ஹலோ என்று தாமு சித்தப்பா என்கிற தாமோதரனின் குரல் கேட்டது.
"ஹலோ, நான் வத்சலா பேசுறேங்க."
"ஆங், சொல்லுங்க. நல்லா இருக்கீங்களா ?"
"நான் நல்லா இருக்கேங்க, ஜகன் வந்து இருக்கான். இப்பதான் உங்களை பத்தி பேசிட்டு இருந்தோம்."
"அப்படியா, என்ன திடீர்ன்னு வந்து இருக்கான். போன வாரம் நீங்க வீட்டுக்கு வந்தப்போ கூட ஒன்னும் சொல்லலியே."
"அவன் குணம் தான் உங்களுக்கு தெரியுமே. ஜான்சி கூட ஏதோ சண்டை போல. அவ ஜகன் தலையிலே தண்ணிய ஊத்தி வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டாளாம்."
"என்ன, தலையிலே தண்ணி ஊத்தி வெளியே அனுப்பிட்டாளா ?", என்று தாமு சித்தப்பாவின் குரலில் அதிர்ச்சி வெளிப்பட்டது.
"அவன் இன்னிக்கு முழுக்க கத கதையா சொல்றான். தாலியை கழட்டி இவன் மேலே வீசி இருக்காங்க அந்தப் பொண்ணு. அவன் பொண்டாட்டியை பத்தி சொல்றதை எல்லாம் கேட்டா எனக்கு மயக்கமே வருது. உங்க அண்ணன் இருக்கும் போது என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிக்குற தைரியம் இருந்துது. இப்போ இவன் சொல்றதையெல்லாம் பாத்தா, இது எங்கே போய் முடியுமோன்னு பயமா இருக்குங்க."
நிலைமை கொஞ்சம் விவகாரமாய் போய் கொண்டு இருப்பதை உணர்ந்த தாமு, வத்சலாவிற்கு ஆறுதல் கூறும் தொனியில்,
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீங்க கவலைப்படாதீங்க. நாங்க எல்லாம் இருக்கோம் இல்லே."
"அந்த தைரியத்தில தாங்க நான் இருக்கேன். அவன் வந்து என்கிட்டே அழுததை நீங்க பாத்து இருக்கணுமே. சின்னக் குழந்தை மாதிரி தேம்பி தேம்பி அழுதுட்டு இருந்தான்."
"சரி நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க, ஜகனை தைரியமா இருக்க சொல்லுங்க. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்."
"சரி, நான் அவன்கிட்டே சொல்றேங்க."
"அவன் பக்கத்துல இருக்கானா ?"
"அவன் பக்கத்துல இல்லேங்க. நான் கிச்சனிலே இருக்கேன். ஜகன் பசிக்குதுனு சொன்னான். இப்பதான் தோசை ஊத்தி குடுத்துட்டு இருக்கேன்."
"சரி, சரி. அவன் சாப்பிடட்டும். நான் அப்புறமா அவனுக்கு போன் பண்ணி பேசுறேன்."
"நீங்க ஃபிரியா இருந்தா கொஞ்சம் வீட்டுக்கு வந்து அவன் கிட்டே பேசுறீங்களா ? அவன் என்ன மனசுல வெச்சுட்டு பேசுறான்னு எனக்கு தெரியலே.", என்று ஜகனுக்கு கேட்டுவிடக்கூடாது என்கிற மாதிரி சற்றே தாழ்ந்த குரலில் கூறினாள் வத்சலா.
"அப்படியா. சரி, நான் கொஞ்ச நேரத்துல கிளம்பி அங்கே வரேன்.", என்று கூறியபடி தன் கைனடிக் ஹோண்டாவை தூசி தட்டினார் தாமு சித்தப்பா.
தொடரும்...
No comments:
Post a Comment