வத்சலா ஆத்திரத்துடன் உதட்டை கடித்து கண்களை உருட்டியபடி ஜகனை அப்படியே எரித்து விடுவது போல பார்த்தாள்.
"என்னடா சொல்றே, நீதான் வீட்டுலே எல்லா வேலையும் செஞ்சுட்டு இருக்கியா ?"
"ஆமாம் மம்மி, காலைல எழுந்து அவளுக்கு நான் தான் காபி போட்டு ரெடியா வெச்சு இருக்கணும். அவளுக்கு ஆஃபீசிக்கு லஞ்ச் கூட நான்தான் பேக் பண்ணி கொடுப்பேன். அவளை ஆஃபீசிலே காலைலே ட்ராப் பண்ணுவேன். சாயங்காலம் ஆஃபீசிலே இருந்து பிக்கப் பண்ணிப்பேன். இதை தவிர அவ யோகா, கிடார், டான்சனு ஏகப்பட்ட கிளாஸ் சேந்து வெச்சு இருக்கா. அதுக்கெல்லாம் நான் தான் டிரைவர் மாதிரி கூட்டிட்டு போயிட்டு வருவேன். இவ்வளவு ஏன், அவ துணியை கூட நான் தான் துவைச்சு, மாடிலே போய் காய போடுவேன். சாயங்காலம் காயப்போட்ட துணியெல்லாம் எடுத்தது வந்து மடிச்சு வெக்கறதுகூட என் பொறுப்பு தான். ", என்று தான் செய்யும் வேலைகளை அடுக்கிக்கொண்டே சென்ற ஜகனை கோபத்துடன் வத்சலா இடைமறித்தாள்.
"அடி செருப்பால, இதை எல்லாம் வந்து என்கிட்டே பெருமையா சொல்லிட்டு இருக்கியா. ஒரு ஆம்பளைன்னு சொல்லிக்குறதுக்கு உனக்கு வெக்கமா இல்லை. உன்னை ஒரு நாளாவது ஏதாவது வேலை செய்ய வெச்சு இருந்துருக்கேனா ?. இப்படி பொண்டாட்டிக்கு ஊழியம் செஞ்சுட்டு வந்து நிக்குறியேடா. உன்னை சொல்லி என்ன ஆகப்போகுது. இப்படி ஒரு வேலையும் செய்ய துப்பு இல்லாத ஒரு பொண்ண வளத்து வெச்சு இருக்காங்களே அவங்க அப்பா அம்மாவை சொல்லணும்."
"நீ வேற, அவளோட அப்பா அம்மாவை பத்தி பேசாதே. அவங்க ரெண்டு பேரும் எப்ப பாத்தாலும் வந்து வீட்ல உக்காந்துக்குவாங்க."
"இதென்னடா கதையா இருக்கு, அவங்க ஏன் வந்து உக்காருறாங்க. நான் ரெண்டு நாள் வந்து, உன்கூட இருந்தா முஞ்சியை தூக்குவா உன் பொண்டாட்டி. இதெல்லாம் எனக்கு நீ முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல."
ஏன் முன்னாடியே சொல்லலை என்ற கேள்வியை சற்றும் பொருட்படுத்தாமல் ஜகன்,
"கொஞ்சம் இரு மம்மி, கதையை கேளு. அன்னிக்கு ஒரு நாள், நான் அப்பத்தான் ஆபீசிலிருந்து டயர்டா வீட்டுக்கு வந்தேன். உள்ளே வந்ததும் அவ கூலா என்கிட்டே வந்து, ஜகன், நைட் டின்னருக்கு கொஞ்சம் சப்பாத்தி மாவு பிசைந்து வெச்சுருன்னு சொல்றா. அப்படி சொல்லிட்டு அம்மாவும் மகளும் ஜாலியா டிவி பாத்துட்டு இருந்தாங்க. சரினு நானும் ஒரு வார்த்தை பேசாமே, டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து சப்பாத்தி மாவு பிசைஞ்சுட்டு இருந்தேன். அதை பார்த்துட்டு என்னோட மாமியார் என்ன சொன்னாங்க தெரியுமா ? "
"என்ன சொன்னாங்க ?, அதையும் சொல்லித்தொல...", என்று எரிச்சலுடன் கூறினாள் வத்சலா.
"அவங்க, ஜகன் கொஞ்சம் சூடா பால் ஊத்தி சப்பாத்தி மாவை பிசைஞ்சிருங்க, அப்பத்தான் சப்பாத்தி சாஃப்டா இருக்கும்னு சொல்றாங்க. நீயே சொல்லு மம்மி, எந்த ஊர்ல இந்த மாதிரி மாமியார் மருமகன் கிட்டே சொல்ல முடியும். "
"ஹேங், நீ இருக்குற ஊரிலே தான் சொல்லமுடியும். அப்படி உன் மாமியார்காரி கேட்டும் நீ வாயை தொறக்காம சும்மாதானே இருந்து இருக்கே. உனக்கு கொஞ்சம் கூட ரோஷம் இல்லையாடா ?"
'ரோஷம் இல்லையாடா' என்று வத்சலா கேட்ட கேள்வியையும் மீண்டும் ஒரு பொருட்டாகவே எடுக்காத ஜகன், ஒரு குழந்தைகுரிய ஆவலுடன் மேலும் கூற ஆரம்பித்தான்.
"இது கூட பரவால்ல மம்மி, ஒரு நாள் முக்கியமான ஒரு ஆபீஸ் வேலை உக்காந்து பாத்துட்டு இருந்தேன். அப்போ வந்து, ஜகன் எங்க டாடிக்கு நெய் ரோஸ்ட் தோசை ஊத்தி எடுத்துட்டு வான்னு ஜான்சி என்கிட்டே சொல்றா. அப்படி சொல்றதையும் சொல்லிட்டு அவங்க அப்பாகிட்ட, டாடி, ஜகன் சூப்பரா தோசை சுடுவான்னு சொல்லறா. அதையும் கேட்டுட்டு அவங்க அப்பா கெக்கேபிக்கேன்னு சிரிக்கிறார். "
"அடப்பாவி, உன்னை எப்படி எல்லாம் வளத்தேன். கஷ்டப்பட்டு வளர்த்து, லட்சக்கணக்குலே செலவு செஞ்சு இன்ஜினியரிங் படிக்க வெச்சா, நீ என்னடானா மாமனாருக்கு தோசை சுட்டு குடுத்து சேவகம் செஞ்சுட்டு இருக்க."
"என்ன பண்றது மம்மி. வேலை செய்யறது கூட பரவால்ல. வீட்டுலே எனக்கு கொஞ்சம் கூட பிரைவசியே இல்லை."
ஆங்கிலம் சரியாக புரியாத வத்சலா, "அது என்னடா பிரைவசி ?"
"மம்மி, நான் பெட்ரூம்ல படுத்துட்டு இருக்கும் போது அவளோட அம்மா கதவை கூட தட்டாம நேரா உள்ளே வராங்க. உனக்கே தெரியும் இல்ல மம்மி, என்னோட பெட்ரூமுக்கு யார் வந்தாலும் பிடிக்காதுன்னு."
"ஆமாம், நானோ இல்லே வித்யாவோ உன் பெட்ரூம்குள்ளே வந்தாலே எரிஞ்சு விழுவே. இப்போ மாமியார்காரி வந்தா மட்டும் நீ ஒன்னும் சொல்லாமே, வாயை மூடிட்டு தானே இருக்குறே ?"
"ஏன் மம்மி, நீயும் இப்படி குத்திக்காட்டி பேசுறே. எல்லாம் என் தலைவிதி."
"தலைவிதி இல்லைடா, அதெல்லாம் நீ கொடுத்த இடம்தான். முதல்லே இருந்தே உன் மரியாதைய விட்டு குடுத்து இருக்க கூடாது."
"ஒரு விஷயம் சொன்னா நீ கண்டிப்பா என்னை திட்டுவே. ஆனாலும் பரவால்லே சொல்றேன். ஒரு நாள் நடுராத்திரி எழுந்து பசிக்குதுனு சொல்லி, பீட்ரூட் சப்பாத்தி சாப்பிடணும்னு க்ரேவிங்கா இருக்குனு சொன்னா. நான் அந்த நேரத்துலே எங்கே கடையிலே போய் வாங்கறதுனு, நானே ஆன்லைனிலே வீடியோ பாத்து அவளுக்கு பீட்ரூட் சப்பாத்தி பண்ணி குடுத்தேன்."
"அமாம், இதுக்கு உன்னை திட்டாம, கொஞ்சுவாங்களா ? பொண்டாட்டிக்கு நடு ராத்திரிலே சமைச்சு போட்டேன்னு வெக்கமில்லாம சொல்றே."
"உன்கிட்டே சொல்லாம வேறே யார் கிட்டே மம்மி சொல்ல முடியும்.", என்று லேசாக கம்மிய குரலில் ஒரு பிட்டை எடுத்து போட்டான் ஜகன்.
"அது சரி, நீ சொல்றதை எல்லாம் பாத்தா, இது இன்னைக்கு நேத்து நடந்தா மாதிரி தெரியலையே. உனக்கு கல்யாணம் ஆனதிலே இருந்தே, அவ இப்படித்தானே ஆட்டம் ஆடி இருந்திருப்பா ?"
"ஆமாம் மம்மி, கல்யாணம் ஆனதிலிருந்தே இப்படி தான் பிரச்சனை வந்துட்டு இருந்துது. நானும் கொஞ்ச நாள் ஆனா சரி ஆயிடும்னு பொறுத்துகிட்டு இருந்துட்டேன்."
"சரி, இப்போ என்ன ஆச்சுன்னு பொறுத்துக்க முடியாம அவளை தனியா விட்டுட்டு கிளம்புனே ?"
"அது வந்து மம்மி. உனக்கே தெரியும்லே, டாடி இருக்கும் போது கூட நான் ஷேர் மார்கெட்லே அப்பப்போ ஐநூறு ஆயிரம்னு சம்பாரிப்பேன். நீயும் டாடியும் கூட சூப்பர் ஜகன், உன்னோட அறிவு யாருக்கும் இருக்காதுன்னு சொல்வீங்கள்ல. டாடி கூட எனக்கு டெய்லி ஐநூறு ரூபாய் வரா மாதிரி பண்ணிகுடுடானு சொல்லுவாங்க இல்லை. "
பங்கு சந்தையில் ஒவ்வொரு நாளும் லாபம் சம்பாதிப்பது என்பது பெரிய நிறுவனங்களால் கூட முடியாத காரியம் என்பதை உணராத வத்சலா, "ஆமாண்டா கண்ணா, நீ தான் அப்பிடி சம்பாரிச்சு இருக்கியே.", என்று பெருமையுடன் ஆமோதித்தாள்.
"இப்பவும் நான் ஷேர் மார்கெட்லே டிரேடிங் பண்ணிட்டு இருக்கேன் மம்மி. அது ஜான்சிக்கும் நல்லா தெரியும்."
இவன் எதற்காக இப்படி பீடிகை போடுகிறான் என்று புரியாத வத்சலா, சற்றே எரிச்சலுடன், "சரி அதுக்கு என்ன இப்ப ?"
"அதுலே ஒரு ரெண்டு லட்சம் லாஸ் ஆச்சு மம்மி."
அதை கேட்ட வத்சலா, தீயை மிதித்தவள் போல துள்ளி இருக்கையில் இருந்து எழுந்தாள்.
"நாயே, ரெண்டு லட்சம் போயுடுச்சுனு கொஞ்சம் கூட பயம் இல்லாம சொல்றே. என்னங்க உங்க பையன் பண்ணிட்டு வந்து இருக்கறதை பாத்தீங்களா. இதையெல்லாம் பாக்க வேணாம்னுதான் என்னை விட்டுட்டு போய்ட்டிங்களா ?", என்று ஜகனின் தந்தை படத்திற்கு முன்பு சென்று உரத்த குரலில் அழுக ஆரம்பித்தாள்.
இந்த மாதிரி ஒரு ரியாக்ஷன் வத்சலாவிடம் இருந்து வரும் என்று சற்றும் எதிர்பார்க்காத ஜகன், "மம்மி, மம்மி அழாதே மம்மி. முதல்லே லாஸ் ஆச்சு, அப்புறம் நான் திரும்பவும் அந்த ரெண்டு லட்சத்தை சம்பாரிச்சுட்டேன்.", என்று ஒரு பொய்யை உதிர்த்தான்.
"டேய் ஜகன், உண்மையை சொல்லு, நிஜமா ரெண்டு லட்சம் திரும்ப வந்துருச்சா ? இல்லை பொய் சொல்லிறியா ?"
"ஆமாம் மம்மி, பொய் சொல்லலை. சத்தியமா வந்துருச்சு.", என்று சர்வசாதாரணமாக பொய் சத்தியம் போட்டான்.
"சரி ஜகன், இனிமேல் ஜாக்கிரதையாக இரு. அதுதான் பணம் வந்துருச்சே, அப்புறம் எதுக்காக உன் பொண்டாட்டி உன் கூட சண்டை போட்டா ?"
"அது வந்து மம்மி, அவ எதுக்கெடுத்தாலும் என்னை சந்தேகப்படுவா. எனக்கு ஒரு பேங்க்லே இருந்து லோன் வேணுமான்னு வந்த மெசேஜை பாத்துட்டு, நான் உண்மையாவே லோன் அப்ளை பண்ணி இருக்கேனு ரொம்ப திட்டிடா."
"அடிப்பாவி, இதுக்காகவா ஒரு பொண்ணு சண்டை போடுவா ?"
"அதுதான் எனக்கும் புரியலை மம்மி. நானும் எவ்வளோவோ சொல்லிப் பாத்துட்டேன். என்னை நம்ப மாட்டேங்குறா."
"ஆமாம், அவ என்னைக்கு மத்தவங்க சொல்றதை நம்பி இருக்கிறா. நீயாவது பேசி புரிய வெச்சு இருக்கலாம்லே. நீ ஏண்டா அவளை வீட்டுல தனியா விட்டுட்டு வந்தே. அவங்க அப்பா அம்மா என்னை கூப்பிட்டு சத்தம் போட்டா என்ன பண்றது ?"
"நானே வெளியே வரலே மம்மி. அவதான் என்னை அடிச்சு, என்னோட தலைலே தண்ணி ஊத்தி, வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டா ?"
"என்னடா சொல்றே, தலைலே தண்ணி ஊத்தி, வீட்டை விட்டு வெளியே தொரத்திட்டாளா ? என்ன பொண்ணுடா இவ. தாலி கட்டின புருஷன்னு உன்கிட்டே கொஞ்சமாவது மரியாதையை இருக்கா அவளுக்கு ?"
"நீ வேற, அவ தாலியையே எப்பவும் கட்ட மாட்டா. பாதி நேரம் கழட்டித்தான் வெச்சு இருப்பா. ஒரு நாள் எதோ சண்டை வரும்போது கீழே பார்க்கிங் ஏரியாலேயே தாலியை கழட்டி என் மேலே வீசிட்டா. அங்கே இருந்த எல்லாரும் பாத்துட்டு இருந்தாங்க."
"ஐயோ, இவன் வேற இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறானே, நல்ல குடும்பம்னு சொன்னதாலே தானே பொண்ணு எடுத்தோம். இப்ப நான் என்ன பண்ணுவேன்.", என்று மீண்டும் அழுகையை ஆரம்பித்தாள் வத்சலா.
தொடரும்...
No comments:
Post a Comment