வத்சலா வீட்டிற்கு நேரில் வரச் சொன்னதின் காரணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தபடி கைனட்டிக் ஹோண்டாவை தூசி தட்டிக் கொண்டிருந்த தாமு சித்தப்பா, இன்னும் ஓரிரு வருடங்களில் அறுபது வயதை எட்டிப் பிடித்து விடுவார். இளம் வயதில் செய்த அசாத்தியமான தேகாப்பியாசம் அவர் தோள்களிலும் புஜங்களிலும் இன்றும் தெரிந்தது. பழைய நடிகர் ரங்காராவை நினைவுபடுத்தும் வகையில் உயரம், மெல்லிய பிரேமுடன் கூடிய மூக்கு கண்ணாடி, அந்த வயதிலும் அடர்த்தியான தலைமுடி, அதுவும் முழுவதுமாக நரைக்காமல் ஆங்காங்கே கருமையான முடிகள் தென்பட்டு சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருந்தன.
வாலண்டரி ரிட்டையர் ஆன பின்னரும் தனக்கென்று வாழ்க்கை நியமனங்களை வகுத்துக் கொண்டு தவறாமல் கடைபிடிப்பவர். இரவு எத்தனை மணிக்கு தூங்க சென்றாலும், அலாரம் வைக்காமலே காலை ஐந்து மணிக்கு எழுந்து அடர்த்தியான மரங்களுக்கு இடையே உள்ள ஐந்து ஏக்கர் பரப்பில் இருந்த தன் பங்களாவின் தோட்டத்தை சுற்றி ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க வாக்கிங் செய்வார். வாக்கிங் முடிந்த பின் குளித்து, பூஜை அறையில் சென்று அமர்ந்தார் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் யாரும் அவரை அடுத்த அரைமணி நேரத்திற்கு தொந்தரவு செய்வதை அவர் விரும்ப மாட்டார். பூஜை முடித்து நெற்றி நிறைய திருநீறுடன் சட்டை அணியாமல் பங்களாவின் வாசலின் அருகில் இருந்த வராண்டாவில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து அன்றைய செய்தித்தாள்களில் மூழ்கினால், சுமார் எட்டு மணி அளவில் சமையல்காரன் வேணு அவரின் அருகே பவ்யமாக வந்து ஐயா டிபன் ரெடி என்று கூறும்போது தான் நிமிர்வார்.
போர்டிகோவில் படகு போல நின்றிருந்த நீல நிற பி.எம்.டபிள்யு காரை, துடைத்துக் கொண்டிருந்த டிரைவர் பரமு, காரை துடைப்பதை நிறுத்தி விட்டு, சற்றே தயக்கத்துடன் கைனட்டிக் ஹோண்டாவை துடைத்துக் கொண்டிருந்தவரின் அருகே வந்து, ஐயா...நான் துடைக்கிறேங்க என்று மெலிதான குரலில் கூறினான்.
"வேண்டாம் பரமு, லேசா தானே தூசி இருக்கு. நான் பாத்துக்குறேன். "
"வெளியே எங்கேயும் போகனுங்களாய்யா ?"
"இங்கே பக்கத்துலதான் பரமு, அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வந்துடுவேன்."
"ஐயா, காரிலேயே போயிட்டு வந்துடலாங்கையா, உங்களை டூவீலர் ஓட்ட விடக்கூடாதுன்னு அம்மா ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காங்க.", என்று லேசாக குரல் நடுங்க சொன்னான் டிரைவர் பரமு.
"ஹீம், அதுக்கும் தடை போட்டுட்டாங்களா உங்க முதலாளியம்மா ?, இங்கே நாலு தெரு தள்ளி இருக்குற வீட்டுக்கு கூட சுதந்திரமா டூவீலரிலே என்னால போயிட்டு வர முடியாதா ?", என்று உரத்த குரலில் கோபத்துடன் கேட்டார்.
"அங்கே என்ன சத்தம் ?", என்று அதிகாரத் தோரணையுடன் வந்த தாமு சித்தப்பாவின் மனைவி பார்வதிக்கு மாநிறத்துக்கும் சற்று தூக்கலான நிறம். நீள்வட்ட முகத்தில் தீட்சண்யமான விழிகள். படிய வாரப்பட்ட அடர்த்தியான கூந்தல். கழுத்தில் சமஸ்தான காலத்து நகைகள் போல பகட்டான தங்க நகைகள் சரம் சரமாக தொங்கியது. கைகளிலும் காதுகளிலும் புது மோஸ்தரில் வளையல்கள் மற்றும் கம்மல்கள் மினுக்கிட்டன.
சற்று முன் இருந்த கோபம் எங்கே போனது என்று வியக்கும் வண்ணம் முகம் முழுக்க சிரிப்புடன் தாமு சித்தப்பா, "ஹி..ஹி.. அது ஒண்ணுமில்ல பார்வதி. வத்சலா போன் பண்ணி இருந்தாங்க. ஜகன் வந்திருக்கான் போல...ஏதோ அவசரமா பேசணும்னு வீட்டுக்கு வர சொன்னாங்க. அதான் போயிட்டு வந்துடுறேன்னு பரமு கிட்ட சொல்லிட்டு இருந்தேன்."
"நீங்க என்ன சொன்னீங்கன்னு கேட்டுட்டு தான் இருந்தேன். உங்களுக்கு பிரஷர் அதிகமா இருக்கு, அப்பப்ப மயக்கம் வேற வருது. இன்னும் உங்களுக்கு வாலிப வயசுன்னு நெனப்பா ?. டூவீலர் ஓட்ட கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார் இல்லே. ஒழுங்கா கார்ல போயிட்டு வாங்க. பரமு நீ வண்டியை எடு, ஐயாவை வத்சலா அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்துரு."
"சரிங்க அம்மா.", என்றபடி அவரசரமாக காரை நோக்கி ஓடினான் பரமு.
"சரி பார்வதி. நான் போய் என்ன விஷயம்னு கேட்டுட்டு வந்துடுறேன். நீயும் வேணும்னா வரியா ?"
"இல்லைங்க, எனக்கு இன்னைக்கு மாதர் சங்கத்தில ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. என்னால வரமுடியாது. நீங்க போயிட்டு ஏதாவது அவசரம்னா சொல்லுங்க, நான் நேரே அங்கே வரேன்."
"நான் வேணும்னா அங்கே போயிட்டு, பரமுவை திருப்பி அனுப்பட்டுமா ?"
"வேண்டாம், மாதர் சங்கத்தில் இருந்தே எனக்கு வண்டி அனுப்பிடுவாங்க. நீங்க போயிட்டு பொறுமையா வாங்க. "
"சரி பார்வதி, நான் போயிட்டு போன் பண்றேன்.", என்றபடி காரில் ஏறினார் தாமு.
சரியாக பத்து நிமிட பயணத்தின் பின் வத்சலாவின் வீட்டின் முன் காரை நிறுத்திய பரமு, அவசரகதியில் இறங்கி வந்து காரின் பின் கதவை அந்தக் கதவுக்கு வலித்து விடுமோ என்கிற ரீதியில் மெதுவாக திறந்து லேசாக முதுகை வளைத்து குனிந்தவாறு பவ்யமாக நின்றான்.
காரில் இருந்து கம்பீரமாக இறங்கிய தாமு சித்தப்பா, வத்சலாவின் வீட்டின் உள்ளே நுழையும் முன்னரே, வத்சலா வாசலுக்கே ஒடி வந்து வாங்க வாங்க என்று உள்ளே அழைத்து சென்றாள்.
"டேய், ஜகன். இங்கே ஹாலுக்கு வா. தாமு சித்தப்பா வந்திருக்காங்க பாரு.", என்று பெட்ரூமில் படுத்து இருந்த ஜகனுக்கு குரல் கொடுத்தாள் வத்சலா.
"ஒரு நிமிஷம், நீங்க உக்காருங்க. இதோ வந்துடறேன்.", என்று கிச்சனில் நுழைந்தாள் வத்சலா.
மேஜை மேல் இருந்த ஆனந்த விகடனை புரட்டி கொண்டிருந்த தாமு சித்தப்பா சற்று நேரத்தில் ஜகனின் குரல் கேட்டு நிமிர்ந்தார்.
"வாங்க சித்தப்பா", என்றபடி அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.
"என்னடா ஜகன், என்ன தீடீர்னு கிளம்பி வந்து இருக்கே. எல்லாம் ஓகே தானே ?"
"ஓகே தான் சித்தப்பா. இந்த ஜான்சி தான் கொஞ்சம் படுத்துறா."
"என்ன பிரச்னை. எதுவா இருந்தாலும் ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல ? இப்படி பொண்டாட்டியை தனியா விட்டுட்டு வரலாமா ?"
"ஐயோ, சித்தப்பா...நீங்களும் அம்மா மாதிரியே பேசுறீங்க. அவதான் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டா."
"அப்பிடி என்னதாண்டா சண்டை உங்களுக்குள்ளே ?", என்று தாமு சித்தப்பா கேட்டுக் கொண்டிருக்கும் போதே தட்டில் தோசையுடன் வந்தாள் வத்சலா.
"இந்தாங்க, சூடா தோசை சாப்பிடுங்க.", என்றபடி தாமு சித்தப்பாவிடம் தட்டை நீட்டினாள்.
"எதுக்கு, இப்போ தோசை எல்லாம்...", என்று சற்று தயக்கத்துடன் தட்டை வாங்கிக்கொண்டார் தாமு சித்தப்பா.
"ஜகன், சித்தப்பா கேக்குறாங்க இல்ல, என்ன நடந்துச்சுனு சொல்லுடா."
"என்ன சொல்றது சித்தப்பா, அவ எல்லாத்துக்கும் சந்தேகப்படுவா. சமைக்க மாட்டா. வீட்டு வேலை எல்லாம் நானே செய்யணும். உண்மைய சொல்லனும்னா நான் நல்ல தோசை சாப்பிட்டே ரெண்டு வருஷம் ஆச்சு."
அடப்பாவி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க அம்மாகிட்ட போன் பேசும் போது கூட உனக்கு தோசை ஊத்தி கொடுத்ததாக சொன்னாங்க. இப்ப ரெண்டு வருஷமா நல்ல தோசை சாப்பிடலைனு சொல்றியே, என்று மனதில் நினைத்துக் கொண்டார்.
"சரி, அதெல்லாம் புதுசா கல்யாணம் ஆன எல்லார் வீட்டுலயும் நடக்குறது தான். கொஞ்ச நாள் ஆனா சரியாயிடும். அதுக்காகவே சண்டை போட்டே ?", என்றார்.
"இல்லே சித்தப்பா, அவளை கொஞ்சம் நாள் பிரிஞ்சு இருந்தா தான் அவளுக்கு புத்தி வரும். இன்னும் ஒரு மாசத்துக்கு நான் இங்கே இருக்க போறேன்."
"அதென்னடா, ஒரு மாசம் கணக்கு ?"
"எனக்கு ஒரு பிரேக் வேணும் சித்தப்பா. அவ கோபம் வந்தா என்னை போட்டு அடிக்குறா சித்தப்பா."
"என்னடா சொல்றே, அடிக்குறாளா ?. அவ கிட்ட அடி வாங்கிட்டு நீ சும்மா இருந்தியா ?. அவ அடிச்சா நீ திருப்பி ரெண்டு வெக்க வேண்டியது தானே."
"எனக்கு அவளை திருப்பி அடிக்குற அளவுக்கு தைரியம் இல்லை சித்தப்பா. எங்க அம்மா என்னை அப்படியே வளர்த்துட்டாங்க."
"இப்படி தாங்க, எல்லா பழியையும் என் மேலே தூக்கி போடுறான். ", என்று புலம்பும் தொனியில் கூறினாள் வத்சலா.
"டேய், உங்க பெரியப்பா எல்லாம் அந்த காலத்துலேயே, யார் தப்பு பண்ணினாலும் ஒரு அரை விடுவாங்க. அதை பாத்தாலே எங்களுக்கு எல்லாம் கன்னம் வலிக்கும். நான், உங்க அப்பா எல்லாமே பயப்படுவோம். நீ என்னடானா பொம்பளை கிட்ட அடி வாங்கிட்டு வந்து நிக்குறே."
"நல்லா கேளுங்க. நான் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன்.", என்றாள் வத்சலா.
"டேய் ஜகன், நான் வேணும்னா ஜான்சி கிட்ட பேசி பாக்கட்டா ?"
"வேண்டாம் சித்தப்பா. அவ உங்களை மரியாதை இல்லாம பேசிடுவா. ஏற்கனேவே நிறைய பேரை, நீங்க தேர்ட் பெர்சன்... எங்க விஷயத்திலே தலையிடாதீங்கன்னு சொல்லி அவமானப் படுத்தி இருக்கா."
"இவன் ஷேர் மார்கெட்லே ஏதோ ரெண்டு லட்சம் லாஸ் பண்ணிட்டானு அவளுக்கு கோபம். அதான் இப்படி கிடந்து குதிக்குறா ?", என்றாள் வத்சலா.
"என்னடா ஜகன், ரெண்டு லட்சம் விட்டுட்டியா ?"
"இல்லை சித்தப்பா...முதல்லே லாஸ் ஆச்சு. அப்புறம் அதை எல்லாம் திருப்பி எடுத்துட்டேன். அவளுக்கு நான் லோன் எதுவும் வாங்குறேனோன்னு சந்தேகம்."
"ஏன் அப்படி சந்தேகப்பட்டா ?"
"எனக்கு வந்த ஒரு மெசஜை பாத்துட்டு, நான் லோன் அப்ளை பண்ணி இருக்கேன்னு நினைக்குறா ?"
"அவ அப்பிடி ஏண்டா நினைக்குறா. நீ ரெண்டு லட்சம் தான் லாஸ் ஆச்சு, அதையும் திருப்பி எடுத்துட்டேன்னு சொல்றே. அப்புறம் ஏன் லோன் எடுக்குறேனு சந்தேகப்படுறா ?"
திரு திருவென்று முழித்தவாறு, "தெரியலே சித்தப்பா", என்று தலையை குனிந்தபடி சொன்ன ஜகனை, ரெண்டு லட்சத்துக்கு எல்லாம் அசருகிற ஆள் இல்லையே இவன். எதையோ நம்மிடம் இருந்து மறைக்கிறான் என்று மனதில் நினைத்தபடி ஜகனை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தார் தாமு சித்தப்பா.
தொடரும்...
No comments:
Post a Comment