ஜகன் பெருமூச்சு வாங்க தன் மடியில் படுத்துக்கொண்டு , தேம்பி தேம்பி அழுவதை அப்படியே விக்கித்து பார்த்துக் கொண்டிருந்த வத்சலா செய்வதறியாது தவித்தாள். ஒரு வளர்ந்த ஆண்மகன் சாதாரணமாக தொட்டதெற்கெல்லாம் அழமாட்டான் என்ற எண்ணம் வத்சலாவிற்கு இருந்தாலும், ஜகன் அழுவது அவளுக்கு எதுவும் புதிதாக தெரியவில்லை. ஒரு தாயாக ஜகனை பற்றி வத்சலாவிற்கு நன்றாக தெரியும். ஜகன் ஏதாவது தவறு செய்து கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டால், அவன் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் அழுகை தான். கிளிசரின் கூட தேவைப்படாமல் நினைத்த நேரத்தில் குடம் குடமாக அழுது சாதிக்கும் திறமையில் ஜகன், கைதேர்ந்த நடிகர்களையும் மிஞ்சி விடுவான்.
இதையெல்லாம் நன்கு அறிந்த வத்சலா, இப்போ என்ன தப்பு பண்ணிட்டு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறான் என்று மனதில் நினைத்தபடி இருந்தாலும், ஜகனை எதுவும் கேள்வி கேட்காமல் அழுது முடித்து அவனே சொல்லட்டும் என்று அவன் தலையை வருடியபடி அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் ஜகனிடம் இருந்து குறட்டை ஒலி வருவதை உணர்ந்த வத்சலா அவனை எழுப்ப மனமில்லாமல் தானும் அப்படியே சோபாவில் சாய்ந்து கண்களை மூடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அப்படியே உறங்கிப்போன வத்சலாவை, கணீரென்று ஒலித்த காலிங் பெல் எழுப்பியது.
"எழுந்து உள்ளே பெட்ரூம்லே போய் படுடா கண்ணா", என்று ஜகனை எழுப்பிவிட்டு பின்னர் எழுந்து வாசலுக்கு சென்றாள்.
வாசலில், பக்கத்துக்கு வீட்டு கோகிலா. கோகிலாவுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கலாம். தலை நிறைய மல்லிகை பூவுடன், ஆகாய வண்ணப் பட்டுப் புடவையில், காதுகளில் அவள் வயதுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மாதிரி பெரிய ஜிமிக்கி அணிந்தபடி நின்றிருந்தாள். அவள் முழங்கை வரைக்கும் தங்க வளையல்கள் பளபளத்தன.
"வா கோகிலா, உள்ளே வா, என்ன விஷேசம் ? பட்டுப்புடைவை எல்லாம் கட்டி இருக்கே ?" என்று புன்னகைத்தபடி உள்ளே அழைத்தாள் வத்சலா.
"ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன் வத்சலாக்கா. உங்களை தான் ஆளையே பாக்க முடியலே. ரொம்ப பிஸியா ?", என்றபடி பட்டுப்புடவை சரசரக்க உள்ளே வந்தாள்.
"அதெல்லாம் இல்லே கோகிலா, எனக்கு வேலையே சரியா இருக்கு. நம்ம பக்கத்து வீட்டுலே வாடகைக்கு குடியிருக்குறவங்களுக்கு கொஞ்சம் பிளம்பிங் பெயின்டிங் வேலை நடந்துட்டு இருக்கு. அதை அப்பப்ப பாத்துட்டு சமையல் முடிக்கவே மத்தியானம் ஆயிடும். எனக்கு சாப்பிட்டதும் அட்லீஸ்ட் ரெண்டு மணி நேரமாவது தூங்கணும். நாலு மணி வரைக்கும் தூங்கி எழுந்து ஒரு காபி குடிச்சதும், வித்யா கிட்ட இருந்து போன் வந்துரும். அவ கூடவும் பேத்தி கூடவும் வீடியோ கால்லே பேசிட்டு, நைட் சாப்பிட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு தூங்குறதுக்கு ராத்திரி எப்படியும் பத்து மணி ஆயிடும்."
"சரி சரி, அதான் நான் ரெண்டு மூணு தடவை வந்து பாத்தப்ப கூட நீங்க வீட்டுல இல்லை."
"என்ன ரெண்டு மூணு தடவை வந்தியா ?. எனக்கு தெரியவே தெரியாதே. நீ ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல, பக்கத்துக்கு வீட்டுலே வேலை எப்படி போகுதுனு பாத்துட்டு இருந்து இருப்பேன்."
"அதுசரி வத்சலாக்கா, அந்த வீடு துபாய்லே இருக்குற உங்க வீட்டுக்காரரோட தங்கச்சி பையன் தானே வாங்கினாங்க ?"
"ஆமாம், துபாய்லே இருக்குற விஷ்வா தான் வாங்கி இருந்தான். ஆனா, ரெண்டு வருஷம் முன்னாடி ஜகன் கல்யாணத்தப்போ நாங்க அவங்க கிட்டே இருந்து வாங்கிட்டோம்."
"அப்பிடியாக்கா, அவங்களை நான் பார்த்து இருக்கேன். ஒரு தடவை உங்க வீட்டுக்கு வந்தப்ப கூட விஷ்வாவோட வைப் ரொம்ப நல்லா பேசிட்டு இருந்தாங்க. நான் ஒரு அரைமணி நேரம் தான் இருந்திருப்பேன். அதுக்குள்ளேயே இதை சாப்பிடுங்க அதை சாப்பிடுங்கனு எதாவது சாப்பிட குடுத்தேட்டே இருந்தாங்க. அவங்க பேர் என்ன வத்சலாக்கா ? நான் மறந்துட்டேன்."
"அதுசரி, நல்லா பேசிட்டு இருந்தா, சாப்பிட குடுத்தானு சொல்றே, இப்படி பேரை கூட மறந்துடுவியா ? அவ பேரு லலிதா."
"ஆமாம் அமாம், லலிதா. சே, எப்படி அவங்க பேரை மறந்தேன். என்ன செய்யறது வத்சலாக்கா, இப்ப எல்லாம் ரொம்ப ஞாபக மறதி ஆயிடுச்சு. எனக்கும் வயசாயிட்டே போகுதில்லை."
"நல்லா சொன்னே போ. உனக்கு என்ன மிஞ்சி மிஞ்சி போன ஒரு அம்பது வயசு இருக்குமா ? நீயே இப்படி சொன்னா எப்படி. எனக்கெல்லாம் அறுபது ஆக போகுது, அப்ப நானெல்லாம் என்ன சொல்றது."
"உங்களுக்கு என்னக்கா, இப்பவும் உங்களை பாத்தா அறுபது வயசுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க."
"நீ வேறே, அவரே போய் சேந்துட்டார். இனிமேல் பாக்குறதுக்கு நான் எப்படி இருந்தா என்ன ?", என்ற வத்சலாவிற்கு லேசாக குரல் கம்மியது. விழியோரமாய்த் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
"கவலைப்படாதீங்க வத்சலக்கா, உங்களுக்கு இப்ப என்ன குறைச்சல். ஜகன் நல்ல வேலைலே கை நிறைய சம்பாரிக்குறான். வித்யாவும் சந்தோசமா தானே இருக்கா."
"அமாம், இந்தப் புள்ளைங்களுக்காக தான் நான் உயிரோடவே இருக்கேன்."
"அது சரி வத்சலக்கா, விஷ்வாவும் லலிதாவும் ஏன் அந்த வீட்டை வித்துட்டாங்க ?. ஏதாவது பிரச்சனையா?. நீங்க என்ன விலைக்கு வாங்கினீங்க ?", என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள் கோகிலா.
இவளிடம் இதைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள் கண்டிப்பாக பொறாமைப் படுவாள் என்று மனதிற்குள் நினைத்தபடி,
"ஐயோ, மணி 4 ஆச்சு, வித்யா இப்ப கூப்புடுவா. ஜகன் வேற எழுப்பி விட சொல்லி இருக்கான். நாம அப்புறம் பேசலாம் கோகிலா", என்றபடி அவளை வீட்டில் இருந்து கிளம்பச் சொல்லும் தொனியில் வத்சலா கூறினாள்.
சிறிது நேரத்தில் கோகிலா சென்ற பின்னர், காபியை போட்டு எடுத்துக்கொண்டு ஜகனை எழுப்பினாள் வத்சலா.
"டேய், ஜகன். எழுந்திருடா, மணி நாலு ஆகப் போகுது."
சற்றே புரண்டு படுத்த ஜகன், "மம்மி, ஒரு 10 மினிட்ஸ் தூங்கிக்குறேன், ப்ளீஸ்..."
"சரி, காபியை இங்கே ஜன்னல் கிட்டே வைக்குறேன். மறக்காம எடுத்து குடி"
ஒரு ஐந்து நிமிடங்களில் காபியில் இருந்த வந்த நறுமணம் ஜகனின் நாசிகளில் சென்று தாக்க, தனது தூக்கத்தை தியாகம் செய்து காபியிடம் நேசக்கரம் நீட்டினான் ஜகன்.
காபி குடித்து முடித்து, முகம் கழுவி லேசாக ஒப்பனை செய்துகொண்டு விசிலடித்தபடியே ஹால் சோபாவில் வந்து அமர்ந்த ஜகனை பார்த்து, இன்னும் கொஞ்சம் நேரத்துலே வித்யா கூப்புட்டுருவா. சரி, நீ ஹைதராபாத்திலே இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி வித்யாக்கு போன் பண்ணி சொன்னியாடா ?"
"அய்யய்யோ, சுத்தமா மறந்துட்டேன் மம்மி."
"என்னடா ஜகன், அவ உன் கூட பொறந்தவ தங்கச்சி அந்த ஊருலேயே இருக்கா. அவ கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வரமுடியாதா உனக்கு ? அதுக்கும் உன்கிட்டே நான் பேசும்போது, கிளம்பறதுக்கு முன்னாடி மறக்காம அவளை கூப்பிட்டு சொல்லிடுனு சொன்னேன் இல்லை."
"ஆமாம், மம்மீ. எனக்கு இருந்த டென்ஷனிலே மறந்தே போயிட்டேன். சரி விடு, நான் அவள் கிட்டே பேசும்போது சொல்லிக்கறேன்."
"சரி, இரு இரு. போன் அடிக்குது. வித்யாதான் கூப்பிடுறா", என்றபடி வித்யாவின் வீடியோ கால் அழைப்பை வத்சலா எடுத்தாள்.
"சொல்லு வித்யா", என்று செல்போன் திரையில் தெரிந்த வித்யாவிடம் சொன்னது தான் தாமதம்.
"என்னம்மா, ஜகன் உனக்கு போன் பண்ணினானா ? நேத்துல இருந்து அவனுக்கு நான் போன் பண்ணிகிட்டே இருக்கேன். அவன் போனை எடுக்க மாட்டேங்குறான்"
"அதை ஏண்டி கேக்குறே, அவன் இன்னிக்கு காலைலே, அங்கே இருந்து கிளம்பி திருச்சி வந்துட்டான், இதோ பக்கத்துலே உக்காந்து இருக்கான். நீயே பேசு.", என்றபடி ஜகனிடம் போனை குடுத்தாள் வத்சலா.
முகம் சிவந்து கோபத்துடன் ஜகனை திரையில் பார்த்த வித்யா, "ஜகன், உனக்கு எத்தனை தடவை போன் பண்றது. நேத்து ஸ்கூல் விட்டு வந்ததிலே இருந்து ஜனனி, மாமா கிட்டே ஸ்கூல்லே ப்ரைஸ் வாங்கினதை காட்டணும்னு சொல்லிட்டே இருந்தா தெரியுமா ?"
"சாரி வித்யா. ஜான்சிகூட ஒரு பெரிய சண்டை. அதான் போன் எடுக்கலை."
"ஆமாம், அவ கூட உனக்கு என்னைக்கு தான் சண்டை இல்லை. அவளுக்கு என்னையும் அம்மாவையும் தான் பிடிக்காது. உன் கூடவாது சண்டை போடாமே ஒழுங்கா இருக்கலாம்லே ?"
"சரி அதை விடு, ஜனனிக்குட்டி என்ன பண்றா ?, அவ கிட்ட போனை குடு."
"ஜனனி, இங்க வா, வந்து மாமாகிட்ட பேசு"
"ஹலோ, மாமா. நேத்து ஏன் நீங்க போன் எடுக்கவே இல்லை ?", என்று மழலைக் குரலில் ஜனனி கேட்டாள்.
"ஜனனிக்குட்டி...அது வந்துடா...மாமா நேத்து கொஞ்சம் வேலைலே பிஸியா இருந்தேன்னா, அதான் போனை எடுக்கலே. நான் உனக்கு ஒரு ரிமோட் கார் வாங்கி வெச்சு இருக்கேன். நெக்ஸ்ட் வீக் உனக்கு கொண்டு வந்து தரேன் என்ன."
இப்படியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர்,
"சரி வித்யா, நீ போய் ஜனனிக்கு சாப்பிட ஏதாவது குடு. நான் நாளைக்கு கூப்பிடுறேன்.", என்றாள் வத்சலா.
"சரிம்மா, நாளைக்கு பேசலாம்.", என்றபடி இணைப்பை துண்டித்தாள் வித்யா.
தொடர்பு துண்டிக்கப்பட்டதை உறுதி செய்த வத்சலா, ஜகனிடம் திரும்பி,
"டேய் ஜகன், உண்மையை சொல்லு. அப்படி என்னதான்டா நேத்து நடந்தது ?"
அந்தக் கேள்வி வத்சலாவிடம் வந்த அடுத்த நொடியில், ஜகனின் கண்கள் இன்ஸ்டண்டாக குளமாகியது.
"ஜான்சி எப்பவும் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டே இருக்கா மம்மி. நான் தான் வீட்டுல அவளுக்கு எல்லா வேலையும் செய்றேன் தெரியுமா ?", என்று தேம்பியபடி பேச ஆரம்பித்தான்.
தொடரும்...
No comments:
Post a Comment