ரொம்ப
நாட்களுக்கு பின்னர் திருச்சியில் மழை நன்றாக பெய்திருந்தது. காலையில்
இருந்து பெய்த மழை காற்றுக்கு லேசான குளிரை கொடுத்திருந்தது. ஏர்போர்ட்டை
விட்டு வெளியே வந்த ஜகன் வீட்டிற்கு செல்வதற்கு டாக்ஸி புக் செய்து
காத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவனது தோளில் யாரோ கை வைத்து தட்டுவதை
உணர்ந்து திரும்பினான். ஜகனுடைய பள்ளித்தோழன் அருண் சிரித்தபடி நின்று
கொண்டிருந்தான். சுமார் ஆறடி உயரத்துடன் பாலிஷ் செய்யப்பட்ட கோதுமை
நிறத்தில் ஆஜானுபாகுவாக நின்றிருந்தவனின் திரண்ட புஜங்களில் ஜிம்மிற்கு
சென்று செய்த உடற்பயிற்சியின் பலன் தெரிந்தது. ப்ளூ நிற ஜீன்சும், கட்டம்
போட்ட கார்டுராய் ஷர்ட்டும் அணிந்து, ரோமக் காடாய் மண்டிய மார்பில் ஐந்து
பவுன் தங்கச்சங்கிலி மினுமினுத்தபடி நின்றிருந்த அருணின் கண்களில்,
அப்பாவின் அபிரிதமான பணபலத்தால் மாதம்தோறும் கணிசமாக கிடைக்கும் பாக்கெட்
மணி கொடுத்த தைரியம் தெரிந்தது.
"என்னடா ஜகன், இப்போ எதுவும் லீவு நாள் கூட இல்லேயே. திருச்சி பக்கம் வந்து இருக்கே ?"
"ஆமாண்டா, வீட்டுலே வைப் கூட ஒரு சின்ன பிரச்னை, அதான் அம்மா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம்னு வந்தேன்."
"ஓ அப்படியா, சரி வாயேன், அப்பிடியே ஒரு காபி சாப்பிட்டிட்டு பேசலாம்."
"ஓகே, வா போலாம். எனக்கும் டாக்ஸி வர எப்படியும் ஒரு பதினைஞ்சு நிமிஷம் ஆகும்."
அருகில் இருந்த கடையில், காபி வாங்கி வந்த அருண், ஜகனிடம் அதை கொடுத்தபடியே,
"என்னடா ஜகன், இப்படி வெயிட் போட்டுட்டே. ஏன் இப்ப எல்லாம் நீ ஜிம் பக்கமே போறதில்லையா ?"
"எங்கடா,
எனக்கு இருக்குற ஸ்ட்ரெஸ்லே எதுவுமே ஓடமாட்டேங்குது. இதுலே ஜிம்முக்கு
நான் எங்கே போறது. ஜிம் போறதெல்லாம் நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு. அதை தவிர
நான் ஜிம்முக்கு போய் தான் ஒரு பொண்ணுகிட்ட நிறைய பணம் குடுத்து
ஏமாந்துட்டேன்."
"என்ன, நீ ஒரு பொண்ணுகிட்ட ஏமாந்துட்டியா ?. அதுனால தான் உன் வைப் கிட்டே பிரச்சனையா ?"
"அதெல்லாம்
பெரிய கதைடா, இன்னொரு நாள் விவரமா சொல்றேன். பேசிக்கலி அவளுக்கு ரொம்ப
திமிர். எதுக்கெடுத்தாலும் சந்தேகப்பட்டு என்னை கேள்வி கேட்டுட்டே இருப்பா.
என்னால ஆபீஸ் வேலைலே கூட போகஸ் பண்ண முடியலே. அதான் அவ தொல்லையிலே இருந்து
ஒரு பிரேக் கிடைக்கட்டுமேனு அங்கே இருந்து கிளம்பிட்டேன். டேய் இந்த
விஷயம் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ பாட்டுக்கு யாருகிட்டயாவது சொல்லி
வெச்சுறாதே."
"நான்
யாருகிட்டடா சொல்லப் போறேன். எதுக்கும் பாத்துடா, எதுவா இருந்தாலும்
கொஞ்சம் யோசிச்சு செய். இப்படி எல்லாம் திடீர்னு வீட்டை விட்டு வெளியே வரது
என்னமோ எனக்கு சரியா படல."
அவனுடைய அட்வைஸால் கொஞ்சம் எரிச்சல் அடைந்த ஜகன்,
"சரி, எனக்கு டாக்ஸி இப்போ வந்துடும். நாம அப்புறமா மீட் பண்ணி பேசலாம் என்று அங்கிருந்து நகர்ந்தான்."
சரியாக
ஐந்து நிமிடங்களில் டாக்ஸி வரவும் ஏறி அமர்ந்து, செல்போனை எடுத்து
ஜான்சியிடம் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்து
கொண்டான். அவளிடம் இருந்து மெசேஜ் எதுவும் வராததை கண்டு, அவ வீம்பு
புடிச்சவ, அவளாக எந்த பிரச்சனை என்றாலும் இறங்கி வர மாட்டாள் என்று
மனதிற்குள் கருவிக் கொண்டான்.
டாக்ஸி
திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்து NH336 சாலையில் வேகம்
எடுத்து, சரியாக பிஷப் ஹீபர் பள்ளியை கடந்து செல்கையில், செல்போன்
ஒலித்தது. ஜான்சியிடம் இருந்துதான் அழைப்பு வருகிறதா என்று சற்று அவசரமாக
போனை எடுத்து, மம்மி என்று திரையில் தோன்றிய எழுத்துக்களை பார்த்து சற்று
சலிப்புடன் எடுத்தான்.
"சொல்லு மம்மி"
"என்னடா, திருச்சி வந்துட்டியா ?"
"இப்பதான் வந்தேன். இன்னும் ஒரு 20 நிமிசத்துல வீட்டுக்கு வந்துடுவேன்."
"ஏண்டா, வந்ததும் ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாம்லே. என்னடா போனே வரலேன்னு பாத்துட்டு இருந்தேன். நீ எதாவது சாப்பிட்டியா ? "
"இல்லே
மம்மி, இன்னும் எதுவும் சாப்பிடலே. ஏர்போர்ட்லே அருணை பார்த்தேன், அவன்
கூட ஒரு காபி குடிச்சேன். அவன் கூட பேசிட்டு இருந்ததுலே, உனக்கு போன் பண்ண
மறந்துட்டேன்."
"அந்த அருண் பய சகவாசம் வேண்டாம்னு உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். அவன் கூட சேந்து தான் நீ கெட்டு போறே."
"நீ
கொஞ்சம் சும்மா இரு மம்மி. உனக்கு அவனை முதல்லே இருந்தே புடிக்காது. அதான்
இப்படி பேசுறே. அவன் பெரிய பணக்காரன், அப்படிப்பட்ட ஆளுங்களை எல்லாம் நான் பகைச்சுக்க மாட்டேன். எப்போ பணம் தேவைனாலும் ஒரு போன் பண்ணினா போதும் நேர்லே வந்து குடுப்பான். அதனாலே நீ அருண் கிட்டே பேசக்கூடாதுனு எல்லாம் சொல்லாதே. நானே ஜான்சியோடா தொல்லை தாங்க முடியாமத்தான் இங்கே
வந்தேன். இப்ப பார்த்தா, உன் தொல்லை இன்னும் பெருசா இருக்கும் போல
இருக்கு."
"ஆமாண்டா,
உனக்கு நான் என்ன சொன்னாலும் தொல்லையாதான் இருக்கும். பொண்டாட்டியை அடக்கி
குடும்பம் நடத்த உனக்கு துப்பு இல்லை. உன் கோபத்தை எல்லாம் என்கிட்டே
காட்டு. அந்த மகாராணி பண்ற கூத்தை எல்லாம் பாத்துட்டு நீ சும்மா தானே
இருக்க. அவளை ஒரு வார்த்தை கேட்க உனக்கு தைரியம் இருக்கா ?"
"மம்மி இப்போ நான் வீட்டுக்கு வரட்டுமா வேண்டாமா ?. இப்படியே பேசிட்டு இருந்தீன்னா, அடுத்த பிளைட் பிடிச்சு ஹைதராபாதுக்கே போயிடுவேன்."
"சரிப்பா,
உன் பொண்டாட்டியை நான் ஒன்னு சொல்லிட்டா உனக்கு கோபம் பொத்துக்கிட்டு
வந்துடுமே. நான் வாயே திறக்கலே. நீ ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேரு."
"சரி, போனை வெச்சிடுறேன். ", என்று சற்று சலிப்பு தோய்ந்த குரலில் அழைப்பை துண்டித்தான்.
இந்த
சம்பாஷணையை லேசாக புன்னகைத்தபடி ரசித்து கேட்டுக் கொண்டிருந்த டாக்ஸி
டிரைவர் ரியர்வியூ மிர்ரரில் ஜகனை பார்த்தார். அவர் முகத்தில் ததும்பிய
புன்னகையை கண்டு எரிச்சல் அடைந்த ஜகன், அவரை கண்களாலேயே எரிப்பது போல ஒரு
முறை முறைக்க, அந்த பார்வையின் உக்ரத்தை தாங்க முடியாமல் ட்ரைவர் உடனே
கண்களை சாலையில் செலுத்தினார். சுமார் இருபது நிமிடம் திருச்சி
ட்ராபிக்கில் ஊர்ந்து வீட்டிற்கு வந்து சேர்ந்த ஜகன், முன் கேட்டை திறந்து
வீட்டின் உள்ளே சென்றான். மம்மீமீமீ என்று உச்சஸ்தாயியில் கூப்பிட்டுக்
கொண்டே ஹாலில் நுழைந்தான்.
"ஏண்டா
இப்படி கத்துறே ?", என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் ஜகனின் தாய்
வத்சலா. சுமார் அறுபது வயதை எட்டிப்பிடிக்க காத்திருக்கும் வத்சலாவிற்கு,
தீர்க்கமான முகம், நெற்றியில் லேசான விபூதி தீற்றல், சராசரிக்கும் சற்றே
குறைவான உயரம், மாநிறம், மெலிந்த உடல் மற்றும் லேசான கவலையுடன் கூடிய
கண்கள். அவ்வப்போது வலது பக்க மூக்குத்தியில் இருந்த சிறிய வைரத்துணுக்கு
லேசாக கண்ணைச் சிமிட்டியது.
"ரொம்ப பசிக்குது மம்மி, சாப்பிட என்ன வெச்சு இருக்கே ?"
"கொஞ்சம்
இருடா. சூடா இருக்கட்டுமேன்னு உன்கிட்டே போன்லே பேசினத்துக்கு அப்புறம்
தான் குக்கர்லே அரிசி வெச்சேன். இன்னும் ஐஞ்சு நிமிசத்துல அடங்கிடும். நீ
குளிச்சிட்டு வா சாப்பிடலாம்."
உணவு
தயாராக இருந்தால் உடனே சாப்பிட்டு இருக்கலாமே என்ற நினைப்பில் இருந்த
ஜகன், குளிச்சிட்டு சாப்பிடலாம் என்று கூறிய தன் மம்மியை சற்று கோபத்துடன்
பார்த்து பின்னர், சரி ஒரு குயிக் குளியல் போட்டுருவோம் என்று தன்னைத்தானே
சமாதானப்படுத்திக் கொண்டான். பத்து நிமிடங்களில் குளித்து விட்டு வந்த
ஜகனின் உதடுகளில் ஒரு ஹம்மிங். டைனிங் டேபிள் மீது சூடாக வைத்திருந்த
பாத்திரங்களில் இருந்து வந்த ஸ்மெல் சுண்டி இழுத்து அவன் பசியை மேலும்
தூண்டியது.
"ஜகன், வந்து உக்காருடா. சாப்பிடலாம்."
"நீ சாப்பிட்டியா மம்மி ?"
"இன்னும் இல்லைடா, நீ முதலே சாப்பிடு. உனக்கு எடுத்து வெச்சுட்டு நான் சாப்பிடுறேன்."
அந்த
பதிலில் பெரிதாக அக்கறை காட்டாத ஜகன், சரி எடுத்து வை. ரொம்ப பசிக்குது
என்று கூறியபடி டைனிங் டேபிளில் அமர்ந்தான். சூடாக தட்டில் வைக்கப்பட்ட
சாதம், முள்ளங்கி சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு பொரியலை எல்லாவற்றையும்
கலந்து வாயில் போட்டவன், உடனே...
"மம்மி, இப்படி நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு எத்தனை நாளாச்சு தெரியுமா ?"
"தேடி
தேடி பொண்ணு பாத்து உனக்கு கட்டி வெச்சோம். இப்படி வாய்க்கு ருசியா சமைக்க
கூட தெரியாத ஒருத்தி உனக்கு வந்து அமைஞ்சு இருக்கா. என்ன பண்றது எல்லாம்
நம்ம நேரம்."
"இல்லை மம்மி, அவ சமைச்சானா ரொம்ப நல்லா இருக்கும். நாங்க ரெண்டு பெரும் வேலைலே பிஸி. அதான் அவ சமைக்க மாட்டேங்குறா."
"என்ன
சொன்னாலும், உன் பொண்டாட்டியை விட்டுக்கொடுக்க மாட்டியே ? நீயேதான்
என்கிட்டே சொன்னே சமையல் எல்லாம் நீ தான் பண்ணி குடுக்குறேன்னு."
அதற்கு
மேலே பேசினால் எங்கே ஜகன் சரியாக சாப்பிடாமல் எழுந்துவிடுவானோ என்ற
பயத்தில், மேலும் ஜான்சியைப் பற்றி எதுவும் வத்சலா பேசவில்லை. சாப்பிட்டு
முடித்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்த ஜகனிடம் மெதுவாக பேச்சை
ஆரம்பித்த வத்சலா,
"அப்படி என்னதான்டா ஆச்சு ஜகன். ஏன் சண்டை போட்டுட்டு உன் பொண்டாட்டியை தனியா விட்டுட்டு வந்தே ?"
இப்படி
ஒரு கேள்வியை வத்சலா கேட்டதும் தான் தாமதம், திருச்சி கல்லணையில் இருந்து
திறந்துவிட்ட தண்ணீர் போல, உடனடியாக கண்கள் முழுக்க கண்ணீருடன் மம்மீமீமீ
என்று கூறி அழ ஆரம்பித்தான்.
தொடரும்...
No comments:
Post a Comment