ஜகன், "தெரியலே சித்தப்பா", என்று பதில் சொல்ல திணறியதை கண்டு, ஏதோ ஒரு விஷயத்தை மறைகிறான் என்று உணர்ந்தார். ஆனால் பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யாமல், வத்சலாவை பார்த்து,
"நீங்களாவது, ஜான்சி கிட்டே பேசி பாக்குறீங்களா ?"
"ஐயோ, அவ கிட்ட என்னால பேசி ஜெயிக்க முடியுமா ? எந்த நேரத்துல அவளுக்கு ஜான்சினு பேர் வெச்சாங்களோ தெரியலே. ஜான்சி ராணி மாதிரி சண்டை போடுவா. டேய், ஜகன், நீயாவது இங்கே வந்ததுல இருந்து அவ கிட்டே பேசினியா ?"
"இல்லே மம்மி, நான் அவளை கூப்பிடல.", என்று செல்போனில் மூழ்கி இருந்த ஜகன் நிமிர்ந்து பார்க்காமலே பதில் சொன்னான்.
"ஏண்டா இப்படி பண்றே, அதான் எப்ப பாத்தாலும் போனும் கையுமா இருக்கியே. ஒரு போன் இல்லே, அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் போட்டு, இங்கே வந்து இருக்கேனு சொல்ல வேண்டியது தானே ? அவ அப்பாக்காவது போன் பண்ணி சொல்லுடா."
"சரி, சரி. நான் அவளுக்கு மெசேஜ் போடுறேன்.", என்று முகத்தில் எரிச்சல் ரேகைகள் காட்டியபடி கத்தினான் ஜகன்.
"இப்படி தாங்க என்கிட்டே கத்துவான். நானும் இதோட ஒரு நூறு தடவை அவளை கூப்பிட்டு பேசுனு சொல்லிட்டேன், இன்னும் பேசுறேன்னு சொல்லிட்டே இருக்கான். ஆனா பேச மாட்டேங்குறான்."
"மம்மி, புலம்பாதே. நீங்களாவது அம்மாவுக்கு சொல்லுங்க சித்தப்பா, இப்ப நான் போன் பண்ணினா, உடனே அங்கே கிளம்பி வர சொல்லுவா. எனக்கு அங்கே போகவே பயமா இருக்கு."
"என்னடா சொல்றே, அவ உன் பொண்டாட்டி, அது உன் வீடு. அங்கே போக உனக்கு என்ன பயம் ?", என்றார் தாமு சித்தப்பா.
"அதெல்லாம் கரெக்ட் தான் சித்தப்பா. ஆனா அங்க போனா அவ பேசியே என்னை கொன்னுடுவா. அதுலே இருந்து தப்பிக்க தான் ஒரு மாசம் அவளை விட்டுட்டு இருக்கேன்னு சொல்றேன்."
"ஒரு மாசம் அவளை விட்டுட்டு இருந்தா மட்டும் எல்லாம் சரி ஆயிடுமா. நீ எப்ப திரும்ப போனாலும் அவ சண்டை போட தான் போறா."
"இல்ல சித்தப்பா, என்னை இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க. ஒரு மாசம் கழிச்சு போறேன்.", என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் ஜகன்.
அதைக் கேட்ட தாமு சித்தப்பாவின் முகம் சற்று மாறுவதை கண்ட வத்சலா,
"நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. இவன் கொஞ்சம் டென்ஷன் ஆனா போதும், இப்படி தான் எடுத்தோம் கவுத்தோம்னு பேசிடுறான்."
"இல்லே...இல்லே...அதெல்லாம் பரவால்ல. சின்ன பையன் தானே."
"என்ன சின்ன பையனோ, கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு. இன்னும் சண்டை போடாம இதுங்களுக்கு குடும்பம் நடத்த தெரியல."
"சரி விடுங்க, எல்லாம் கொஞ்ச நாள்ல சரி ஆயிடும்."
"என்னவோ போங்க. அந்த கடவுளை தான் வேண்டிட்டு இருக்கேன். அவங்க அப்பா போனவுடனே நானும் போய் சேர்ந்து இருக்கனும். இதை எல்லாம் பாக்கணும்னு என் தலையெழுத்து."
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க. இப்ப உங்களுக்கு என்ன குறை. எல்லாம் சரி ஆயிடும். தைரியமா இருங்க."
"இவனுக்கு ஒரு புள்ள பிறந்து, அதை பாத்துட்டா போதும் எனக்கு. சீக்கிரம் ஒரு பேரனோ பேத்தியோ பெத்து என் கைல கொடுத்தா நல்லா இருக்கும். அது ஒன்னு தான் இப்போதைக்கு எனக்கு இருக்குற ஒரே குறை."
"அதெல்லாம், நேரம் வரும்போது எல்லாம் நடக்கும். நீங்க கவலைப்படாதீங்க."
"சித்தப்பா...", என்று ஜகன் கூப்பிட்ட தொனியில் இருந்து அவன் ஜான்சியை ஏதோ போட்டுக் கொடுக்கும் மூடுக்கு செல்கிறான் என்பதை உணர்ந்தார் தாமு சித்தப்பா.
"என்னாடா ஜகன்..."
"எனக்கும் சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும்னு ஆசை தான் சித்தப்பா. ஆனா, அவளுக்கு என் மேலே கான்பிடன்ஸ் வந்ததுக்கு அப்புறம் தான் குழந்தைனு, கல்யாணம் ஆனா புதுசுலயே ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா."
"அதென்னடா கான்பிடன்ஸ் கண்ராவினு சொல்றா. அவளுக்கு எப்போ உன் மேலே நம்பிக்கை வந்து எப்ப குழந்தை பெத்துக்கறது. இதெல்லாம் உங்க பர்சனல் விஷயம். முதல்ல இதை பத்தி எல்லாம், நீ வெளியே சொல்றதே தப்பு. குழந்தை பெத்துக்குற விஷயத்தில் எல்லாம் நான் மூக்கை நுழைக்க விரும்பல. ஆனாலும் சொல்றேன், ஒரு குழந்தைனு வீட்டுல இருந்தா இந்த மாதிரி உப்பு பெறாத மேட்டருக்கு எல்லாம் சண்டை போட மாட்டிங்க."
"என்ன பண்றது சித்தப்பா. இப்ப கொஞ்ச நாளா தான் என் மேலே கொஞ்சம் கான்பிடன்ஸ் வந்து இருக்குனு, குழந்தை பெத்துக்க பிளான் பண்றோம். அதுக்குள்ளேயே இப்படி ஒரு பிரச்சனை."
"ஜகன், உண்மைய சொல்லனும்னா, இது வரைக்கும் உங்களுக்குள்ளே என்ன பிரச்சனைன்னு எனக்கு புரியல."
"இதையே தாங்க நானும் சொன்னேன். என்ன விஷயம்னு உண்மைய சொன்னா தானே, நம்மளும் என்ன ஏதுன்னு கேக்க முடியும். இவன் பொய் ரொம்ப சொல்றாங்க.", என்று தன் புலம்பலை ஆரம்பித்தாள் வத்சலா.
"மம்மி, இப்படி நீயே என்னை எல்லார் முன்னாடியும் விட்டு கொடுத்திடு. அதான் யாரும் என்னை மதிக்க மாட்டேங்கிறாங்க."
"வேறே யாரு முன்னாடி நான் சொன்னேன். நம்ம தாமு சித்தப்பா முன்னாடி தானே சொன்னேன். நீ சித்தப்பா கிட்ட எல்லா உண்மையையும் சொல்லு. அவங்க பாத்துப்பாங்க."
"நீ எல்லார் முன்னாடியும் என்னை விட்டு குடுத்து தான் பேசுறே மம்மி. கல்யாணம் ஆன புதுசுல கூட, ஜான்சி முன்னாடி என்னை அடிச்சே. அதான் அவளும் என்னை அடிக்குறா. கேட்டா...உங்க அம்மா கிட்ட அடி வாங்குற இல்ல, என் கிட்டேயும் அடி வாங்குனு சொல்றா."
அவ கேக்குறது நியாயம்தானே என்று நினைத்து மனதிற்குள் சிரித்தபடி, தாமு சித்தப்பா,
"நீங்க என்ன இருந்தாலும் வளர்ந்த பையனை கைநீட்டி அடிக்காதீங்க.", என்றார்.
"இல்லேங்க, ஏதோ ஒரு நாள் கோபத்துல கை நீட்டி இருப்பேன். அதை மனசுல வெச்சுட்டு இப்படி பேசி இருக்கா பாத்தீங்களா ?"
"அது மட்டும் இல்ல சித்தப்பா, அவளுக்கு எதுக்கு எல்லாம் கோபம் வரும்னே தெரியாது. ஒரு நாள் ஏதோ சண்டை வந்த போது, இது எங்க அப்பா வாங்கி குடுத்த சோஃபா, நீ உட்கார கூடாதுன்னு அப்படியே சோஃபாவில் உக்காந்துட்டு இருந்த என்னை கீழே தள்ளி விட்டுட்டா. அவங்க அப்பா வாங்கி குடுத்த டிவி, அதனாலே நீ டிவி பாக்க கூடாதுனு சொல்லுவா. அவங்க அப்பா வாங்கி குடுத்த எந்த பொருளையும் நான் தொடக்கூடாதுனு சொல்லுவா."
"என்னடா ஜகன் சொல்றே. நீங்க ரெண்டு பேரும் உபயோகப்படுத்துவதற்கு தானே அவங்க அப்பா பொருள் எல்லாம் வாங்கி போட்டார். இந்த பொண்ணு இப்படி கேள்வி கேக்குறதுக்கு, அவங்க அப்பா எதுவும் வாங்கி கொடுக்காமலே இருந்திருக்கலாம்."
"அவங்க அப்பா வாங்கி குடுத்தா இப்படி சொல்லுவா. அதே நான் ஒரு பொருள் வாங்கி குடுத்தா, அதை பத்தி ஏதாவது குறை சொல்லிட்டே இருப்பா. அவளுக்கு நான் என்ன வாங்கி கொடுத்தாலும் அதுலே சாடிஸ்பை ஆக மாட்டா. ஒரு தடவை, அவளுக்கு ரெண்டு பவுனில் நெக்லஸ் வாங்கி குடுத்தேன். அதுக்கு என்ன சொன்னா தெரியுமா ?"
"என்னடா சொன்னா ?", என்றார் தாமு சித்தப்பா.
"இதுவே அவங்க அப்பாவா இருந்தா மினிமம் ஐஞ்சு இல்லே பத்து பவுனுக்கு தான் நகை வாங்கி கொடுத்து இருந்திருப்பார். உங்க குடும்பத்துல என்ன, இப்படி ஒரு பவுன் , ரெண்டு பவுனுக்கு நகை எல்லாம் வாங்குவீங்களானு, நம்ம குடும்பத்தையே கேவலமா பேசுவா."
"பாத்தீங்களா, என்ன கொழுப்பு இவளுக்கு. நம்ம குடும்பத்தையே கேவலமா பேசி இருக்கா."
ஜகன் சொல்வதை எல்லாம் நம்பலாமா வேண்டாமா என்று மனதில் நினைத்தபடி,
"அது சரி. ஜான்சி இப்படி எல்லாம் பேசி இருக்க கூடாது. அவளுக்கு நம்ம குடுமபத்திலே எப்படி நகை போடுவோம்னு பாக்கணும்னா, அவளை வந்து உங்க பார்வதி சித்தியை பாக்க சொல்லு. நாம் குடும்பத்திலே எப்படி எல்லாம் நகை வெச்சு இருக்கோம்னு அப்ப அவளுக்கு தெரியும்.", என்று கோபத்துடன் கூறினார்.
"அது மட்டும் இல்ல சித்தப்பா, அவ ஒரு தடவை பைவ் ஸ்டார் ரிசார்ட்க்கு கூட்டிட்டு போனேன். அங்கே போனதும் என்ன சொன்னா தெரியுமா சித்தப்பா ?"
"இவன் ஒருத்தன், எதுக்கு எடுத்தாலும் தெரியுமா தெரியுமான்னு கேட்டுட்டு இருக்கான். எங்களுக்கு எப்படிடா தெரியும், நீயே சொல்லு...", என்று சற்று எரிச்சல் நிறைந்த குரலில் கூறினாள் வத்சலா.
"சரி விடுங்க, அவன் எதோ எமோஷனல்லே அப்படி பேசுறான். நீ சொல்றா ஜகன்."
"இல்ல சித்தப்பா...அங்கே போயும் அந்த இடத்தை என்ஜாய் பண்றதை விட்டுட்டு, ஏதாவது குறை சொல்லிட்டே இருந்தா. அவங்க அப்பாவா இருந்தா இந்த மாதிரி சின்ன ரிசார்ட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போக மாட்டாராம். எனக்கு புரியலே, என்னால முடிஞ்சதை செய்யுறேன். ஆனா அவளுக்கு எல்லாமே அவங்க அப்பா அம்மா தான். எந்த ஒரு விஷயமானாலும் அவங்க அப்பா அம்மா கிட்ட கேட்டுட்டு தான் நடக்கும்."
"சரி விடு. எல்லா பொண்ணுங்களும், அப்படி அப்பாவைக் கேட்டு தான் எதுவும் செய்வாங்க."
"அதில்ல சித்தப்பா, நான் நல்ல சம்பாரிச்சும், என்னை ஒண்ணுமே இல்லாதவன் மாதிரி ஃபீல் பண்ண வெக்கறா. அதான் நான் சீக்கிரம் நிறைய பணம் சம்பாரிச்சு, நம்ம குடும்பத்திலேயே பெரிய பணக்காரனா ஆகணும்னு இருக்கேன். இன்னும் ஒரு ஐஞ்சு வருஷத்துல நான் எப்படி பணக்காரனா ஆகுறேன்னு மட்டும் பாருங்க.", என்று கண்களில் வெறியோடு கூறினான்.
அவன் கண்களில் தெரிந்த வெறியை பார்த்து சற்று துணுக்குற்ற தாமு சித்தப்பா,
"அதெல்லாம் சரிதான் ஜகன். ஆனா சீக்கிரம் பணக்காரனா ஆகணும்னு ஏதாவது தப்பான வழியில போயிடாதே. ஜாக்கிரதையா இரு.", என்றார்.
தொடரும்...
No comments:
Post a Comment