Tuesday, August 2, 2011

சென்னை சில்க்ஸ் - கோவை அனுபவம்

நீங்கள் எப்போதாவது தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு பிரபல ஜவுளி கடைக்குள் சென்றுவிட்டு எதுவும் வாங்காமல் வெளியே வந்து இருகிறீர்களா. உள்ளே செல்லும் போது நம்மை வணக்கம் போட்டு வரவேற்பவர்கள், எதுவும் வாங்காமல் வெளியே வரும்போது - என்ன சார் எதுவும் வாங்கலியா, ஏன் எதற்கு என்று கேட்டு ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். ஒரு முறை குடும்பத்துடன் சென்னை சில்க்ஸ் (சென்னையில்) கடைக்குள் சென்று பின்னர் நான் மட்டும் வெளியே வந்த போது அங்கு வாசலில் நிற்கும் சிப்பந்திகள் என்னை சுலபத்தில் விடவில்லை. அவர்களிடம் விளக்கம் கூறி வெளியே வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. இது நடந்து சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அப்போது அந்த நிகழ்ச்சிக்கே - என்னடா இது கடைக்குள்ளே போயிட்டு ஒன்னும் வாங்காம வர விடமாட்டாங்க போல இருக்கே என்று எரிச்சல் பட்டவன் நான். இந்த முறை இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த கதையை கேளுங்கள்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் கடைக்கு மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் சென்றிருந்தேன். எங்கள் காரை ஒட்டி வந்த டிரைவரிடம், கடைக்கு கீழே உள்ளே பார்கிங் பகுதியில் பார்க் செய்துவிட்டு காத்திருக்குமாறு கூறிவிட்டு கடைக்குள் சென்றோம். உள்ளே சென்று நாங்கள் வாங்க விரும்பிய ஆடையை தேடி பார்த்தோம், எதுவும் சரியாக இல்லை. யாரவது உதவிக்கு வருவார்களா என்று பார்த்தோம். ஓரிருமுறை கேட்டும், அந்த பக்கம் யாரும் வரவில்லை. எங்களுக்கும் நேரம் இல்லாததால் சரி, இன்னொரு நாள் வந்து பாத்துக்கலாம், மத்த பொருள் எல்லாம் போய் வாங்கிட்டு வரலாம் என்று கூறி அங்கிருந்து கிளம்பினோம். சென்ற முறை சென்னையில் ஏற்பட்டது போல, வெளியே செல்லும் போது யாரும் எங்களை கேள்வி கேட்கவில்லை. பரவால்லியே, இப்போ கொஞ்சம் மாறி இருக்கே நம்ம ஊரு என்று பெருமையுடன் கூறினேன். அதன் பிறகு, அருகில் மற்ற கடைகளுக்கு சென்றுவிட்டு சுமார் அரை மணிநேரம் கழித்து சென்னை சில்க்ஸ் வாசலுக்கு திரும்பினோம். ட்ரைவரை செல்போனில் அழைத்து கடை வாசலுக்கு வருமாறு கூறிவிட்டு காத்திருந்தோம். சில நிமிடங்களில் கார் வந்து நிற்க நாங்கள் உள்ளே உட்கார முற்படும் போது, அங்கு வேலை செய்யும் ஒருவர் மூச்சிறைக்க ஓடிவந்தார். அதுக்கு அப்புறம் எங்களுக்குள் நடந்த சம்பாஷணையை கீழே பாருங்கள்.

கொஞ்சம் நில்லுங்க, பர்சேஸ் ப்ரூப் எங்கே காட்டுங்க என்று சற்று அதிகாரமான குரலில் கேட்டார்.

அதற்கு நான் அவரிடம், சார், நாங்க வாங்கனும்னு நினைச்சு வந்த டிரஸ் கிடைக்கலே, தவிரவும் எங்களுக்கு கடையிலே உதவவும் யாரும் வரலே. அதனாலே வெளிலே வந்து வேறே பொருட்கள் வாங்கிட்டு கிளம்புறோம். பார்கிங் சார்ஜ் எதாவது வேணும்னா கூட குடுக்குறோம்னு பொறுமையா சொன்னேன்.

அதெல்லாம் முடியாது, இங்கே பார்கிங் பண்ணினா எதாவது வாங்கியே ஆகணும்.

இது சுரீர் என்று எனக்கு கோபத்தை கூடிவிட்டது. என்னங்க இது அநியாயம், உங்க கடைக்கு ஒரு பொருள் வாங்கனும்னு வரோம், அது புடிக்கலேனா என்ன பண்றது. கார் பார்க் பண்ணினதுக்காக எதாவது வாங்கியே ஆகணுமா என்ன ?

ஆமாம் நீங்க கண்டிப்பா எதாவது வாங்கியே ஆகணும்.

சரி, நான் உங்கள் மேனேஜர் கூட பேசணும் என்றேன்.

இங்கே நான் தான் மேனேஜர், எதுவா இருந்தாலும் என்கிட்டே பேசுங்க.

ஒ, அப்படியா, இந்தாங்க நூறு ரூபா, இதை பார்கிங் சார்ஜா வேணும்னா வெச்சுகோங்க, இல்லேனா எதாவது பொருள் வாங்கினதா நினைச்சுங்கோங்க. பேமிலி கூட வந்து இருக்கேன், இப்படி நடு ரோட்டுலே வெச்சு பேச்சை வளர்க்க நான் விரும்பலே.

அதெல்லாம் முடியாது, நீங்க கடைக்குள்ளே வந்து எதாவது வாங்கியே ஆகணும்.

எனக்கு உஷ்ணம் கூடிவிட்டது. இங்கே பாருங்க, இந்த மாதிரி என்னை ஏதாவது வாங்கறதுக்கு கட்டாயபடுத்தினா, இனிமேல் இந்த கடைக்கு நான் வரமாட்டேன். அது உங்களுக்கு ஓகேன்னு நினைசீங்கனா நான் கடைக்குள்ளே வந்து எதாவது வாங்குறேன் என்றேன்.

சரி, நீங்க இனிமேல் கடைக்கு வரவேண்டாம், இப்போ உள்ளே வந்து எதாவது வாங்குங்க.

நான் உள்ளே நுழைந்து முதலில் தென்பட்ட செக்சனில் இருந்து  கைக்குட்டை வாங்கி அதற்கு பணமும், அந்த கைக்குட்டையையும் அவருக்கு அன்பளிப்பாக! கொடுத்துவிட்டு வந்தேன்.

பின் குறிப்பு: இது பற்றி சென்னை சில்க்ஸ் வெப்சைட்டில் உள்ள எல்லா ஈமெயில் முகவரிக்கும் எழுதி சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இதுவரை எந்த பதிலும் இல்லை.



25 comments:

ILA (a) இளா said...

//செக்சனில் இருந்து கைக்குட்டை வாங்கி //
வாங்கமலே இருந்திருக்கலாம். ஆனா நீங்க வாங்கி அவுங்ககிட்டேயே கடாசிட்டு வந்தது இன்னும் அருமை

Narayanan Narasingam said...

வாங்க இளா,

எனக்கும் வாங்காம இருந்திருக்கணும்னு பின்னாடி யோசிச்சி பார்த்ததிலே தோணிச்சு. ஆனா அந்த நேரத்திலே அங்கே குடும்பத்தோட நின்னு போராட மனசு இடம் கொடுக்கலே.

bandhu said...

நீங்க பண்ணது சரி. Hopefully, the hanky was below Rs.100 !

Narayanan Narasingam said...

வாங்க bandhu, ஆமாம், அது இருபத்திஐந்து ருபாய் தான்.

வரதராஜலு .பூ said...

//நான் உள்ளே நுழைந்து முதலில் தென்பட்ட செக்சனில் இருந்து கைக்குட்டை வாங்கி அதற்கு பணமும், அந்த கைக்குட்டையையும் அவருக்கு அன்பளிப்பாக! கொடுத்துவிட்டு வந்தேன்.//

நச்சுன்னு செருப்பால அடிச்சாக்கூட வலிச்சிருக்காது. சூப்பர் சார். ஆனாலும் அவனுங்க திருந்தமாட்டானுங்க

Narayanan Narasingam said...

//நச்சுன்னு செருப்பால அடிச்சாக்கூட வலிச்சிருக்காது. சூப்பர் சார். ஆனாலும் அவனுங்க திருந்தமாட்டானுங்க//

ஆமாம் சார். அவங்களுக்கு தெனாவட்டுதான், இவன் ஒருத்தன் வரலைனா என்ன, நம்ம கிட்டே வந்து விழ ஆயிரம் பேரு இருக்காங்கனு. இந்த மனோநிலை அந்த ஒரு நபருக்கு மட்டுமா இல்லை அந்த கடை முதலாளிக்கு இருக்கிற மனோபாவம் தான் படிபடியா ஊழியர்கள் வரை வந்திருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.

வருகைக்கு நன்றி வரதராஜலு.

Anonymous said...

இந்த மாதிரி சொறி நாய்களுக்கு நீங்கள் கொடுத்த பாடம் சரியானது!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நீங்க செஞ்சது சரியே...

Anonymous said...

wht hapnd 2 "customer is the king " concept?

Unknown said...

அவங்க எப்பவுமே இப்படித்தாங்க, திருப்பூருலயும் இதே நிலைமைதான், எதாச்சும் வாங்கியே ஆகனும்

ராஜ நடராஜன் said...

இது நல்லாயிருக்கே!நான் யாரோ இந்திய பயணம் போறாங்கன்னு நினைச்சு பின்னூட்டம் போட்டா கடைசில கோவை ராஜ வீதியில் வந்து நின்னுகிட்டிருக்கீங்களே:)

பூங்குழலி said...

இது பல கடைகளிலும் நடைமுறையில் இருக்கிறது ..ஒருமுறை சென்னை போத்தீஸில் தீபாவளி சமயம் ஐநூறு ரூபாய்க்காவது வாங்காவிட்டால் இருநூறு ரூபாய் தர வேண்டும் என்று கூறினார்கள்

ராஜ நடராஜன் said...

//அதெல்லாம் முடியாது, இங்கே பார்கிங் பண்ணினா எதாவது வாங்கியே ஆகணும்.// இது எந்த ஊரு நியாயம்?சென்னை சில்க்ஸ்!கோவை பேரை கெடுக்காதீங்கய்யா!சரி வந்ததற்கு நானும் ஒரு கைக்குட்டை கதை சொல்கிறேனே:)ரயில்வே ஸ்டேசன் கீதா ஓட்டல் முக்கு சந்துல கைக்குட்டை வாங்கும் பெண்மணி சார்!சார் என்றே விளித்த போது இல்லம்மா நீங்க என்னை அண்ணா என்றே விளிக்கலாமென்றேன்.இல்ல சார்!சார்ன்னு சொல்லனுமின்னுதான் ட்ரெயினிங்க் சொல்லிக்கொடுத்திருக்காங்க என்றார்.முன்னுக்கு வாங்கண்ணா பேருந்து நடத்துனர் சொற்களிலிருந்து நாமும் நிறைய தூரம் பயணித்திருக்கிறோம்.

Anonymous said...

திருடனுங்க

Narayanan Narasingam said...

//wht hapnd 2 "customer is the king " concept? //

அதெல்லாம் இந்தியாவிலே அதுவும் குறிப்பா தமிழ்நாட்டிலே செல்லாது செல்லாது (நாட்டாமை ஸ்டைலில் படிக்கவும்)

Narayanan Narasingam said...

//அவங்க எப்பவுமே இப்படித்தாங்க, திருப்பூருலயும் இதே நிலைமைதான், எதாச்சும் வாங்கியே ஆகனும்//

வாங்க இரவு வானம். ரொம்ப அநியாயம் பண்றாங்க. என்ன பண்ண வேற வழி இல்லாம அவனுங்க கிட்டே போய் வாங்கித்தான் ஆகணும்.

Narayanan Narasingam said...

//இது நல்லாயிருக்கே!நான் யாரோ இந்திய பயணம் போறாங்கன்னு நினைச்சு பின்னூட்டம் போட்டா கடைசில கோவை ராஜ வீதியில் வந்து நின்னுகிட்டிருக்கீங்களே:)//

வாங்க ராஜ நடராஜன் சார், என்ன அப்பிடி கேட்டுடீங்க, இது தங்கமணி ஊரு, வரலேனே அவ்வளவு தான்.

Narayanan Narasingam said...

//இது பல கடைகளிலும் நடைமுறையில் இருக்கிறது ..ஒருமுறை சென்னை போத்தீஸில் தீபாவளி சமயம் ஐநூறு ரூபாய்க்காவது வாங்காவிட்டால் இருநூறு ரூபாய் தர வேண்டும் என்று கூறினார்கள்//

வாங்க பூங்குழலி, இது இன்னும் அநியாயம். எவ்வளவு ரூபாய்க்கு வாங்கனும்னு சட்டமா ? டூ மச்.

Narayanan Narasingam said...

//நானும் ஒரு கைக்குட்டை கதை சொல்கிறேனே:)//

கதையை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ராஜ நடராஜன் சார்.

Narayanan Narasingam said...

//நீங்க செஞ்சது சரியே...//

வாங்க பிரகாஷ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thennavan said...

அநியாயம்ங்க இவனுங்க கோடிக்கணக்குல விளம்பரத்துக்கு செலவு பண்ணுவானுங்க ஆனா தங்கள் நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளர்களை மதிக்கமட்டனுங்க .விளம்பரத்தை பார்த்து விட்டில் பூச்சிகளை போல் சனங்க இருக்கும்வரை இவனுங்க இப்படித்தான் ஆடுவானுங்க . எங்க ஊர் திருநெல்வேலி போத்திஸ் இல் இலவசமாகவே பார்கிங் வசதி செய்து கொடுத்துள்ளனர் . நீங்கள் இங்கு பார்கிங் செய்து விட்டு rmkv கூட செல்லலாம் .
--

Narayanan Narasingam said...

//அநியாயம்ங்க இவனுங்க கோடிக்கணக்குல விளம்பரத்துக்கு செலவு பண்ணுவானுங்க ஆனா தங்கள் நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளர்களை மதிக்கமட்டனுங்க//

சரியா சொன்னீங்க தென்னவன். இவனுங்க விளம்பரத்துக்கு லட்ச கணக்குலே செலவு பண்ற பணத்தை பார்க்கும் போது வாடிகையளர்களுக்கு இலவசமாக பார்கிங் கொடுக்கலாம். நீங்க சொல்றதை பாக்கும்போது நெல்லையில் பரவால்லே போல இருக்கிறது.

வருகைக்கு நன்றி தென்னவன்.

Indian said...

வாடிக்கையாளரை மதிக்கத் தெரியாத இக்கடையினுள் காலடி வைக்கவே யோசிப்பேன்.

Narayanan Narasingam said...

//வாடிக்கையாளரை மதிக்கத் தெரியாத இக்கடையினுள் காலடி வைக்கவே யோசிப்பேன்.//

வாங்க இந்தியன். நல்லா சொன்னீங்க. என்னோட எண்ணமும் அதேதான். நம்மைப்போல் ஒவ்வொருவரும் நினைத்தால் தான் வாடிக்கையாளர் சேவை இந்தியாவில் சரியாகும்.

Anonymous said...

anda managerukku sariyanapadam karpikkavenum

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...