முன் குறிப்பு: சமீபத்தில் சுஜாதாவின் பேசும் பொம்மைகள் நாவலை எடுத்துப் படித்தேன். அதைப் படித்ததின் தாக்கத்தினால் உருவான கதை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். கொஞ்சம் கேட்சிங்கா இருக்கட்டுமேனு நடுவுல கொஞ்சம் நினைவுகளைக் காணோம்னு தலைப்பு வைத்திருக்கிறேன். இனி கதைக்குச் செல்வோம்.
சென்னை. டிசம்பர், 19, 2405
அமாம் டாக்டர், நரேஷ் பற்றிய அத்தனை நினைவுகளையும் என்னிடம் இருந்து அழித்து விடுங்கள்.
டாக்டர் மாசிலாமணி கண்ணாடி மேஜைக்கு பின்னாலிருந்து, தீர்க்கமாய் அவன் முகத்தை சில வினாடிகள் பார்த்தார்.
'குமார், பொதுவா நான் ஒரு பேஷன்ட் பத்தி தகவல்களை அடுத்தவங்களுக்கு சொல்ல மாட்டேன். ஆனாலும், உங்களுக்காக...'
'நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு தெரியும் டாக்டர். நரேஷ் போன வாரம் உங்க கிட்டே வந்து என் நினைவுகளை அழிச்சது தெரிஞ்சுதான் வந்திருக்கேன். ஒரு சில பிரச்சனைகளாலே நாங்க கொஞ்ச நாள் பேசாமே இருந்தோம். ஆனா அவன் இந்த அளவுக்கு போவான்னு நான் நினைக்கலே. ப்ளீஸ் டாக்டர், நரேஷின் நினைவுகளை என்னிடம் இருந்து அழித்து விடுங்கள்.'
'நல்லா யோசனை பண்ணிதான் சொல்றீங்களா குமார். இந்த காலத்து யங்ஸ்டர்ஸ் தொட்டதுக்கெல்லாம் நினைவுகளை அழிக்கும் முடிவுக்கு வந்துடுறாங்க. கடந்த நானூறு வருடங்களில் நாம் ந்யுரோ சயின்சில் எவ்வளவோ முன்னேறிட்டோம். ஆனாலும் நினைவுகளை அழிப்பது கொஞ்சம் ரிஸ்கான மேட்டர் தான். நரேஷின் நினைவுகளை அழிப்பதால் அதனுடன் சேர்ந்த மற்ற முக்கிய நினைவுகளும் அழிந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன். நரேஷ் உங்களுக்கு சின்ன வயசில் கூட்டல் கழித்தல் சொல்லி கொடுத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நரேஷின் நினைவுகளை உங்களிடம் இருந்து அழித்தால், உங்களுக்கு கூட்டல், கழித்தல் கூட மறந்து போகலாம். சிலருக்கு இதனால் மனநிலை பாதிக்கும் நிலைமை கூட ஏற்பட்டிருக்கிறது. நீங்க வேணும்னா ரெண்டு நாள் யோசிச்சி முடிவு பண்ணுங்க. '
'அதுக்கு அவசியமில்லை டாக்டர். நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். அவன் கூட என்னாலே இனிமேல் சேர முடியாது. தவிரவும் அவன் என் நினைவுகளை அழித்துவிட்டான். இனிமேல் நரேஷின் நினைவுகளுடன் வாழ்வது எனக்கு நரகம் போல இருக்கு. ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க.'
'ஓகே, ஒரு சின்ன டெஸ்ட் எடுத்துட்டு ப்ரோசீஜரை ஸ்டார்ட் பண்ணிரலாம். உங்க தலையிலே பின்னாடி ஒரு மைக்ரோ இன்சீஷன் போட்டு சின்ன கம்ப்யூட்டர் சிப் அனுப்புவோம். அது உள்ளே சென்றதும் நரேஷின் நினைவுகளை அழிக்க இந்தக் கம்புயுடரில் இருந்து கட்டளைகள் செலுத்துவோம்.. இதில் முக்கியமானது என்னவென்றால், நான் ஸ்டார்ட் சொன்னதும் முதல் 5 வினாடிகள் நீங்கள் நரேஷை பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். உங்களிடம் நரேஷின் போட்டோ எதாவது இருந்தால் அதைப் பார்த்தபடி இருந்தால் கூட போதும்.'
'அவன் போட்டோ என் போன்லே இருக்கு டாக்டர். '
'ஓகே, கொஞ்சம் சாய்ந்து ரிலாக்ஸா உட்காருங்கள், கண்களை மூடிக்கொள்ளுங்கள். ஒரு சின்ன டெஸ்ட் எடுக்கணும். ஐந்து நிமிடத்தில் நீங்கள் இந்த ப்ரோசீஜரை தாங்குவீர்களா என்று இந்தக் கம்புயுடர் சொல்லிவிடும். '
ப்ளீஸ் வெயிட் என்றபடி பரபரவென்று குமாரின் உடலெங்கும் சில ஒயர்களை மாட்டுவதில் மும்முரமாக இருந்தார்.
வட்ட வடிவத்தில் இருந்த பெரிய ஊதா நிற பட்டனை டாக்டர் அழுத்திய சில நிமிடங்களில், கம்புயுடரில் பச்சை விளக்கு விட்டு விட்டு ஒளிர்ந்தது.
'குட், எல்லாம் ஓகே. நான் ஸ்டார்ட் சொன்னதும் நரேஷை நினைத்தபடி அவன் போட்டோவையும் பாருங்கள். அதன் பின்னர் உங்களுக்கு நரேஷின் அத்தனை நினைவுகளும் ஒவ்வொன்றாக வந்து பின்னர் அழிந்துவிடும். ஆர் யு ரெடி ?'
குமாரின் அடிவயிற்றில் ஒரு பயம் 'ஜிவ்வ்' வென்று ஏறியதைப் பொறுத்துகொண்டு, நடுங்கும் குரலில்... 'எ..ஸ், எஸ்... ரெடி டாக்டர்' என்றான்.
'ஓகே, ரிலாக்ஸா இருங்க. ஸ்டார்டிங் நவ்', என்று சுவிட்சை ஆன் செய்தார்.
நரேஷின் போட்டோவை பார்த்து அவனை நினைத்தபடி இருந்த சில நொடிகளில், நரேஷை முதலில் பார்த்ததும் பேசிய வரிகள் நினைவுக்கு வந்தது.
'என்னமோ தெரியலே, உங்களை பார்த்த எதோ ரொம்ப நாள் பழகியது போல இருக்கு.'
'எனக்கும் அப்படிதான் தோணுது, ஐ ஆம் நரேஷ் என்று கையை நீட்டினான்'
பின்னர் நரேஷுடன் பழகியது, சினிமா பார்த்தது, ஒன்றாக சுற்றியது என்று ஒவ்வொன்றும் நினைவிற்கு வந்து அழிந்தது.
இரண்டு மணி நேரத்திற்கு பின், மெதுவா கண்ணை திறந்து பாருங்க என்று டாக்டரின் குரல் கேட்டது.
'குமார், எவரிதிங் வெண்ட் ஸ்மூத். உங்களுக்கு கொஞ்சம் டையர்டா இருக்கும். நீங்க இன்னும் ரெண்டு நாள் இங்கே தங்கி இருக்கணும். நல்லா ரெஸ்ட் எடுங்க. நீங்க டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போனதும், எதாவது வலி இருந்தால் உடனே கால் பண்ணுங்க.'
'தேங்க்ஸ் டாக்டர், ஒரு கொஸ்டின். நான் எதுக்காக இங்கே வந்தேன்னு சொல்ல முடியுமா. இங்கே வந்தது நினைவிருக்கு, எதுக்காக வந்தேன்னு தான் தெரியலே.'
ஹா ஹா ஹா, என்று எதோ பெரிய ஜோக்கை கேட்டது போல பலமாக சிரித்தார் டாக்டர் மாசிலாமணி.
'இங்கே வருகிற ஒவ்வொரு பேஷண்டும் இந்த ப்ரொசீஜர் முடிந்ததும் கேட்கிற கேள்விதான். நீங்கள் ஒரு விஷயத்தை உங்கள் நினைவில் இருந்து அழிப்பதற்காக வந்திருந்தீர்கள். சாரி குமார், இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அப்படிச் சொன்னால் உங்களுக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் உபயோகம் இல்லாமல் போய்விடும். இதைப்பற்றி நினைக்காமல் ஊட்டி இல்லை கொடைகானல் போய் ஒரு வாரம் ரெஸ்ட் எடுங்க. ஆல் தி பெஸ்ட்.'
'ஓகே, தேங்க்ஸ் ஆகைன் டாக்டர்.'
அடுத்த சில நாட்களில் ஊட்டியில் பொட்டானிகல் கார்டனில் நடந்து கொண்டிருக்கும் போது எதிரில் சிநேகமாக சிரித்த முகத்துடன் வந்தவனைப் பார்த்ததும் ஏனோ குமாருக்கு பேசத் தோன்றியது.
'ஹலோ, நீங்க யாருன்னு தெரியலே. ஆனா, உங்களை எங்கேயோ பார்த்து ரொம்ப நாள் பழகியது மாதிரி இருக்கு.'
'எனக்கும் அப்படிதான் தோணுது, ஐ ஆம் நரேஷ் என்று கையை நீட்டினான்.'