Sunday, August 28, 2011

ஐரீன் அப்டேட் - புகைப்படங்களுடன்

ஐரீன் சூறாவளியின் சீற்றம் ஒரு வழியாக குறைந்தது. வடகிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் பலத்த வெள்ளம் ஏற்பட்டிருகிறது. இப்போது கனடா பார்டரை நோக்கி முன்னேறி இருக்கிறது. இதுவரை இருபத்தி மூன்று பேர் ஐரீனால் உயிரிழந்திருகிரார்கள் என்று தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஐரீன் வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. சராசரியாக ஏழு இன்ச் மழை பொழிந்திருகிறது. ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துகொண்டிருகிறது, இது நாளை வரை தொடரும் என்று கூறுகிறார்கள். இன்னும் பல இடங்களில் பலத்த காற்று (சுமார் ஐம்பது மைல் வேகத்தில்) வீசிகொண்டிருகிறது. சுமார் நான்கு மில்லியன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி இருக்கின்றன. இவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு வாரமோ அதற்கு மேலோ ஆகலாம். இங்கே கிழே உள்ள சில புகைப்படங்களும் மற்றும் காணொளி ஐரீனின் சீற்றத்தை விளக்கும்.










காணொளி:



போர் - சிறுகதை



பீட்டர் விமானத்தில் இருந்து கீழே தெரிந்த எதிரிகள் மீது குண்டுகளை விடாமல் வீசிக்கொண்டிருந்தான். இன்னும் சிறிது தூரம் செல்லத்தான் எரிபொருள் இருந்தது. அதற்குள் எத்ரிகளை கொன்று குவித்து விட்டு அடுத்த இலக்கை அடைய வேண்டும். நடுநடுவில் வந்த பெரிய கட்டடங்கள் மீது குண்டுகளை வீசினான்.

கீழிருந்து எதிரிகள் தங்கள் பீரங்கிகளால் விமானத்தை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீசும் குண்டுகள் விமானத்தின் மீது பட்டுவிடாமல் வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான்.

திடீர் என்று விமானத்தின் பின்னால் இருந்து எதிரிகள் வீசிய குண்டு விமானத்தின் பின் பகுதியில் பட்டு, விமானம் நிலை தடுமாறி கிழே வேகமாக விழ ஆரம்பித்தது.

பீட்டர், அங்கே என்ன பண்றே. வீடியோ கேம் விளையாடியது போதும், சீக்கிரம் வந்து ஹோம் வொர்க் பண்ணு.


Saturday, August 27, 2011

மியுசியம் - 55 வார்த்தை சிறுகதை



இது ஒரு Sudden Fiction வகை கதை. இதை சுஜாதா அவர்கள் உடனடிக்கதை என்று குறிப்பிடுவார். உடனடிக்கதைகள் எளிமையானவை. கதை எழுதுபவனுக்கு சம்பவங்களும் கதாபாத்திரங்களும் நன்றாக தெரியும். ஆனால், எல்லாவற்றையும் வாசகர்களுக்கு காட்ட மாட்டான். ஒரு பகுதியை மட்டும் காட்டி மற்றவற்றை வாசகரை உணர வைப்பான். உடனடிக்கதைகள் 55 வார்த்தைகளுக்குள் இருக்கவேண்டும் என்ற நியதி இல்லாவிட்டாலும், இங்கு 55 வார்த்தைகளில் ஒரு உடனடிக்கதையை கொடுக்க முயற்சித்து இருக்கிறேன். இனி கதைக்கு போகலாம்.


---------------------------------


சரி, சரி, சீக்கிரம் கிளம்புங்க. லேட்டா போனா உள்ளே அனுமதிக்கமாட்டாங்க.

ஒரு நிமஷங்க, இதோ கிளம்பிட்டோம்.

சில நிமிடங்களில் அனைவரும் கிளம்பி வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், அது சட்டேன்று வேகம் எடுத்தது.

சில மணிநேர பயணத்திற்கு பின் , புவிஈர்ப்பு விசையை லேசாக உணர ஆரம்பித்த சில நிமிடங்களில் ஜிவ்வென்று சென்று பூமியில் தரை இறங்கியது.

சுவாசிக்க மாஸ்க் போட்ட பின்னர் கீழிறங்கி, குழந்தைகளிடம் - இது தான் பூமி, நம்மோட மூதாதையர்கள் எல்லாம் இங்கே தான் வாழ்ந்தாங்க என்றேன்.

Friday, August 26, 2011

ஐரீனு ஐயாம் நாட் லவ் யு


ஆடுகளம் படத்திலே தனுஷ் சொல்ற வசனம் மாதிரி இருக்கேன்னு பாக்குறீங்களா. என்ன பண்ண, இப்ப இங்கே இருக்குற சூழ்நிலையிலே அதை தான் சொல்ல முடியும் போல இருக்கிறது. அண்ணன் இப்ப குளிக்கிறார், அண்ணன் டிபன் சாப்பிடுறார், அண்ணன் கிளம்பிட்டார் என்று எதோ ஒரு படத்தில் லைவ் கமெண்ட்ரி கொடுப்பது போல அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிற சூறாவளி ஐரீன் பற்றி டிவியில் எந்த சேனல் போட்டாலும் பேசிக் கொண்டிருகிறார்கள். நார்த் கேரலினாவில் இருந்து மக்களை வழுக்கட்டாயமாக வெளியேற சொல்லிவிட்டார்கள். அடுத்தது எந்தெந்த பகுதியில் இருந்து மக்களை ஊரைவிட்டு கிளம்ப சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. வீட்டை விட்டு மக்கள் வெளியே பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்று கொண்டிருகிறார்கள். என்ன செல்வம் சேர்த்து என்ன, இயற்கையின் முன்னால் ஒரு கொம்பனும் நிற்க முடியாது என்பது தான் உண்மை. அதன் சீற்றத்தில் இருந்து விலகி தலை தெறிக்க ஓட மட்டுமே முயற்சிக்கலாம் என்பது தெரிகிறது. 

இப்படி நிலை இருக்கும்போது, மக்கள் அனைவரும் கடைகளுக்கு சென்று உணவு பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஈமெயில் மற்றும் டிவியிலும் எல்லா பயபுள்ளங்களும் போய் ஒழுங்கா சாப்பாடு, தண்ணி (ஹலோ, வெறும் குடிக்கிற தண்ணி தான், ஓவரா கற்பனை பண்ணாதீங்க) எல்லாம் வாங்கி வெச்சுகோங்க என்று ஓயாம சொல்லிட்டு இருக்காங்க. சரி இவ்வளவு சொல்றாங்க, அதுக்கு மரியாதையை கொடுத்தாவது நம்மளும் போய் எதாவது வாங்கி ஸ்டாக் பண்ணுவோம்னு கடைக்கு போனேன். அங்க போய் பாத்தா, ஆளாளுக்கு ஷாப்பிங் கார்ட்டை புல்லா நிறைச்சிட்டு இருந்தாங்க. என்னடா ஒரு வருஷத்துக்கு தேவையானதை வாங்குறாங்க போலன்னு நினைச்சுகிட்டேன். அவங்களை சொல்லியும் குத்தம் இல்லை. ஏன்னா, அமெரிக்காவில் சாதரணமாக கரண்ட் போகாது, ஆனால் அப்படி போனால், திரும்பி வர சில நேரங்களில் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். அதனாலே பிரிட்ஜிலே வைக்க வேண்டிய அவசியம் இல்லாத சாப்பாட்டு ஐட்டங்களா வாங்கி குவிக்கிறாங்க. எந்த நேரத்திலே ஊரை விட்டு வேறே இடத்துக்கு போக சொல்லுவாங்கனு தெரியாமே, மக்கள் எல்லாம் காருக்கு பெட்ரோல் நிரப்பிகிட்டு இருக்காங்க. இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் -ல் இருந்து கீழே பூமியை பார்க்கும் அஸ்டிராநட்ஸ் கூட, இங்கே இருந்து பாக்கவே ரொம்ப பயங்கரமா தான் இருக்கு என்கிறார்களாம்.

ஐரீன் அடுத்த இரு நாட்களில் எந்த பக்கம் திரும்புவானு எல்லாரும் உன்னிப்பா பாத்துட்டு இருக்கோம். பாக்கலாம் ஒன்னும் பெரிசா பிரச்சனை இல்லாம ஐரீன் கரை கடந்தால் நன்றாக இருக்கும்.

உங்க பிரெண்ட்ஸ் இந்த லிஸ்ட்லே இருக்காங்களா ?



பேஸ்புக் அக்கௌன்ட்லே இருநூறு முன்னூறு பிரண்ட்ஸ் வெச்சு இருக்கறவங்களை பார்த்தா ஆச்சரியமா இருக்கும். எப்படி இத்தனை பேரை நியாபகம் வெச்சு அவங்க கூட பழகுறாங்கன்னு. இந்த மாதிரி சோசியல் நெட்வொர்கிங் வெப்சைட்லே அம்பது பேருக்கு மேலே பிராக்டிகலா பராமரிக்கறது ரொம்ப கஷ்டம்னு ஏதோ ஒரு ஆர்டிகல் படிச்சேன். சரி இந்த பதிவு பேஸ்புக் பத்தி இல்லை. இப்போ விஷயத்திற்கு வரேன். எல்லோருக்கும் பிரண்ட்ஸ் இருப்பாங்க. ஒவ்வொரு ப்ரெண்டும் ஒவ்வொரு ரகம். அப்பிடி இருக்குற வித விதமான பிரண்ட்ஸ் டைப் பத்தி என்னோட அனுபவத்துலே தெரிஞ்சதை இங்கே பகிர்ந்துக்குறேன்.

டிஸ்கி: இதை மத்தவங்களை குத்தம் சொல்றா மாதிரி பாக்காதீங்க. எல்லார் கிட்டேயும் நிறை குறைகள் இருக்கு. நம்ம நண்பர்கள் கிட்டே குறைன்னு நாம நினைப்பதை, எடுத்து சொல்லலாம் இல்லேன்னா அந்த ஏரியாவை மட்டும் அவாய்ட் பண்றது நல்லது. எனக்கு தெரிஞ்ச பிரண்ட்ஸ் வகைகளை இங்கே வரிசைப்படுத்தி இருக்கேன். இந்த வகையில் சில நேரங்களில் நானும் இருப்பேன். சும்மா ஜாலியா எடுத்துட்டு, உங்களோட அனுபவத்தையும் சொல்லுங்க. 


பொசசிவ் பொன்னுமணி / பொன்னமா:

இவங்க எப்படினா, நாம இவங்க கிட்டே மட்டும்தான் பிரெண்டா இருக்கணும்னு நினைப்பாங்க. மத்த யார் கிட்டேயும் பழகினா இவங்களுக்கு பிடிக்காது. அப்பிடி பழகினாலும் இவங்களையும் கூட்டு சேத்துகிட்டா ஓகே, இல்லேனா ஒரு வழியாக்கிடுவாங்க. அதே சமயம் இவங்க நம்மளை தவிர்த்துட்டு நிறைய பேர் கிட்டே பழகுவாங்க, அதை நாம ஒன்னும் கேட்க கூடாது.

திடீர் தங்கப்பன் / தங்கம்மா:

இவங்க ஆரம்பத்தில நல்லா பழகுற மாதிரி இருக்கும். அப்புறம் சில நாட்கள் கழிச்சு தான் அவங்க சுயரூபம் ஓரளவுக்கு புரியும். திடீர்னு காரணமே இல்லாம நம்மளை கண்டுக்க மாட்டாங்க. அதுக்கு அப்புறம் ஒரு நாள் திடீர்னு பாசமழை பொழிவாங்க. நம்மளாலே இன்னும் ஒரு மாசம் கழிச்சு ஏதாவது வேலை ஆகணும்னா, இன்னிக்கே பிட்டை போட ஆரம்பிச்சுருவாங்க. இதுலே இன்னொரு விஷயம் என்னனா, சில நேரங்கள்லே இந்த மாதிரி இடைவெளி விட்டு பேச ஆரம்பிக்கும் போது,  என்ன நீங்க எங்க கூட எல்லாம் பேசறதே இல்லேன்னு நம்ம மேலேயே பழியை தூக்கி போட்டு நம்மளை ஒரு நிமிஷம் கண்புயுஸ் பண்ணிருவாங்க.

போட்டு கொடுக்கும் பொன்னம்பலம் / பொன்னாத்தா:

இவங்க எப்படினா, யாரையாவது பத்தி தப்பா ஒரு வார்த்தை நம்ம கிட்டே எடுத்து விடுவாங்க. நம்மளும் உணர்ச்சிவசப்பட்டு ஆமாம் கரெக்டு, அவங்க சரியில்லை என்று ஓவரா கொட்டிவிட்டோம் என்றால் அவ்வளவு தான். அடுத்த நாளே அந்த விஷயம் நாம் யாரை குறை கூறி பேசினோமோ அவர்கள் காதுக்கு சென்றடையும்.

பா(யா)ச மணி:

சூப்பர்ஸ்டார் நடிச்ச வள்ளி படத்தை பார்த்தவங்களுக்கு இந்த கேரக்டர் ஈசியா புரியும். அதிலே பயில்வான் ரங்கசாமி ஒரு கூட்டத்தோட மரத்தடியிலே உக்காந்து பேசிட்டு இருப்பார். பேசிட்டு இருந்ததிலே, யாராவது ஒருத்தன் எழுந்து போனா, அவனை பத்தி கேவலமா பேசுவார். அதே டைப் ஆளுங்க நிறைய பேரு நாட்டுலே இருக்காங்க. நம்மளை பத்தி மத்தவங்க கிட்டே தப்பா பேசுவாங்க, நம்மளை நேர்ல பாத்தா, வாயிலையே பாயசம் வைப்பாங்க.

தங்கமணி பிரியன்:

இவர் எப்படினா தன் மனைவி யார்கிட்டே பழக சொல்றாங்களோ அவங்க கிட்டே மட்டும் தான் பேசுவாரு, பழகுவாரு. பல நாள் பழகினவரா இருந்தாலும், பெண்களுக்குள்ளே ஒரு பிரச்சனைனா, இவர் அந்த நட்பை முறித்து கொள்வார். (நான் இப்படி கிடையாது...ஹி ஹி...)

பல்டி பரந்தாமன்:

பல வருடங்களுக்கு முன்னர் படித்த ஜோக்:

அவர்: என்ன சார், குழந்தைய கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க ?
இவர்: கோர்ட்லே சாட்சிகள் எல்லாம் பல்டி அடிக்கிறாங்கன்னு பேப்பர்லே பாத்தேன், அதான் காட்டிட்டு போகலாம்னு வந்தேன்.

பல்டி பரந்தாமன் எப்படினா, எதாவது ஒரு விஷயத்திற்கு முதலில் சரி என்று தலையாட்டுவார். பின்னர் அவர் மனைவி வேண்டாம் என்று சொன்னால் அப்படியே பல்டி அடித்து வேண்டாம் என்று சொல்லிவிடுவார். உதாரணதிற்கு ஒரு சிறிய கதை இங்கே...

பரந்தாமனிடம் அவர் நண்பர் ஒருவர், அண்ணே, வரீங்களா, வேலூர்லே ஒரு வேலை இருக்கு, போயிட்டு வரலாம். எவ்வளவு நேரம்ணே ஆகும் போய்ட்டு வர்றதுக்கு...

அதுக்கு என்னடா, வரேன். இங்கே இருந்து பாரிஸ் கார்னர் போக ஒரு அரைமணி நேரம். அங்கே இருந்து பாயிண்ட் டு பாயிண்ட் பிடிச்சா மூணு மணி நேரத்துலே வேலூர். வேலையை முடிஞ்சதும், சாப்பிட்டிட்டு கிளம்பினா சாயங்காலம் ஐஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துரலாம்.

இதற்குள் பரந்தாமனின் மனைவி - என்னங்க கொஞ்சம் இங்கே உள்ளே வாங்க - உள்ளே சென்ற பரந்தாமனிடம், கிசிகிசுப்பாக, உங்களுக்கு வேறே வேலையே இல்லேன்னு நினைப்பா, இப்போ ஒன்னும் வேலூர்க்கு போக வேண்டாம். ஒழுங்கா வீட்டுல இருங்க.

பரந்தாமன் வெளியே வந்து, அது...வந்து...இந்த வேலூர்க்கு இன்னிக்கே போகணுமாடா...இப்பவே மணி எட்டரை ஆச்சு, இன்னும் குளிச்சு, சாப்பிட்டிட்டு கிளம்பி பஸ் ஸ்டான்ட் போய், பஸ் பிடிச்சி பாரிஸ் கார்னர் போக எப்படியும் பதினொன்னு ஆகிடும். அங்கே இருந்து பாயிண்ட் டு பாயிண்ட் பிடிச்சாலும், எப்படியும் சாப்பாடுக்கு, அரை மணிநேரம் போடுவான். நாம அங்கே போய் சேரவே மணி மூணு ஆகிடும். அதுக்கப்புறம் உன்னோட வேலைய முடிச்சுட்டு கிளம்பி வர நைட் பதினோரு மணி ஆகிடும். இன்னொரு நாள் பாத்துக்கலாமே என்றார்.

இன்னும் நிறைய டைப் இதை போல சொல்லிகொண்டே போகலாம். உங்கள் அனுபவத்தில் இதை போல பிரண்ட்ஸ் டைப் இருந்தால் பின்னூட்டத்தில் எடுத்து விடுங்கள். 

Saturday, August 20, 2011

வட்டம் - 55 வார்த்தை சிறுகதை



என்ன சாரதா, நாப்பது பவுனுக்கு என்ன பண்றது. இன்னும் கல்யாணச் செலவு வேற இருக்கு என்றார் கிருஷ்ணமூர்த்தி.

ஆமாங்க, நம்ம பொண்ணை வியாபாரப் பொருளாப் பாக்குறாங்க. இந்த வரதட்சணை கொடுமை என்னைக்குத்தான் ஒழியுமோ ?

பேசாமே நம்ம தாம்பரம் நிலத்தை வித்துடலாம். குமார் படிப்புக்கும் உதவும்.

நிலம் விற்ற பணத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. 

சில வருடங்களுக்குப்பின், கல்யாணத் தரகரிடம் - எங்களுக்கு ஒரே பையன், இன்ஜினியரிங் முடிச்சிட்டு கை நிறைய சம்பாரிக்கிறான், நூறு பவுனுக்கு குறையக்கூடாது என்றாள் சாரதா.

Saturday, August 13, 2011

குப்பை - 55 வார்த்தை சிறுகதை

சுஜாதா அவர்களின் 55 வார்த்தை கதைகளின் மேல் கொண்ட ஈர்ப்பால் நான் முயற்சி செய்துள்ள சின்னஞ்சிறுகதை. இந்த கதையில் மொத்தம் 55 வார்த்தைகள் மட்டுமே. எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

குப்பை



தீபாவளி சமயம் அலுவலக விடுமுறைக்கு பெரியம்மா  வீட்டுக்கு வந்திருந்த அரவிந்தன் காலை உணவு திருப்தியாக சாப்பிட்ட பின் கை கழுவ வாஷ்பேசின் அருகே வந்தான். 

சட்டென்று முகம் மாறி அருகில் இருந்த டம்ப்ளரில் தண்ணீர் பிடித்து ஹாலில் நடுவே கை கழுவினான்.

அரவிந்தா என்ன பண்றே என்று பதறிய பெரியம்மாவைப் பார்த்து சிரித்தபடி, நீங்க மட்டும் குப்பையை கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போடாம மாடிலே இருந்து கிழே வீசலாம், நான் நடு வீட்டில் கை கழுவக்கூடாதா என்றான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...