Tuesday, January 30, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 2

ஜகன் வீட்டை விட்டு வெளியேறுவதை பார்த்துக்கொண்டிருந்த ஜான்சிக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. உணர்ச்சிகளின் கொந்தளிப்புடன் சுழன்ற அவள் மனதில் வருத்தம், கோபம் மற்றும் சந்தேகம் போன்ற உணர்வுகள் எழுந்து இதயத்தை ஏதோ அழுத்தியது போல தோன்றியது. தான் மிகவும் கடுமையாக நடந்துகொண்டோமா ? சிறிது பொறுமையாக இதை கையாண்டிருக்கலாமோ என்ற எண்ணமும் அவ்வப்போது வந்து சென்றது. ஆனாலும், ஜகன் நீண்ட காலமாக தன்னை ஏமாற்றி ஏதோ மறைத்திருக்கிறான் என்ற நினைவும், அந்த வஞ்சகத்தின் எடையும் அவளை கவ்வியது. 

திருமணத்திற்கு பின் ஜகனும் ஜான்சியும் ஹைதராபாத்தில் குடியேறிய பின்னர் ஒரு நாள் கூட ஜகன் இவ்வளவு கோபப்பட்டதில்லை.  அந்தக் கோபத்தில் கலந்திருந்த பொய் ஜான்சிக்கு மிகவும் புதிதாக இருந்தது. வழக்கமாக இது போல வாக்குவாதம் நிகழும் போது, ஒரு சில நேரங்களில் வீட்டை விட்டு எங்காவது வெளியே போய்விட்டு சிறிது நேரத்தில் வந்துவிடுவான். ஆனால் இப்போது ஜகன் வெளியே சென்றபோது இருந்த ஆவேசத்தின் காரணம் என்ன என்று புரியாமல் அன்று மாலை நடந்த நிகழ்வுகளை மீண்டும் ஜான்சி  நினைத்துப் பார்த்தாள். 

"ஜகன், ப்ளீஸ் உண்மையை சொல்லு. எதுக்காக லோன் அப்ளை பண்ணி இருக்கே ?"

 "நான் தான் சொன்னேனே, லோன் எதுவும் அப்ளை பண்ணலைன்னு. உன் முன்னாடி தானே போன் பண்ணி அந்த ஆளை திட்டினேன். சும்மா போட்டு டார்ச்சர் பண்ணாதே."

"நான் கேள்வி கேட்டா உனக்கு டார்ச்சரா இருக்கா ஜகன். சரி, உன் போனை என்கிட்டே குடு. நான் கொஞ்சம் பார்க்கணும்."

"எப்ப பார்த்தாலும் என் போனை எடுத்து நோண்டுறதே உன் வேலையாய் போச்சு. நான் முக்கியமான ஒரு ஆபீஸ் வேலையை பார்த்துட்டு இருக்கேன். இப்போ என்னை டிஸ்டர்ப் பண்ணாதே என்று லேப்டாப்பில் மூழ்கினான்."

"அதெல்லாம் எனக்கு தெரியாது ஜகன். இப்போ உன் போனை குடுக்க போறியா இல்லையா ?"

ஜகன் சிவந்துபோன முகத்தோடு, ஜான்சியை நோக்கி, 

"இங்கே பாரு ஜான்சி, ஆபீஸ் வேளையிலே ஒரு பெரிய ப்ராபளத்தை சரி செய்ய சொல்லி இருக்காங்க. என்னை கொஞ்சம் தனியா விடு."

"எப்ப பார்த்தாலும், இப்படி ஏதாவது சாக்கு சொல்லி சமாளிக்குறே ஜகன். இன்னைக்கு அதெல்லாம் நடக்காது. நீ சொல்றதை எல்லாம் நம்பறதுக்கு, என்னையும் உன் அம்மா மாதிரின்னு நினைச்சியா ? "

"இப்போ ஏன் எங்க அம்மாவை இழுக்குறே ? உன்கிட்டே எல்லா விஷயத்தையும் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை. போன் எல்லாம் குடுக்க முடியாது. ப்ளீஸ் லீவ் மீ அலோன்."

"இப்போ நீ லேப்டாப்பை மூடி வச்சுட்டு என்கிட்டே எல்லா உண்மையும் சொல்ல போறியா இல்லையா என்று கண்களில் நீர் கொப்பளிக்க கோபத்துடன் கேட்டாள்."

"சும்மா சொல்லக்கூடாது ஜான்சி, நீ இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற சீன் இருக்கே...ரியலி பெண்டாஸ்டிக். "

ஜகனின் கிண்டலான தொனியில் இருந்த ஏளனத்தை உணர்ந்த ஜான்சி, சற்றே குரலை உயர்த்தி...
 
"யாரு, நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுறேனா ? தொட்டதுக்கு எல்லாம் அழுகிறது நீதான் ஜகன். மரியாதையா என்கிட்டே போனை குடுத்துட்டு உக்காந்து பேசு. இல்லேனா..."

"இல்லேனா...இல்லேனா...என்ன ஜான்சி. சொல்லு என்ன பண்ணுவே. இங்கே பாரு, நீ இப்படியே என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருந்தீன்னா, நான் இந்த வீட்டை விட்டு போயிருவேன்."

"இப்படி எப்ப பார்த்தாலும் வீட்டை விட்டு போறேன்னு சொல்லி என்னை பயமுறுத்தாதே ஜகன். இந்த வீட்டுல இருக்க இஷ்டம் இல்லேன்னா நீ கிளம்பி போயிட்டே இருக்கலாம்.  நான் சொல்றத கேட்டு எனக்கு உண்மையா இருக்க முடியும்னா இந்த வீட்டுலே இரு. இல்லேனா, நீ இந்த வீட்டுலே இருக்க வேண்டிய அவசியம் இல்லை."

அதைக்கேட்ட ஜகன் கண்களில் கோபம் கொப்பளிக்க, லேப்டாப் மற்றும் அலுவலக உபகரணங்களை எடுத்து ஒரு பையில் போட்டுகொண்டு, விறுவிறுவென்று படிகளில் இறங்கி சாலையில் தன் கால்களை பதித்தான்.

இறுக்கமான முகத்தோடு சோபாவில் அமர்ந்து எதையோ வெறித்து பார்த்துக் கொண்டு நடந்தை மனதில் நினைவுகூர்ந்த  ஜான்சி திடீர் என்று தன்னிலைக்கு வந்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி சரியாக பதினொன்று  முப்பது. இருளும் தனிமையும் சூழ அதன் தாக்கத்தை தாங்க முடியாமல் ஜான்சி தவித்தாள்.  சிறு வயதில் இருந்தே அவளுக்கு இருள் என்றால் ஒரு இனம் புரியாத அச்சம் மனதில் எழும். வீட்டில் உள்ள எல்லா மின் விளக்குகளையும்  மிளிர செய்து படுக்கையில் சரிந்து தூங்க முயற்சித்தாள். தூக்கம் அவளை தவிர்த்து. இரவின் கனம் அவளது அமைதியற்ற மனதைத் தாங்கியது. அமைதியையும் தனிமையையும் தாங்க முடியாமல், ஜான்சி தன் தந்தையை அழைத்துப் பேசினாள். அவருடன் பேசும்போது அவளுக்குள் இருந்த கொந்தளிப்பில் அவள் குரல் நடுங்கியது. 

"டாடி, எனக்கும் ஜகனுக்கும் வந்த சண்டையில் கோவிச்சுக்கிட்டு அவன் வீட்டை விட்டு வெளியே போய்ட்டான்."

"என்னம்மா இப்படி ராத்திரி நேரத்துலே குண்டை தூக்கி போடுறே. மாப்பிள்ளை எங்கே போறேன்னு சொல்லிட்டு போனாரா ?"

"தெரியலே டாடி, எப்பவும் போல தான் ஆர்க்யூ பண்ணிட்டு இருந்தோம். திடிர்னு கோபப்பட்டு  கிளம்பி போய்ட்டான். என்னோட போனையும் பிளாக் பண்ணிட்டான். நீங்க அவனுக்கு போன் பண்ணி பாக்குறீங்களா, ப்ளீஸ்."

"சரி, நீ லைனிலேயே இரு. நான் இன்னொரு போன்லே இருந்து கூப்பிட்டு பாக்குறேன்."

சிறிது நேர அமைதிக்கு பிறகு...

"மாப்பிள்ளை என் போனையும் எடுக்கலே. மாப்பிள்ளையோட அம்மாவுக்கு இப்பதான் போன் பண்ணி பேசினேன். அவங்களுக்கு எதுவும் தெரியலைன்னு சொல்றாங்க. அவங்க இப்போ திருச்சிலே அவங்க வீட்டுலே இல்லையாம்.  புதுக்கோட்டையில் இருந்து நாளைக்கு காலையிலே தான் வீட்டுக்கு போவாங்கலாம். "

"சரி டாடி, நான் அவனுக்கு இன்ஸ்டாக்ராமலே மெசேஜ் பண்ணி பாக்குறேன்."

"சரி,  நீ பயப்படாமே தூங்குமா, நான் காலைலே விசாரிச்சு பாக்குறேன்."

தந்தையுடன் பேசிய பின் சற்றே பதட்டம் குறைந்த நிலையில், ஜான்சி படுக்கையில் சரிந்தாள். படுக்கை அறையில், இருளைத் துளைத்த விளக்குகளின் பிரகாசத்தின் மத்தியில், ஜான்சி தனது வாழ்க்கையில் இருந்த நிச்சயமற்ற  தன்மையைப் பற்றி எண்ணியபடி கண்களை மூடி தூங்க முயற்சித்தாள். அந்த இரவு முழுவதும் பல்வேறு சிந்தனைகளுடன் ஒரு புதிய நாளின் விடியல் அவள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் உறங்கிப்போனாள்.

தொடரும்...



Friday, January 26, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 1


முன் குறிப்பு: 

இந்தக்கதை எந்த உண்மை சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. இதில்  சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் கற்பனையே.

ஜகன் மற்றும் ஜான்சி இருவருக்கும் திருமணமாகி  சுமார் இரண்டு வருடங்கள் ஆகிறது. பெரும்பாலான தம்பதிகளை போல முதலில் அவர்களது வாழ்க்கை சிரிப்பு, அன்பு மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றிய வாக்குறுதிகளால் நிறைந்திருந்தது. ஜகன் மற்றும் ஜான்சி இருவரும் பெற்றோர்களால் மிகுந்த செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்பதால் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் வந்தாலும் அவர்கள் வாழ்க்கை ஓரளவு நேர்த்தியாகவே சென்று கொண்டிருந்தது.

ஜகன் நல்ல சம்பளத்துடன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அதிகமாக பணம் சம்பாதித்து தன் குடும்பத்திலேயே பெரும் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அத்தகைய எண்ணத்தால், தினமும் பங்குச் சந்தையில் கணிசமான நேரத்தை செலவிட்டு வந்தான். அவ்வப்போது பங்கு சந்தையில் லாபம் கிடைக்கும் போது அதைப்பற்றி ஜான்சியிடம் சிலாகித்து கூறி மகிழ்ச்சி அடைவான். பங்கு சந்தையில் அதிர்ஷ்டத்தின் காரணமாக முதலில் பணம் வருவது போல இருந்தாலும், பின்னர் அதை விட பல மடங்கு இழக்க நேரிடும் என்ற உண்மையை ஜகன் அப்போது உணரவில்லை. தான் பெற்ற லாபம் அனைத்தும் தன் திறமையால் மட்டுமே வந்தது என்று திடமாக நம்பினான். இந்நிலையில் கணவனின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த ஜான்சி, கணவனுக்கு லாபமாக கிடைத்த பணத்தை செலவு செய்து பல்வேறு தருணங்களில் கொண்டாடினாள்.

எல்லா வர்த்தகத்தில் இருப்பது போல் பங்கு சந்தையிலும் லாபம் நஷ்டம் மாறி மாறி வரும். அப்படி லாபம் வரும் போது வெளிப்படையாக மனைவியிடம் பகிர்ந்த ஜகன், நஷ்டம் வரும் நேரத்தில் இரகசியமாக வைத்து அதை பற்றி மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்தான். இவ்வாறு இருக்கையில், காலப்போக்கில் ஜகனின் அதிர்ஷ்டம் மோசமாக மாறியது. அவன் தனது வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்திக்க தொடங்கினான். மேலும் அத்தகைய பெரிய இழப்புகளை ஜான்சியின் கோபத்திற்கு பயந்து மறைக்கவும் தொடங்கினான்.  விட்ட பணத்தை மீண்டும் பிடிப்பதற்காக வங்கிகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பல்வேறு பொய்களை சொல்லி கடன் வாங்கினான். கடன் வாங்கிய பணத்தை முதலாக வைத்து மீண்டும் பங்கு சந்தையில் முதலீடு செய்து மீண்டும் பணத்தை இழந்தான்.

கடன்கள் மேலும் மேலும் குவிந்ததால், ஒரு கட்டத்தில் ஜகன்  வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணை அவனது மாத வருமானத்தை விட அதிகமானது. பெருகிவரும் கடன்களின் சிரமமும் அதனால் உண்டான அழுத்தமும் தாங்க முடியாமல், ஜகனிற்கும் ஜான்சியிற்கும்  இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாக துவங்கியது. ஜகன் தன்னிடமிருந்து முக்கியமான ஒன்றை மறைப்பதாக ஜான்சி உணர்ந்தாலும், அது என்னவென்று தெளிவாக தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தாள்.  இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் மாலை நேரத்தில் வேலை முடிந்து ஜான்சி மற்றும் ஜகன் வீடு திரும்பிய பின்னர் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். ஒய்வு நேரத்தில் ஜகனின்  செல்போனில் இருந்து  நெட்ஃபிலிக்ஸ் பார்ப்பது ஜான்சியின் வழக்கம். அப்படி பார்த்துக்கொண்டிருக்கும் போது வந்த ஒரு மெசஜை பார்த்து ஜான்சி வெகுண்டெழுந்தாள்.

என்ன ஜகன் இது, கொக்சிஸ் பாங்கில் லோன் அப்ளை பண்ணி இருக்கியா ? ஏன், யாரோ லோன் டாக்குமெண்ட் கேட்டு மெசேஜ் அனுப்புறாங்க ?

ஏய், அதெல்லாம் சும்மா ஸ்பாம். எனக்கு அது யாருன்னே தெரியாது.

பொய் சொல்லாதே ஜகன். இரு நான் அந்த நம்பருக்கு, நான் போன் பண்ணி கேக்குறேன்.

ஜான்சி வெயிட், நானே பேசுறேன்.

ஸ்பீக்கர்லே போட்டுட்டு பேசு ஜகன்.

தொடர்ந்து ஜகன் அந்த நம்பரை தொடர்பு கொண்டு, 

ஹலோ யாருங்க நீங்க. நான் உங்க கிட்டே லோன் கேட்டேனா. எதுக்கு இப்படி தொல்லை பண்றீங்க. உங்களால எனக்கு என் வைப் கிட்டே பிரச்சனை வருதுங்க. இனிமேல் எனக்கு போன் பண்ணாதீங்க என்று அதட்டலாக ஆங்கிலத்தில் கூறினான். 

அதற்கு எதிர் முனையில் இருந்தவர், 

ஓகே சார், ஓகே சார் என்று நமட்டு சிரிப்புடன் கூறியதை கேட்டு ஜான்சியிற்கு லேசான சந்தேகம் பொறி தட்டியது.

ஜகன் ஏதோ நிதிச் சிக்கலில் இருக்கிறான் என்று ஜான்சி தீர்க்கமாக உணர்ந்தாலும், எவ்வளவு கடன் மற்றும் ஏன் கடன் வாங்கினான் என்ற கேள்விகள் அவள் மனதை துளைத்துக் கொண்டிருந்தது. இருப்பினும் எப்போதெல்லாம் பண விஷயத்தைப் பற்றி ஜான்சி பேச்சு எடுத்தாலும் ஜகன் கோபத்துடன் கிளிர்த்தெழுந்தான். அப்படி ஒரு மாலை நேரத்தில் நிகழ்ந்த சூடான விவாதத்தின் போது, ஜான்சியின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல், ஜகன் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டான். தன் அலுவலக உடமைகளை எடுத்துக்கொண்டு ஜகன் வெளியேறுவதைக் கண்டு தன் செயல் சரியா தவறா என்று புரியாமல் ஜான்சி  திகைத்து நின்றாள்.

தொடரும்...

Sunday, December 18, 2022

போர்டிங் பாஸ்

ஒவ்வொரு முறை இந்திய மண்ணை மிதிக்கும் போதும் இந்தியா குறிப்பாக தமிழகம் என்னை சுவாரஸ்யமான அனுபவத்துடன் வரவேற்கத் தவறியதே இல்லை. 

பல நேரங்களில் அது போன்ற அனுபவங்களை சோம்பேறித்தனம் காரணமாக எழுத்தில் பிதற்றாமல் விட்டு விடுவேன். இதோ அப்படிப்பட்ட ஒரு அனுபவம் உங்கள் பார்வைக்கு...
 
பிளைட் சென்னையில் லேண்ட் ஆனதும் தான் தாமதம், அதுவரை முழுப் பயணத்திலும் அமைதியாக நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த பக்கத்து சீட்காரரின்  மனைவி, படு அதட்டல் கலந்த குரலில் அவரிடம் தமிழில் பேசினார்.

'போர்டிங் பாஸ் எடுத்து வச்சுக்கோ, பிளைட் விட்டு இறங்கியதும் கேப்பாங்க.

ஏம்மா இனிமேல் போர்டிங் பாஸ் கேப்பாங்க ?

உனக்கு தெரியாது, கண்டிப்பா கேப்பாங்க, எடுத்து வச்சுக்கோ.

சரிம்மா, இதோ பாக்குறேன்.

ஐயோ, ஏன் இப்படி பேக் ஜிப்பை தொறந்து போட்டு இருக்கே. பாஸ்போர்ட் எல்லாம் கீழே விழுந்து இருக்கும், மொதல்லே எல்லா பாஸ்போர்ட்டும் ஒழுங்கா இருக்கான்னு பாரு.

பாஸ்போர்ட் எல்லாம் இருக்குதும்மா. போர்டிங் பாஸ் தான் காணும். உன்கிட்டே தானே போர்டிங் பாஸ் இருக்கணும்.

என்கிட்டே போர்டிங் பாஸ் இல்லை, நீ நல்லா பாரு, பேக் ஜிப்பை இப்படி தொறந்து போட்டிருந்தீனா எங்கயாவது ஏர்போர்ட்டிலேயே விழுந்து இருக்கும்.

வேற எங்கேயும் விழுந்து இருக்காது, போர்டிங் பாஸ் இருந்தா தானே பிளைட் உள்ளே ஏறி இருக்க முடியும் என்ற லாஜிக்கலான கேள்விக்கு மனைவியிடம் இருந்து என்னவென்று கிரகிக்க முடியாத ஒரு முணுமுணுப்பே பதிலாக வந்தது.

பலத்த டென்ஷனுடன் அவர் போர்டிங் பாஸை பேக்கின் எல்லா பக்கங்களிலும் தேடுகின்றார்.

அவர் தேடுவதை ஒரு முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மனைவி, ஏதோ நினைவுக்கு வந்தது போல தன்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்து துழாவுகிறார். அடுத்த நிமிடம், சற்று தாழ்ந்த ஸ்தாயியில், ஏய், ஒரு நிமிஷம் இரு. போர்டிங் பாஸ் என் ஹேண்ட் பேக்ல தான் இருக்கு. இந்தா, நீயே பத்திரமா வச்சுக்கோ. உள்ள வச்சுட்டு ஒழுங்கா பேக் ஜிப்பை மூடு.

இந்த சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்த நான், சத்தமில்லாமல் எதற்கும் இருக்கட்டும் என்று என் போர்டிங் பாஸையும் தேடி எடுத்து வைத்துக் கொண்டேன்.

அதற்குள் பிளைட் கதவு திறக்கவும் மேற்கொண்டு அவர்களின் பேச்சை (ஒட்டு) கேட்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தேன்..

பி.கு:  பிளைட் விட்டு இறங்கியதும், யாரும் போர்டிங் பாஸை கேட்கவே இல்லை.






Thursday, November 23, 2017

அந்நாள் எந்நாளோ ?

சமீபத்தில் இங்கு அமெரிக்காவில் பாஸ்டன் அருகே ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். பெரிய அரங்கம், நூற்றுக்கணக்கில் தமிழ் மக்கள் அமர்ந்திருந்தார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்போவதாக அறிவிப்பு வந்ததும் நான் தன்னிச்சையாக எழுந்து நின்றேன். அரங்கில் உள்ள மற்றவர்களும் எழுந்து நின்றார்கள். என் இருக்கைக்கு பின்னே அமர்ந்திருந்த ஒரு தம்பதியர் மட்டும் எழுந்திருக்கவில்லை. நான் பார்த்த வரையில் அவர்களுக்கு நடப்பதிலோ, நிற்பதிலோ எந்த குறையும் இருந்ததாக தெரியவில்லை. ஆனாலும் எழுந்து நிற்கவில்லை. இத்தனைக்கும் ஏதோ டெக்கனிகள் பிரச்சனையால் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் முழுவதும் போடாமல், மீண்டும் ஒரு முறை ஒலிக்க வைத்தார்கள். அப்படி இரு முறை ஒலித்தும் அவர்கள் எழுந்து நின்ற பாடில்லை. அது போக எழுந்து நின்றவர்களை சுற்றி சுற்றி ஒரு ஏளனப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் அந்தத் திருவாளர்.

கடும் கோபம் என்னுள்ளே கொப்பளித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் அமைதியாக அமர்ந்தேன். சில நேரங்களில் நம் நாகரீகத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இது போன்ற மனிதர்களை நன்றாக கேள்வி கேட்டு வெளுத்து வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்நாள் எந்நாளோ ?

Thursday, August 13, 2015

ஸ்பேஸ் டூரிசம் (55 வார்த்தைகள் சிறுகதை)




ஐம்பது வருடங்களுக்கு பிறகு திரும்புகிறோம் என்ற நினைப்பே கண்களில் கண்ணீரைத் துளிர்க்கச் செய்தது. அருகில் உறங்கும் மகளை அணைத்தபடி உறங்கிப் போனேன்.

எதோ சத்தம் கேட்டு கண் விழித்த போது விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததை உணர்ந்தேன். சற்றே அதிக புவியீர்ப்பை ஏற்க உடல் சிரமப்பட்டது. கண்களை மூடி சற்று நேர காத்திருப்புக்குப் பின்னர், 'சற்று நேரத்தில், பூமியின் சென்னைப் பகுதியில் இறங்கப் போகிறோம். வெளியே செல்லும் போது ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Sunday, May 31, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் ஐந்து



எண்பதுகளில் பத்து பதினைந்து காசிற்கு பெட்டிகடைகளில் திரைப்படங்களின் பாட்டு புக் கிடைக்கும். ஏழெட்டு வயதில் பூந்தளிர், அம்புலிமாமா போன்ற தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்த போது இந்தப் பாட்டு புக் பைத்தியமும் பிடித்துக்கொண்டது. பாடல் வரிகளைப் படிப்பதற்காக வாங்கி கூடவே பாடும் பழக்கம் ஒட்டிக்கொண்டது. முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுகொள்ளும் ஆர்வம் இருந்தும் அன்றைக்கு நாங்கள் இருந்த பகுதியில் சமூகச் சூழல் இடம் தரவில்லை. அப்படியே சமூகச் சூழல் இடம் கொடுத்திருந்தாலும் என் குடும்பத்தின் அன்றைய பொருளாதார சூழல் இடம் கொடுத்திருக்குமா என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் பாடலில் மேல் இருந்த ஆர்வம் இன்றளவிலும் குறையவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தின் மேல் நாம் வைக்கும் உணர்வு சார்ந்த விருப்பு, திறமையை விட முக்கியமானது. திறமை கூடவும் குறையவும் வாய்பிருகிறது. ஆனால் உணர்வில் இருந்து வெளிப்படும் விருப்பம் மாறுவது என்பது அரிதானது.  இப்படி ஆரம்பித்த பாடல் ஆர்வம் பாத்ரூமில் பாடுவதில் தொடங்கி நண்பர்கள் மத்தியில் பாடுவது என்ற நிலையில் ஒரு கால கட்டத்தில் நின்றது. யாரும் பெரிதாக பாராட்டவில்லை என்றாலும் பாடும்போது நிறுத்து என்று சொல்லவில்லை. மேலும் பாராட்டை எதிர்பார்க்கும் நோக்கமும் இருந்ததில்லை. எனக்கு நிறைய கனவுகள் இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக மனதில் தோன்றும் போது செய்து கொண்டிருப்பேன். நூறு மீட்டர் ஓட்டம் கூட ஓடாத நான், மாராத்தான் ஓட வேண்டும் என்று வெறி கொண்டு பயிற்சி எடுத்திருக்கிறேன். இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறது பாடலின் கடைசியில் வரும் பிஜிஎம்-ஐ எப்படியாவது வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு கிடாரை வாங்கி ராப்பகலாக முயன்று வாசித்திருக்கிறேன். அந்த ஒரு பிஜிஎம் மட்டுமே உருப்படியாக கிடாரில் வாசிக்கத் தெரியும் என்பது வேறு விஷயம். இப்படி ஒரு ஒரு கால கட்டத்தில் என்ன தோன்றுகிறதோ அதை செய்து கொண்டிருப்பேன். அது என் மனதிற்கு பிடிந்திருந்தால் மட்டும் போதும். சரி திரும்பவும் பாட்டுக்கு வருவோம். நான் ஏழாவது வகுப்பு படிக்கும் போது பள்ளியில் NCC-யில் சேர பள்ளியில் ஆள் எடுக்கிறார்கள் என்று ஒரு பரபரப்பான செய்தி வகுப்பில்  அடிபட்டது. பரபரப்புக்கு முக்கிய காரணம், அதில் கிடைக்கும் உடை, பூட்ஸ் போன்றவை மட்டும் இல்லை. வாரத்தில் இரண்டு நாள் பயிற்சி, அதன் பின்னர் ஓட்டலில் இருந்து வரவழைக்கப்படும் இட்லி, பூரி, பொங்கல் ஒன்ற உணவு. நான் படித்து ஒரு அரசுப் பள்ளி. பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் வசதி குறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.  இந்த நிலையில் இரண்டு நாள் காலையில் ஓட்டல் சாப்பாடு என்பது பெரும் வரப்பிரசாதமாக எங்களிடையே கருதப்பட்டது. மாணவர்கள் கூட்டம் நான் நீ என முந்தி அடித்துக் கொண்டு சென்றது.  அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். மாணவர்கள் ஒவ்வொருவராக NCC மாஸ்டர்  ரூமிற்கு சென்று அவர்கள் கொடுக்கும் காக்கி NCC உடை அணிந்து மாஸ்டரின் முன் நிற்கவேண்டும். அவர் உயரம் மற்றும் உடல் தகுதி பார்த்து விட்டு தேர்ந்தெடுப்பார். அதில் ஒரு முக்கிய தகுதி கால் முட்டி இரண்டும் அட்டென்ஷனில் நிற்கும் போது இடிக்கக்கூடாது என்பது தான். பார்த்த மாத்திரத்தில் 'டேய், முட்டி தட்டுது இவனை திருப்பி அனுப்பு' என்று கூறி விடுவார். ஒரு சிலர் ஆஜானுபாகுவாக இருந்தால் முட்டி தட்டினாலும் எடுத்துகொள்வார். என் முறை வந்ததும் முதலில் உடை அணியும் அறைக்கு சென்றேன். அங்கு அடிக்கி வைக்கப்பட்டுள்ள உடைகளில் நம் அளவிற்கு என்ற உடையை தேர்ந்தெடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். நான் அப்போது இருந்த மாணவர்களிடையே சராசரி உயரத்திற்கும் மிகவும் உயரம் குறைவாக இருந்தேன். உடல் பருமன் கேட்கவே வேண்டாம். அப்போது கூட படித்த சத்தீஷ் போன்ற நண்பர்கள் சடாரென்று உடை கம்பீரமாக நின்ற போது, நான் அங்கு இருப்பதிலேயே சிறிய உடையை தேர்ந்தெடுக்க தடுமாறிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக இருப்பதிலேயே சிறிய உடையை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு, மாஸ்டரின் முன் போய் நின்றேன். அவர் என்னைப் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். சுற்றிலும் இருந்த மாணவர்களும் விவரம் புரியாமல் கூடவே சிரித்தனர். அப்போது பெரிய அவமான உணர்சியெல்லாம் எனக்கு இல்லை. நானும் லேசாக சிரித்து வைத்தேன். சிரித்த முடித்ததும் அவர் 'என்னடா இவன் இந்த ட்ரஸ்லே பாதர் மாதிரி இருக்கான்' என்று கிண்டலாகக் கூறினார்.  உனக்கெல்லாம் எதுக்கு NCC, வேண்டாம்டா என பரிவா அல்லது  கோபமா என்று புரியாத தொனியில் கூறினார். நான் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை,  உனக்கு வேறே என்ன பண்ண தெரியும் என்று கேட்டார். எனக்கு முன்னர் இதே கேள்வியை சற்று பருமனான நடேசனிடம் கேட்க  அவன் 'பல்டி அடிக்க தெரியும் சார்' என்று இரண்டு மூன்று முறை தரையில் பல்டி என்கிற பேரில் விழுந்து பிரண்டதைப் பார்த்து அனைவரும் சிரித்தது மனத்திரையில் வர, நான் சற்று யோசனையுடன் நின்றேன். அந்த நேரம் பார்த்து, எவன் சொன்னான்னு தெரியலே, 'சார் அவன் பாட்டு பாடுவான் சார்' என குரல் கொடுத்து விட்டான். என்னது பாட்டா, எங்கே எதாவது பாடு என்றார். அப்பொழுது ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் படத்தில் வரும் 'கண்ணே கட்டிக்கவா' பாடலை முழுவதும் பயங்கரமான பீலிங்க்சுடன் பாடிக் காட்டினேன். பாடி முடித்ததும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் போன்ற எதோ ஒரு கோட்டாவில் என்னையும் NCC-யில் சேர்த்துக் கொண்டார். அது தான் என் பாட்டிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.

பின்னர் எங்கு கேம்ப் போனாலும் சரி பாடும் வாய்ப்பு நமக்கு வந்து விடும். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது, உண்மையிலே ரசிச்சாங்களா இல்லை சும்மா ஓட்டுனனுன்களா தெரியவில்லை. ஏழாவது எட்டாவது என இரண்டு வருடங்கள் NCC-ல் இருந்தேன். அப்போது நான் அந்த வகுப்பில் இருப்பதிலேயே உயரம் குறைவானவன், இல்லை என்னை விட சிவகுமார் என்ற சற்றே உயரம் குறைவானவன் இருந்தான். 'Tall in the right, short in the left, single line follow-in' என்று சத்தீஷ் தொண்டை கிழிய கத்தினால் கண்ணை மூடிக் கொண்டு நானும் சிவக்குமாரும் கடைசி இடது பக்கத்திற்கு போய் விடுவோம். எங்களுடன் சேர்ந்த சத்தீஷ் அப்போதே படு உயரமாகவும் நல்ல உடல் கட்டுடன் இருந்ததால் ஹையர் ரேங்கிற்கு போய்விட்டான். இயற்கையாகவே அப்போது  சத்தீஷிர்க்கு சிக்ஸ் பேக் ஆப்ஸ் இருந்தது. அவனுக்கு கார்போரலோ லேன்ஸ் கார்போரலோ ஏதோ ஒரு ரேங்க் கொடுத்திருந்தார்கள். எட்டாவது படிக்கும் வரை உயரம் குறைவாக இருந்த நான், பத்தாவது படிக்கும் போது கிட்டத்தட்ட ஆறடி உயரத்திற்கு வளர்ந்தது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு இரண்டு வருடத்திற்கு முன்னரே அந்த உயர வரத்தில் பாதியாவது கிடைத்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் அப்போது இருந்தது.  இந்தப் பாட்டு மேட்டர் எல்லாம் அப்போது தான், இன்று எதேச்சையாக  என் குரலை வாய்ஸ் மெயிலில் கேட்டால் கூட பாட்டு எல்லாம் நமக்கு ரொம்ப தூரம் என்று புரிகிறது.

ஓட்டம் தொடரும்...
 
அத்தியாயம் ஓன்று 
அத்தியாயம் இரண்டு 
அத்தியாயம் மூன்று 
அத்தியாயம் நான்கு










Tuesday, May 19, 2015

ஆச்செண்ட் ரங்கமணிகள்

மற்ற வெளிநாடுகளில் எப்படியோ தெரியவில்லை, அமெரிக்காவில் நான் நிறைய ஆச்செண்ட் (Accent) ரங்கமணிகளை சந்தித்திருக்கிறேன். என்ன விஷயம்னா, நம்ம கிட்டே சாதாரணமா தான் இங்கிலீஷ் பேசிட்டு இருப்பார். யாராவது ஒரு வெள்ளைக்காரன் திடீர்னு நம்ம பேச்சினிடையே உள்ளே வந்தான்னா, உடனே இவர் பேசுற ஆச்செண்ட் அப்பிடியே ராபர்ட் கிளைவ் பேரன் மாதிரி மாறிடும். அதை கேட்கும் போது நமக்கே கொஞ்சம் பேஜாரா தான் இருக்கும், நடுவுல வந்து புகுந்த அந்த ஆளுக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க. அப்படிப் பேசுறது ரொம்ப செயற்கையா இருக்குனு தெரிஞ்சும் அப்படி பேசுறாங்களா, இல்லை தெரியாம அப்படி பேசுறாங்களான்னு புரியலே. அதுலே ஒருத்தர் குழந்தைங்க கிட்டே மட்டும் அமெரிக்க ஆச்செண்ட்னு நினைசிக்கிட்டு படு பயங்கரமா பேசி பயமுறுத்துவார். குழந்தைகள் அப்புறம் தனியாக வந்து அந்த அங்கிள் ஏன் திடீர்னு வேற மாதிரி பேசுறாரு என்று கேட்பார்கள். நான் அறிந்தவரையில் நம் இந்திய ஆக்செண்டுக்கு எந்தக் குறையும் இல்லை, என்ன கொஞ்சம் மெதுவா பேசணும், அவ்வளவுதான். மேலும் ஆச்செண்ட் பொறுத்தவரை ஆங்கிலம் பேச்சு மொழியா இல்லாத ஒரு நாட்டை எடுத்துகிட்டா மொத்த நாடுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆக்செண்டில் பேசும். நம்ம இந்தியாவில் தான் ஒவ்வொரு மாநிலத்து ஆளும் ஒவ்வொரு மாதிரி பேசி வெள்ளைக்காரனை முழி பிதுங்க வைப்பான். இங்கிலீஷை அவன் மாநில பாஷை மாதிரியே பேசுவானுங்க. ஆயிலை ஓயில்னு சொல்றது கூட பரவாயில்லை, டெஸ்டை என்ற வார்த்தையை டேஸ்ட்-னு சொல்லும் ஆளுங்க இருக்காங்க. இந்த டெஸ்ட் டேஸ்ட் பத்தி SPB அவர்கள் ஒரு பேட்டியில் சொன்ன ஒரு ஜோக் இருக்கு. யாருக்காவது தெரிஞ்சா கமெண்டில் சொல்லுங்க பாக்கலாம்.

இது போன்ற ஆக்செண்ட் சித்ரவதைகள் தமிழ் டிவி விளம்பரங்களிலும் காணலாம். லண்டனில் வெளியாகும் விளம்பரத்தில் கூட இல்லாத ஒரு ஆக்செண்டை தமிழ்நாட்டில் புகுத்த நினைத்து அந்த விளம்பரத்தை கொடுரமாக்கி இருப்பதை காணலாம். சரி அதுக்கு என்ன இப்போ என்று நீங்கள் கேட்கும் பட்சத்தில் நான் கூற விரும்பும் கருத்து என்னவென்றால் எப்போதும் ஒரே மாதிரி எப்படிப் பேச வருதோ அப்படிப் பேசுங்கள். இப்படி சடார் சடார் என்று மாற்றிப் பேசுவது, என் பள்ளிக் கால தோழன் ஒருவனை நினைவுபடுத்துகிறது. அவன் என்னுடன் சாதரணமாக பேசிக்கொண்டே இருப்பான், திடீர் என்று ஒரு மாதிரி அஷ்டகோணலில் வளைந்து வாயெல்லாம் பல்லாக சிரிப்பான். என்னடா இது நாம ஏதும் ஜோக் கூட சொல்லலியே, ஏன் இப்படி சிரிக்கிறான் என்று பார்த்தால், எனக்கு பின்னால் யாரவது நடந்து போய் கொண்டிருப்பார்கள், அவர்களைப் பார்த்து சிரித்திருப்பான். எனவே இயற்கையாய் வரும் பேச்சு மொழியை செயற்கையாக மாற்ற முயல வேண்டாம். அதுவே காலப்போக்கில் மாறினால் தவறில்லை, ஆக்செண்டில் வன்முறை வேண்டாம் என்பதே என் வேண்டுகோள் .



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...