மற்ற வெளிநாடுகளில் எப்படியோ தெரியவில்லை, அமெரிக்காவில் நான் நிறைய ஆச்செண்ட் (Accent) ரங்கமணிகளை சந்தித்திருக்கிறேன். என்ன விஷயம்னா, நம்ம கிட்டே சாதாரணமா தான் இங்கிலீஷ் பேசிட்டு இருப்பார். யாராவது ஒரு வெள்ளைக்காரன் திடீர்னு நம்ம பேச்சினிடையே உள்ளே வந்தான்னா, உடனே இவர் பேசுற ஆச்செண்ட் அப்பிடியே ராபர்ட் கிளைவ் பேரன் மாதிரி மாறிடும். அதை கேட்கும் போது நமக்கே கொஞ்சம் பேஜாரா தான் இருக்கும், நடுவுல வந்து புகுந்த அந்த ஆளுக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க. அப்படிப் பேசுறது ரொம்ப செயற்கையா இருக்குனு தெரிஞ்சும் அப்படி பேசுறாங்களா, இல்லை தெரியாம அப்படி பேசுறாங்களான்னு புரியலே. அதுலே ஒருத்தர் குழந்தைங்க கிட்டே மட்டும் அமெரிக்க ஆச்செண்ட்னு நினைசிக்கிட்டு படு பயங்கரமா பேசி பயமுறுத்துவார். குழந்தைகள் அப்புறம் தனியாக வந்து அந்த அங்கிள் ஏன் திடீர்னு வேற மாதிரி பேசுறாரு என்று கேட்பார்கள். நான் அறிந்தவரையில் நம் இந்திய ஆக்செண்டுக்கு எந்தக் குறையும் இல்லை, என்ன கொஞ்சம் மெதுவா பேசணும், அவ்வளவுதான். மேலும் ஆச்செண்ட் பொறுத்தவரை ஆங்கிலம் பேச்சு மொழியா இல்லாத ஒரு நாட்டை எடுத்துகிட்டா மொத்த நாடுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆக்செண்டில் பேசும். நம்ம இந்தியாவில் தான் ஒவ்வொரு மாநிலத்து ஆளும் ஒவ்வொரு மாதிரி பேசி வெள்ளைக்காரனை முழி பிதுங்க வைப்பான். இங்கிலீஷை அவன் மாநில பாஷை மாதிரியே பேசுவானுங்க. ஆயிலை ஓயில்னு சொல்றது கூட பரவாயில்லை, டெஸ்டை என்ற வார்த்தையை டேஸ்ட்-னு சொல்லும் ஆளுங்க இருக்காங்க. இந்த டெஸ்ட் டேஸ்ட் பத்தி SPB அவர்கள் ஒரு பேட்டியில் சொன்ன ஒரு ஜோக் இருக்கு. யாருக்காவது தெரிஞ்சா கமெண்டில் சொல்லுங்க பாக்கலாம்.
இது போன்ற ஆக்செண்ட் சித்ரவதைகள் தமிழ் டிவி விளம்பரங்களிலும் காணலாம். லண்டனில் வெளியாகும் விளம்பரத்தில் கூட இல்லாத ஒரு ஆக்செண்டை தமிழ்நாட்டில் புகுத்த நினைத்து அந்த விளம்பரத்தை கொடுரமாக்கி இருப்பதை காணலாம். சரி அதுக்கு என்ன இப்போ என்று நீங்கள் கேட்கும் பட்சத்தில் நான் கூற விரும்பும் கருத்து என்னவென்றால் எப்போதும் ஒரே மாதிரி எப்படிப் பேச வருதோ அப்படிப் பேசுங்கள். இப்படி சடார் சடார் என்று மாற்றிப் பேசுவது, என் பள்ளிக் கால தோழன் ஒருவனை நினைவுபடுத்துகிறது. அவன் என்னுடன் சாதரணமாக பேசிக்கொண்டே இருப்பான், திடீர் என்று ஒரு மாதிரி அஷ்டகோணலில் வளைந்து வாயெல்லாம் பல்லாக சிரிப்பான். என்னடா இது நாம ஏதும் ஜோக் கூட சொல்லலியே, ஏன் இப்படி சிரிக்கிறான் என்று பார்த்தால், எனக்கு பின்னால் யாரவது நடந்து போய் கொண்டிருப்பார்கள், அவர்களைப் பார்த்து சிரித்திருப்பான். எனவே இயற்கையாய் வரும் பேச்சு மொழியை செயற்கையாக மாற்ற முயல வேண்டாம். அதுவே காலப்போக்கில் மாறினால் தவறில்லை, ஆக்செண்டில் வன்முறை வேண்டாம் என்பதே என் வேண்டுகோள் .