Wednesday, December 7, 2011

கூட்டாஞ்சோறு - Dec 07, 2011

நாட்டு நடப்பு:

அமெரிக்காவில் உயிர் காக்கும் அவசர உதவி தேவை என்றால் 9-1-1 என்ற நம்பருக்கு போன் செய்தால் போதும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை, போலிஸ் என தேவைப்படும் உதவிக்கு ஏற்ப அனைத்தும் சில நிமிடங்களில் வந்து நிற்கும். போன் செய்து பேசவேண்டும் என்று கூட அவசியம் இல்லை, அந்த நம்பரை அழுத்தி விட்டு போனை வைத்து விட்டால் கூட போதும், சில நிமிடங்களில் இவர்கள் வந்து நம் வீட்டு வாசலில் நிற்பார்கள். ஆனால் சமீபத்தில் படித்த செய்தி ஒன்றை என்னால் நம்பவே முடியவில்லை. அது டென்நெஸ்ஸே (Tennessee) மாகாணத்தில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரியும் போதும் - அந்த வீட்டின் உரியமையாளர்கள் அருகில் இருக்கும் போதே, அங்குள்ள உள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் பார்த்துகொண்டு சும்மா இருந்தார்களாம். ஏனென்றால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு செலுத்த வேண்டிய வருடந்திர கட்டணம் $75 -ஐ செலுத்தவில்லையாம். இதை நம்பவே முடியவில்லை.  அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு தான் உண்மையான விவரம் தெரிந்து இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியை டிவியில் பார்த்தேன். இதில் பங்கேற்கும் குழந்தைகளின் திறமை பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கும். இது போன்ற குழந்தைகள் பங்கேற்று பாட்டு, காமெடி, மிமிக்ரி போன்றவைகளை செய்யும் போது ஒரு பல நேரங்களில் நன்றாக இருந்தாலும், சில சமயம் அவர்களின் வயதிற்கு மீறிய பேச்சு/பாடல் மகா எரிச்சலை ஏற்படுத்துகிறது. திண்டுகல்லு, திண்டுகல்லு பெரிய பூட்டு...என்று தொடங்கும் மோசமான இரட்டை அர்த்தப் பாடலை ஒரு ஏழு வயது குழந்தை பாடுவதைப் பார்த்து எப்படித் தான் அதன் பெற்றோர்கள் வாயெல்லாம் சிரிப்புடன் பூரித்துப் போகிறார்களோ தெரியவில்லை. இது கூட பரவாயில்லை, அதற்கு ஜட்ஜஸ் கொடுக்கும் கமெண்ட், நல்லா பாடி இருக்கே...ஆனாலும், இன்னும் கொஞ்சம் பீல் பண்ணி பாடணும் என்பது தான். இந்த மாதிரி பாட்டை எப்படி சின்னக் குழந்தையால் பீல் பண்ணி பாட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. இதைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என்றால், ஓன்று இவர்கள் பாடலின் வரிகளில் எல்லாம் கவனம் செலுத்துவது கிடையாது, இல்லை இதைப் போல பாடல்களைக் கேட்டு கேட்டு அதில் என்ன தவறு இருக்கிறது என்பதையே உணர முடியாத நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பைத் தவிர மற்ற கலைகள் கற்றுத் தேர்வதில் எந்தத் தவறும் இல்லை. போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியையும் தோல்வியையும் சந்திப்பதிலும் தவறு இல்லை. ஆனால் பங்கேற்கும் குழந்தைகள் வயதிற்கு ஏற்ப தரமான பாடல்களை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

அறிவியல் பிட்ஸ்:

நிலவை பற்றி சில சுவாரசியமான தகவல்கள்:

  • சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியக் குடும்பம் தோன்றிய காலகட்டத்தில், பூமியின் மீது செவ்வாய் கிரகம் அளவுள்ள ஒரு பாறை மோதியதால் உருவானது நிலவு.
  • முதலில் தோன்றியபோது நிலவு பூமிக்கு மிக அருகில் இருந்தது. அப்போது, பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை விட பல மடங்கு பெரிதாக தோன்றி இருக்கும்.
  • நிலவு வருடந்தோறும் பூமியை விட்டு 3.8 சென்டி மீட்டர்கள் விலகிச்சென்று கொண்டு இருக்கிறது. இது இப்படியே தொடரும் போது, ஒரு கட்டத்தில் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து முழுவதும் விலகிச் சென்றுவிடும்.
  • நிலவு பூமியை மணிக்கு 3683 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.
  • பூமி தன் அச்சில் சுழலும் வேகமும், நிலவு தன் அச்சில் சுழலும் வேகமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதால், பூமியில் இருந்து நம்மால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும்.
  • நிலவில் பிரதிபலிக்கும் ஒளி பூமியை வந்தடைய 1.3 வினாடிகள் ஆகும். (சூரிய ஒளி பூமிய வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும்)
  • நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையைப் போல 1/6 பங்கு தான். உங்கள் எடை பூமியில் 75 கிலோ என்றால், நிலவில் 12.5 கிலோ மட்டுமே இருக்கும். இந்தக் குறைந்த ஈர்ப்பு விசை காரணமாக நிலவில் வலுவான வளிமண்டலம் கிடையாது.
  • பூமியின் மீது உள்ள நிலவின் ஈர்ப்பு விசை, பூமி ஒரே அச்சில் நிலையாக சுழல உதவுகிறது. நிலவு இல்லாவிட்டால் பூமியின் சுழலும் அச்சு சுமார் 90 டிகிரி வரை மாறக்கூடும். அப்படி மாறினால் பூமியில் சீதோசன நிலையில் பலத்த மாறுதல்கள் ஏற்படக்கூடும்.
  • நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழலும் வேகம் மட்டுபடுத்தப் படுகிறது. நிலவு இல்லாவிட்டால் பூமி மேலும் வேகமாகச் சுழலக்கூடும். எவ்வளவு வேகம் என்றால், நம்முடைய ஒரு நாள் 6 மணி நேரமே என்ற அளவிற்கு குறைந்துவிடும். அப்படி பூமி வேகமாக சுழலும் பட்சத்தில் நீடித்த வலுவான காற்று, தாவரங்களின் வளர்ச்சி, தூக்கம் போன்ற பல விஷயங்களில் மாறுதல்கள் ஏற்படும்.

சினிப் பட்டறை:


எந்திரன் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கம் நண்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் ஒரு பாடல் காட்சியில் எந்திரன் ரோபோ கெட்டப்பிலும், இந்தியன் தாத்தா கெட்டப்பிலும் தோன்றுகிறாராம். ரஜினி மற்றும் கமலுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஒரு பாடல் காட்சியில் எடுத்திருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ், டிசம்பர் 14 அன்று நடக்கவிருக்கிறது. விஜயுடன் சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருப்பதாக படத்தில் வேலை செய்தவர்கள் கூறி இருகிறார்களாம். ஒரு சில நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஏற்கனேவே கேட்ட மாதிரி இருக்கே என்று தோன்ற வைக்கும். இதில் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

அடுத்தது இந்தக் கொலைவெறிப் பாடல். பதினெட்டு லட்சம் ஹிட், அன்பரசன் முதல் அமிதாபச்சன் வரை பாராட்டுகிறார்கள்...ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். அது ஏன் என்று தான் புரியவில்லை. ஒரு பாட்டை ஓன்று அதன் இசைக்காக ரசிக்கலாம் அல்லது பாடல் வரிகளுக்காக ரசிக்கலாம். அது வேகமான இசையோ அல்லது மிதமான மெலடி என்று எதுவானாலும் ரசிக்கலாம். உதாரணத்திற்கு, சிம்புவின் 'எவண்டி உன்னை பெத்தான்' பாடல் வரிகள் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்தப் பாட்டில் உள்ள இசையின் வேகம் பிடித்திருந்தது. (நான் சிம்புவின் ரசிகன் இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயவைத் தவிர சிம்புவின் எந்தப் படத்தையும் நான் ரசித்ததில்லை). அப்படி இசை பெரிதாக பேசும்படி இல்லாவிட்டால் கூட அதன் வரிகளுக்காக ரசிக்கலாம். உதாரணம் 'அவள் அப்படிதான்' படத்தில் வரும் 'உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை' பாடல். இந்தப் பாடலின் வீடியோ இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். ஆனால் இவை இரண்டுமே இல்லாததாக எனக்குத் தோன்றும் கொலைவெறிப் பாட்டை ஊரே ஏன் ரசிக்கிறது என்று புரியவில்லை. இதைதான் ஜெனரேஷன் கேப் என்று கூறுகிறார்களோ என்று தெரியவில்லை. இன்னும் இதே மாதிரி எத்தனை பாட்டு வரப்போகிறதோ. என்னை மாதிரி உங்களில் யாருக்காவது கொலைவெறி பாட்டு பிடிக்காவிட்டால் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா,  மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.



கருத்து கந்தசாமி:

நண்பர்கள் கண்ணாடியைப் போன்றவர்கள், உங்களைத் தான் அவர்கள் பிரதிபலிப்பார்கள்.

ரசித்த வீடியோ:





Sunday, December 4, 2011

பிரபஞ்சப் புதிர்கள் #3

பிரபஞ்சப் புதிர்கள் இரண்டாம் பாகத்தில் நியூட்டன் வகுத்த விதிகளைப் பற்றி பார்த்தோம். இந்தப் பகுதியில் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். 

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விவாதங்கள் எப்போதும் நடந்துகொண்டிருகிறது. பலர் கடவுள் படைத்தது என்று நம்புகின்றனர். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் ஒரு பெரும் வெடிப்பின் காரணமாகத் தோன்றியது என்று நம்புகின்றனர். பெருவெடிப்பு என்று கூறுவதை விட பெரும் விரிவு என்று கூறிவது சரியாக இருக்கும். ஒரு பலூனை ஊதினால் எப்படி விரிவடைகிறதோ அதைப் போல இந்தப் பிரபஞ்சமும் விரிவடைந்துக் கொண்டிருகிறது. இனி பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன என்று பார்ப்போம்.




பிரபஞ்சம் விரிந்துகொண்டே போகிறது என்று வானவியல் வல்லுனர்கள் உணர்ந்தபோது, அதற்கு முன்பு அது சிறியதாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தனர். பல வானவியல் வல்லுனர்கள் பெருவெடிப்பு சுமார் பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது என்று கருதுகிறார்கள். சுமார் பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தப் பிரபஞ்சமே ஒரு குண்டூசியின் நுனி அளவை விட பல ஆயிரம் மடங்கு சிறிதாக இருந்திருக்கிறது. இது ஒருவித ஒருமை நிலை (ஆங்கிலத்தில் Singularity என்கிறார்கள்). இந்த நிலை ஏன் வந்தது, எப்படி வந்தது என்பதற்கு சரியான பதில் இல்லை என்பது தான் உண்மை. இந்த நிலையில் பிரபஞ்சம், நாம் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவு வெப்பமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. ஏதோ ஒரு காரணத்தினால் அது திடீர் என்று விரிவடையத் தொடங்கியிருகிறது. அந்த கணத்தில் தான் நம் பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழ்ந்தது. காலம், வெளி, பொருள் (matter) போன்றவைகள் பிறந்திருக்கிறது. பெருவெடிப்பு என்ற நிகழ்வை ஏதோ ஓன்று வெடித்து அதனால் பல பொருட்கள் விண்வெளியில் பறந்து சென்றதாக கருத்தில் கொள்ளக் கூடாது. பெருவெடிப்பிற்க்கு முன்னர் வெளி (space) என்பதே கிடையாது. அதற்கு முன்னாள் காலமும் (time) கிடையாது, ஆம் காலம் பிரபஞ்சம் விரிவடையத் தொடங்கிய போது தான் உருவானது. இந்தப் விரிவடைதல் தொடங்கி சில வினாடிகளில் பிரபஞ்சம் ஒரு நட்சத்திர மண்டலத்தின் அளவிற்கு விரிவடைந்து விட்டது. இப்படி விரிவடைதல் தொடர்ந்து கொண்டு அதே நேரத்தில் குளிரவும் தொடங்கியது. அந்தக் குளிர்ச்சி தான் நாம் வாழும் இந்த பூமி, நம் சூரிய மண்டலம், நம்மை சுற்றி அண்டவெளியில் உள்ள வாயுக்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்கள் போன்றவை உருவாகக் காரணம்.




சரி பெருவெடிப்புக் கொள்கை கேட்பதற்கு பரபரப்பாகத் தான் இருக்கிறது. இது உண்மையா, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகக் கருதப்படும் இந்த பெருவெடிப்பு உணமையிலேயே நிகழ்ந்ததா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பு நிகழ்ந்திருந்தாலும் அது மூன்று பெரிய தடயங்களை கொடுத்திருகிறது. 

முதல் தடயம், முக்கியமான தடயம். அது என்னவென்றால் பிரபஞ்சத்தின் இயக்கம் (motion). அதாவது பிரபஞ்சம் விரிந்துகொண்டே செல்லும் நிலை. பூமியில் இருந்து வெகு தூரத்தில் உள்ள நட்சத்திர மண்டலங்களின் வெளிப்படும் ஒளியை வைத்து அவை நம்மை விட்டு விலகிச் செல்கின்றன என்று வானவியல் வல்லுனர்களால் கூறமுடிகிறது. இந்த ஒளி விலகிச் செல்லும் விஷயத்தைப் பற்றி பின்னர் விவரமாக பார்க்கலாம்.

இரண்டாவது தடயம், பிரபஞ்சத்தில் அதிக அளவில் உள்ள ஹீலியம் தனிமம். பெருவெடிப்பை பொறுத்தவரை முதலில் தோன்றிய பொருட்கள் ஹீலியம் தனிமமும், ஹைட்ரஜன் வாயுவும் கொண்டதாக இருந்தன. ஒவ்வொரு ஹீலியம் அணுக்கும், பன்னிரெண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தன. பின்னர் 1995 -ல்  சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தொலை நோக்கி மூலமாக நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே உள்ள வாயுக்களை சோதித்தபோது சரியாக ஒவ்வொரு ஹீலியம் அணுக்கும், பன்னிரெண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தன. 

மூன்றாவது தடயம், பிரபஞ்சத்தில் உள்ள பின்னணி கதிர்வீச்சு (background radiation). பிரபஞ்சம் பிறந்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு நாளடைவில் குளிர்ந்து வெகுவாக குறைந்து இருந்தாலும், இன்றளவிலும் அந்த கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் உள்ளது. அறிவியல் உபகரணங்கள் மூலமாக விஞ்ஞானிகள் அதை உறுதிபடுத்தி இருக்கிறார்கள்.  வானவியல் அறிவியலைப் பொறுத்தவரை, மற்ற அறிவியல் துறைகளைப் போல சோதனைச் சாலைக்கு கொண்டுவந்து எல்லாவற்றையும் நிரூபிக்க முடியாது. நம் பிரபஞ்சத்தின் உள்ள தடயங்களின் மூலம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாக வருகிறது என்ற ரீதியில் தான் பல விஷயங்கள் நிரூபிக்க முடிகிறது. ஆனாலும் அறிவியல் வளர்ச்சியின் மூலமாக இன்று நிறைய விஷயங்கள் உறுதியாக நிரூபிக்கும் நிலைக்கு வளர்த்திருக்கிறது.

சரி இப்போது தொலைதூர நட்சத்திர மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஒளி நம்மை விட்டு விலகிச்செல்லும் விஷயத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் ஒளியை நிறமாலை மூலமாக சிவப்பில் இருந்து ஊதாவரை வேறு வேறு நிறங்களில் பிரிக்க முடியும். ஒளி நகரும் போது அலைகளாக பல்வேறு நிறங்களில் நகர்கிறது.  ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அலையளவு (wavelength) இருக்கிறது. சிவப்பு நிறத்தின் அலையளவு நீளமானதாகவும், ஊதா நிறத்தின் அலையளவு நீளம் குறைந்ததாகவும் இருக்கிறது. தொலைதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் ஒளியளைகளை நிறமாலையைக் கொண்டு சோதிக்கும் போது அவை சிவப்பு நிறத்தை நோக்கி நகர்கிறது. இதற்கு காரணம் அந்த நட்சத்திர மண்டலங்கள் நம்மை விட்டு விலகிசெல்வதால் தான். 



நட்சத்திர மண்டலங்கள் நம்மை விட்டு விலகிச்செல்லும் வேகம் அவற்றின் தூரத்தைப் பொருத்து அமைகிறது. அதாவது எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு வேகமாக நகர்ந்து செல்கின்றன. நீங்கள் இந்த வரிகளைப் படித்துகொண்டிருக்கும் நேரத்தில் தொலைதூர நட்சத்திர மண்டலங்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்கள் நம்மைவிட்டு நகர்ந்து சென்றிருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரபஞ்சப் புதிர்கள் மூன்று பாகங்கள் வரை வந்த பிறகும் ஒரு முக்கியமான நபரை பற்றி இன்னும் நான் கூறவில்லை. அவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஐன்ஸ்டீன் பற்றியும் அவருடைய கொள்கைப் பற்றியும் விரிவாக அடுத்தப் பகுதியில் காணலாம்.

தொடரும்...

முந்தய பகுதிகள்:
பிரபஞ்சப் புதிர்கள் #1

Thursday, November 24, 2011

திருமணச் சந்தை - 55 வார்த்தை சிறுகதை




என்னங்க இந்த இடமாவது நமக்கு அமையணுமேன்னு பதைபதைப்பா இருக்கு.


நம்ம கையிலே என்ன இருக்கு ரஞ்சிதம். நமக்குன்னு எங்கே அமையணும்னு இருக்கோ அங்கே தான் அமையும். இதோ போன் கூட அடிக்குது பாரு...அவங்கதான் கூப்புடுறாங்க.

ஹலோ, சொல்லுங்க சார். அ... அப்பிடியா.... சரி, சரி...வெச்சுடுறேன்.

இந்த இடமும் அமையலே ரஞ்சிதம். அவங்களுக்கு வரதட்சணையா நகையோ பணமோ கொடுக்கக்கூடாதுன்னு நம்ம பையன் போடுற கண்டிசன் பிடிக்கலையாம். பையனுக்கு எதாவது குறை இருக்குமோனு அவங்க உறவுகாரங்க சொல்றாங்களாம்.


--------------------------------------

பின் குறிப்பு:

சரி, கதையை ஒரு வழியாக ஐம்பத்தைந்து வார்த்தைகளில் முடித்துவிட்டேன். இனி என் கருத்து. இந்த கதையின் கருவில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. முற்போக்குவாதி போல பேசும் பல இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், வரதட்சணை வாங்காவிட்டால் தங்கள் மகனிடம் ஏதோ குறை உள்ளது என்று பெண்வீட்டார் பேசுவார்கள் எனக் கூறுகின்றனர். ஒரு சிலர் சாமர்த்தியமாக, உங்க பொண்ணு... உங்க சக்திக்கு ஏத்தா மாதிரி என்ன செய்யணுமோ செய்யுங்க என்று பெண்வீட்டாரின் சுயமரியாதைக்கு சவால் விடுவர். 

வரதட்சணை வாங்காமல் ஒருவனால் திருமணம் செய்ய முடியாதா. எங்களுக்கு வரதட்சணை வாங்க விருப்பம் இல்லைதான், ஆனா வாங்கலேன்னா எங்களையே இந்த சமூகம் சந்தேகபடுகிறது என்று பிள்ளை வீட்டார் கூறுவது உண்மையா இல்லை வெறும் சப்பைகட்டா.  நீங்களே சொல்லுங்கள்.


Friday, November 11, 2011

டமில் ஆசிரியர் - 55 வார்த்தை சிறுகதை


 
குமார் போன வாரம் நடத்தின திருக்குறளை சொல்லு பார்க்கலாம்.

இல்லே சார், தெரியாது. நான் போனவாரம் வரலே.

நீதான் யாரையாவது என்ன நடத்தினாங்கன்னு கேட்டு படிச்சிருக்கணும். மத்த பாடம் மாதிரி தமிழையும் நல்லாப் படிக்கலாம் இல்லே என்று கோபமாகக் கூறியபடி மேஜையின் மேல் ஒலித்த செல்போனை எடுத்தார்.

ஹலோ, சொல்லுங்க சார். மத்த டீச்சர்ஸ் எல்லாரும் கொடுத்துட்டாங்களா. ஊருக்கு போயிட்டு சண்டே தான் வந்தேன், எனக்கு தெரியவே தெரியாது. கண்டிப்பா நாளைக்கு மார்னிங் ரெடி பண்ணி கொடுத்துடுறேன்.

Saturday, November 5, 2011

மனிதம் தொலையவில்லை


உங்கள் வீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் மின்சாரம் இல்லாவிட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும். இன்றைய சூழ்நிலையில் பலர் பல் தேய்க்கும் பிரஷில் தொடங்கி, ஷேவிங் ரேசர், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெசின் என அனைத்திற்கும் மின்சாரத்தை உபயோகிக்கிறோம்.  நம்ம ஊரில் மின்வெட்டு என்பது தினந்தோறும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம். ஆனால் தினமும் சில மணி நேரம் இருக்கும் மின்தடை நாட்கணக்கில் நீண்டதாக எனக்கு நினைவில்லை. சரி அதுக்கு என்ன இப்போ,  புதுசா மின்சார வாரியத்துக்கு ஐடியா கொடுத்து நாட்கணக்கில் எங்களை விசிறியும் கையுமா உக்கார வெக்கறதுக்கு இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கனு நினைக்குறீங்களா. சாரி, அதுவல்ல என் நோக்கம், இதோ இனி நேரே விஷயத்திற்கு வருகிறேன்.

நாங்கள் வசிக்கும் வடகிழக்கு அமெரிக்க பகுதியில் சென்ற வாரம் பலத்த பனிப்புயல் அடித்து பல இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கு தெரிந்து கடந்த பதினோரு வருடத்தில் முதல் முறையாக இந்தப் பகுதியில் அக்டோபர் மாதத்தில், இந்த அளவு பனிப்புயல் அடித்திருக்கிறது. சாதரணமாக இலையுதிர்காலம் முடிந்து நவம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் இங்கு பனிப்பொழிவு தொடங்கும். ஆனால் இந்த முறை மரங்களில் உள்ள பச்சை இலைகள் கூட நிறம் மாறி விழ நேரம் கொடுக்காமல், எதிர் பாராதவிதமாக திடீர் என்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் ஆங்கங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்தை தடைபடுத்தியதோடு மட்டுமல்லாமல் மின்சாரமும் தடைபட்டது. குறிப்பாக கனக்டிகட் மாகாணத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு கிட்டத்தட்ட மாகாணம் முழுவதுமே மின்சாரம் இல்லாமல் போனது. அதிஷ்டவசமாக நாங்க வாழும் பகுதியில் மின்தடை ஏற்படவில்லை. ஆனால் பல நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் வாரம் முழுவதும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இங்கு குளிர் காலத்தில் மின்சாரம் இல்லாவிட்டால் உயிர் வாழ்வது கடினம். இதை மிகைபடுத்திக் கூறவில்லை. குளிர் காலத்தில் வீட்டில் மின்சாரம் இல்லாமல் ஹீட்டிங் வேலை செய்யவில்லை என்றால் வீட்டின் உள்ளே இருப்பது மிகுந்த சிரமம். இப்போது அதிக குளிர் இல்லை, ஆனால் குறைந்த பட்சம் -2 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 8 டிகிரி செல்சியஸ் என்றால் பார்த்துகொள்ளுங்கள். சில நேரங்களில், சரியான உடையை உடுத்திகொண்டால், குளிரைக் கூட பொறுத்துகொண்டு வீட்டில் இருந்துவிடலாம், ஆனால் சுடு தண்ணீர் இல்லாமல் இருப்பது கடினம். ஆம் மின்சாரம் இல்லாவிட்டால் சுடு தண்ணீரும் கிடையாது. சுடு தண்ணீர் இல்லாமல் பல் தேய்ப்பது, குளிப்பது போன்ற விஷயங்கள் கூட சிரமம் தான். இதிலும் சிறு குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம். பல வீடுகளில் சமையலுக்கு கூட மின்சார அடுப்பு தான். அதனால் சமைத்தும் சாப்பிட முடியாது. பணிபுயலின் தாக்கத்தால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாது, வீட்டின் உள்ளே கடும் குளிர், மின்சாரம் இல்லாமல் சமைக்க முடியாது அப்புறம் எப்படி ஐயா உயிர் வாழ்வது. இந்த சூழ்நிலையில் அரசும், மக்களும் போட்டி போட்டுகொண்டு ஒருவருக்கொருவர் உதவினர். இதைக் காணும் போது சற்று நெகிழ்சியாகத்தான் இருந்தது. இதோ நான் கடந்த ஒரு வாரத்தில் நான் கண்டவற்றை உங்களுடம் பகிர்கிறேன்.

முதல் நாள் புயல் ஓய்ந்ததும் ஆங்கங்கே பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. மின்சார கம்பங்களின் மேல் மரங்கள் விழுந்து ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மின்சாரம் தடைபட்டிருந்தது. பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்து முடிந்தால், அலுவலகம் வரவும் இல்லாவிட்டால் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் என்று செய்தி வந்தது. அலுவலகங்கள் இயங்கும் பெரிய ஊர்களில் மரங்கள் அதிகம் இல்லாததாலோ, மின்சார கம்பங்கள் அதிகம் இல்லாமல் ஒயர்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் இருந்தாலோ என்னவோ அங்கு மின்தடை ஏற்படவில்லை. பல அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை தேவைபட்டால் குடும்பத்துடன் வந்து அலுவலகத்தில் இருக்கும்படி கேட்டுகொண்டனர். அதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு, குளிக்கும் வசதி, குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள்கள் போன்ற அனைத்து வசதிகளும் அலுவலகங்களில் செய்து கொடுத்தனர். என்னதான் நாம் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுத்தாலும், இது போல உதவும் போது தான், நாம் வேலை செய்யும் நிறுவனத்தை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. இதைத் தவிர, அனைத்து ஊரிலும் அங்கு உள்ள மக்கள் தங்குவதற்கு பள்ளிகளில் தகுந்த வசதி செய்து தரப்பட்டது. அங்கு தங்குபவர்களுக்கு இலவசமாக உணவும் அளிக்கப்பட்டது. மற்றபடி வசதி படைத்தவர்கள் வீட்டில் ஜெனரேடர் வைத்து இருந்தார்கள். ஆனால் அவர்களும் பெட்ரோல் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும். அப்படி சிரமப்பட்டு பெட்ரோல் வாங்கி, ஜெனரேடர் மூலம் மின்சாரம் பெற்றவர்கள் கூட, அவர்கள் மட்டும் அந்த சுகத்தை அனுபவிக்காமல், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து தங்களுடன் தங்க வைத்துகொண்டனர். எனக்கு தெரிந்த அளவில் பொதுவாக அமெரிக்கர்கள் ப்ரைவசியை மிகவும் விரும்புவார்கள். மக்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கும் பஸ், ரயில் வண்டி போன்றவைகள் கூட எல்லா ஊர்களிலும் கிடையாது. நியூயார்க் போன்ற பெரிய நகரங்கள் இதற்கு விதிவிலக்கு. மற்றபடி, அனைவரும் தனித்தனியே  தங்கள் காரில் செல்ல மட்டுமே விரும்புவார்கள். இப்படிப்பட்ட மனநிலையை கொண்ட மக்கள், ஒரு பிரச்சனை என்று வந்ததும், சுயநலம் இல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களையும் அழைத்து ஒற்றுமையாக இருந்தததை கண்டு 'நல்லார் ஒருவர் உளரேல்' என்ற மூதுரை வரிகள் தான் நினைவுக்கு வந்தது. ஒரு சிலர் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி, ஹோட்டல் அறை எடுத்து தங்கிக் கொண்டனர். இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சூழ்நிலையை காரணம் காட்டி எந்த ஒரு வணிக நிறுவனமும் விலையை உயர்த்தக்கூடாது என்று அரசாங்கம் கடுமையாக எச்சரித்தது.  அதே போல, எந்த நிறுவனமும் விலை ஏற்றவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பல நிறுவனங்கள் தங்களால் முடிந்த சேவைகளை மக்களுக்கு இலவசமாக அளித்தனர். உதாரணத்திற்கு, ஒரு சலூன் கடையில் கூட 'ஹேர் வாஷ்' இலவசம் என்று போர்டு மாட்டி இருந்தார்கள். அடேய், எங்கிருந்து வருகிறது, இந்த ஒற்றுமை என்று சத்தம் போட்டு கேட்க வேண்டும் போல இருந்தது. இத்தனை சிரமம் மற்றும் மன உளைச்சலுக்கு இடையே அனைவரும் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று, அவரவர் வேலைகளை செய்தனர். சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு ஒவ்வொரு பகுதியாக சரி செய்யப்பட்டு இப்போது ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறது.  ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது தான் மனித இயல்பு. ஆனால் இந்த அவரச உலகில் சுயநலம் பெருகி அதை எங்கே தொலைத்து விட்டோமே என்ற எண்ணம் எனக்குள் பல நேரங்களில் தோன்றி இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வார நிகழ்வுகளில் நான் சந்தித்த பல மனிதர்கள் மூலம் அது தொலையவில்லை என்பதை உணர்ந்தேன்.

Wednesday, October 26, 2011

தீபாவளி - சைதாபேட்டை நினைவுகள்





அனைவருக்கும், என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பல வருடங்களாக மனதில் நான் மெல்ல ஆசைப் போட்டுகொண்டிருந்ததை இன்று எழுத்தில் கூற முயற்சிக்கிறேன். இவை அத்தனையும் இனிமையான நினைவுகள் அல்ல, என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதையை, நினைவில் பதிந்து என்னை விட்டு விலகாத நிகழ்வுகளை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

இதோ என் தீபாவளி நினைவுகள்....

எனக்கு அப்போது ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று சாதரணமாக மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் வயிற்று போக்கிற்கு அரசு மருத்துமனையில் சேர்த்த என் தந்தை இளவயதிலேயே காலமாகிவிட்டார். விவரம் புரியாத வயதில், நான் முதன் முதலில்  பார்த்த உயிர் இழப்பு அது.  வீட்டில் தந்தையின் சடலம் கிடத்தப்பட்டு சுற்றி அனைவரும் அழுது கொண்டிருந்தனர். அவ்வபோது எல்லோரும் அழுவதைப் பார்த்து நானும் புரியாமல் அழுதேன். அழாதேடா, அப்பா எங்கேயும் போகலே, இன்னும் கொஞ்ச நாளில் வந்திடுவாரு என்று என்னை சமாதனப்படுத்த யாரோ கூறிய பொய்யை நம்பி என் அம்மாவிடம் சென்று அழாதேம்மா என்று கண்ணை துடைத்துவிட்டேன். ஊரில் இருந்து வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகளுடன் வீட்டை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தேன். அப்படி விளையாடி கீழே விழுந்து மண்டையை வேறு உடைத்துகொண்டேன். என்னைத் தூக்கி கொண்டு டாக்டரிடம் ஓடியது ஒரு கூட்டம். தந்தையின் இழப்பின் வலி அந்த வயதில் எனக்கு புரியவில்லை. அப்போது அதைப் பற்றி பெரிதாக நினைக்காத போதும், இன்று வரை அந்த நினைவு என்னை சுற்றிச் சுற்றி வட்டமிடுகிறது. தந்தையின் முகம் என்றாலே அன்று உயிரற்ற சடலமாகப் பார்த்தது தான் என் நினைவில் உள்ளது. அந்த வகையில் நான் கொஞ்சம் பரவாயில்லை. என்னை விட இரண்டு வயது இளையவனான என் சகோதரனுக்கு தந்தையின் முகம் என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது. தந்தை காலமாவதற்கு சில மாதங்கள் முன்பு தான் பல்லாவரத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறி இருந்தோம். பல இடங்களில் கடன் வாங்கி மிகவும் சிரமப்பட்டு கட்டிய வீட்டில் அவரால் அதிக காலம் வாழ முடியவில்லை. அடுத்த சில வாரங்களில் சுற்றி இருந்த உறவுகள் ஒவ்வொருவராக சென்றனர். தந்தையின் நினைவுகள் மற்றும் கடன் தொல்லையினால் அங்கு இருக்க முடியாமல், அதற்கு முன்பு இருந்த சைதாபேட்டையில் வாடகை வீடு பார்த்துக் குடியேறினோம்.

அங்கு குடியேறிய சில நாட்களில் தீபாவளி திருநாள் வந்தது. தந்தை இல்லாத முதல் தீபாவளி, அம்மா ஒருபுறம் அழுது கொண்டிருக்க, என் மனமோ புதுத்துணி, பட்டாசு என்று அலை பாய்ந்துகொண்டிருந்தது. ஊரே கொண்டாட்டத்தில் இருக்கும் போது நாங்கள் சுற்றி யாரும் இல்லாமல் தனித்தீவில் விடப்பட்டது போல இருந்தது. அப்பொழுது தான் தந்தையில் இழப்பு லேசாகப் புரிந்தது. அது சுயநலம் தான், மறுக்கவில்லை. ஆனால் அந்த சுயநலம் தான், அந்த தீபாவளியை எனக்கு மறக்க முடியாத தீபாவளியாக மாற்றியது. வீட்டில் ஒரு ஓரத்தில் அழுது கொண்டே முடங்கிக் கிடந்த நேரத்தில், யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவை திறக்க சென்ற அம்மாவின் பின்னல் நானும் ஓடினேன். கதவைத் திறந்ததும் அங்கு ஒருவர் ஒரு பெரிய அட்டைப் பெட்டியை இரண்டு கைகளாலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். கௌரி பார்மசிலே இருந்து சேட் குடுத்து அனுப்பி இருகாரும்மா, ஸ்வீட், பசங்களுக்கு துணி, பட்டாசு எல்லாம் இருக்கு என்று அட்டைப் பெட்டியை வைத்துவிட்டு சென்றார். அம்மாவிற்கு கண்ணில் கண்ணீர், எனக்கோ மனதில் மகிழ்ச்சி. அவசரமாக பெட்டியை திறந்து பார்த்து பூரித்தேன். வித விதமான பட்டாசுகள், ஸ்வீட் மற்றும் புதுத்துணி.  எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன்.  இத்தனையும் கொடுத்து அனுப்பிய, கௌரி பார்மசி சேட் வேறு யாரும் இல்லை, என் தந்தையின் நெருங்கிய நண்பர். மார்வாடி இனத்தை சேர்ந்த சேட் கண்டிப்பாக திருக்குறள் படித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் குறிப்பறிந்து காலத்தினால் செய்த உதவி அது. அன்று அந்த தீபாவளியில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன் பிறகு வசதியும் வாய்ப்பும் பெருக, எத்தனையோ தீபாவளி சிறப்பாக கொண்டாடினாலும், அவை எதுவும் என் நினைவில் அந்த அளவு நிற்கவில்லை. அந்த ஒரு துயரமான நேரத்தில் கிடைத்தப் புது துணிக்கும், பட்டாசுக்கும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று நினைக்கும் போது இப்போது சற்று வெட்கமாக இருந்தாலும், அந்த நிகழ்வை எங்காவது பதிய வேண்டும் என்று பல வருடங்களாக என்னை உறுத்திக் கொண்டிருந்ததின் விளைவே இந்த பதிவு. 


Sunday, October 23, 2011

கடன் ________ நெஞ்சம்போல (55 வார்த்தை சிறுகதை)

என்னங்க இப்படி சொல்றீங்க, நம்ம பொண்ணோட தலை தீபாவளி செலவுக்கு பணத்துக்கு என்ன பண்றது.

அதான் தெரியலே... கட்டாயம் கொடுக்குறேன்னு சொன்ன ராகவனை பிடிக்கவே முடியலே, நான் நேர்லயே போய் கேட்குறேன்.

சில மணி நேரத்தில் ராகவன் வீட்டில் - இப்படி திடீர்னு இல்லேன்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன் ராகவா, என் பொண்ணு தலை தீபாவளி செலவுக்காக லோன் போட்டு வெச்சுருந்த பணத்தை, உன் அவசரத்தேவைக்காக கொடுத்தேன். இப்போ நான் திருப்பி கேட்கும் போது கொடுக்கலேனா எப்படி...

பின் குறிப்பு: தலைப்பில் உள்ள ____________ -ஐ இப்போது உங்களாலேயே நிரப்பிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...